புதன், 5 அக்டோபர், 2022

அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 8

அத்தியாயம் : 8

பவன் வேகமாக இயங்கு ஏணியின் அருகில் செல்வதை தீவிதா பார்த்துவிட்டு, "லஷ்மீ... பவன் கோவிச்சிட்டுப் போறான்" எனக் குரல் கொடுத்துவிட்டு அவனை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

 

அனைவரும் பவனை பிடிக்க நகர்ந்தார்கள். அவனோ இயங்கு ஏணிக்குள் நுழைந்துவிட்டான்.

 

இன்னொரு இயங்கு ஏணிக்குள் மற்றவர்கள் நுழைந்தனர், அனைவரும் ஒன்றாக முதல் தளத்தை அடைந்தனர்.

 

இயங்கு ஏணியில் இருந்து வெளி வந்த லஷ்மீகா வேகமாக வாசலுக்கு விரைந்து கொண்டிருந்த பவனை பிடித்து நிறுத்தி, "ஏன்டா இப்படி பண்ற?" என்று கோபமாகக் கேட்டாள்.

 

பதில் சொல்லாது புருவத்தை சுருக்கியபடி, வேறொரு பக்கம் திரும்பி நின்றான் பவன். 


அவனை அப்படி பார்க்க சிரிப்பாகவும், அவனது சற்று பருமனான உருவத்திற்கு அந்தச் சின்ன கோபம் அவனை மேலும் அழகாக எடுத்துக் காட்டியது.


"என் கிட்ட சொல்லாம எங்கேயும் போகக் கூடாதுன்னு சொல்லித் தானே கூட்டிட்டு வந்தேன்" என்று லஷ்மீகா சொல்லிக் கொண்டிருக்க, 


அச்சமயம், பல்கடையின் பிரதான கதவு மூடப்பட்டது. அனைவரின் கவனமும் உடனே அங்குத் திரும்பின. அந்த இடமே சலசலக்க ஆரம்பித்தது. 


"சம்திங் ராங்டி என்னமோ நடக்கப் போகுது" என்றாள் தீவிதா.

 

"வாடிக்கையாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுக்கோள். சில மணி நேரங்களுக்கு மட்டும் இந்த இடத்தில் ஒன் பார்ட்டி போர் தடை விதிச்சிருக்காங்க. தயவு செஞ்சு கொஞ்ச நேரத்துக்கு பொதுமக்கள் கடையினுள்ளே இருந்து அமைதி காத்து ஒத்துழைப்பு தரும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்" என்று, பல்கடை அங்காடியினுள் இருந்து ஒலிப்பெருக்கி மூலம் நிர்வாகத்தினர் அறிவிப்பு கொடுத்தனர்.

 

"நாம கூட்டத்துக்குள்ள நிக்க வேணாம். வாங்க, அங்க போய் நிப்போம்" என்று தர்ஷா அழைக்கவும், அனைவரும் ஒன்றாக ஒரு இடத்திற்குப் போய் நின்றார்கள்.

 

அங்கிருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக என்ன நடக்கப் போகிறது என்று ஆர்வமாக வெளியே எட்டிப் பார்த்தனர். 


ஆங்காங்கே காவல் துறையினர், நடந்துக் கொண்டிருந்தனர். அவர்களையெல்லாம் லஷ்மீகா தன் கூரிய விழிகளால் கவனித்துக் கொண்டிருந்தாள். 

 

காவலர்களின் மத்தியில் வாகனம் ஒன்று வந்தது. 


அதில் இருந்து ஆறடி உயரம், உயரத்திற்கேற்ற எடை, கச்சிதமாக அணிந்திருந்த காக்கிச்சட்டை உடை என்று மொத்ததில் ஆணழகன் பட்டத்திற்கு தகுதி உடையவனாக இருந்த ஒருவன், வாகனத்தில் இருந்து கீழிறங்கினான். அவனைக் கண்டதும் மற்ற காவலர்கள் முன் வந்து சல்யூட் செய்தனர். 

 

அவர்களை பார்த்து கொண்டிருந்த லஷ்மீகா, 'இவன்... இவன்' எனத் திக்கித் திக்கிப் பேச்சு வராமல் தவித்தாள். ஏனெனில் அவள் தினமும் கனவில் கண்ட காவலனை ஒத்து இருந்தான் அவன். 


அவனால் லஷ்மீகாவிற்குள் சொல்ல முடியாத உணர்வு ஏற்பட, தன் அருகில் இருக்கும் தோழிகளிடம் அவனைப் பற்றி சொல்ல நினைத்து... அதனை சொல்ல பேச்சு வராது தவித்தாள். 


ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில் மீண்டும் மீண்டும் அவனை மொத்தமாக கண்களால் அளந்துக் கொண்டிருந்தாள்.


"யாராவது பொலிட்டிஷியன் வர்றாங்களா?" என்று இலியா சொல்லவும், 


"அப்படியா இருக்கலாம்" என்றாள் ஐஸ்வர்யா. 


"டான்கி!!! எனக்குத் தெரில என்னைத் தூக்கு" என்று, சந்தோஷத்தில் சிலை போல அசையாது நின்றிருந்த லஷ்மீகாவின் கையை அசைத்தான் பவன். 


அவனது தொடுதலில் அவன் புறமாய் சட்டென்று திரும்பியவள், கைகளை உயர்த்தியபடி நின்றிருந்தவனை கோபமாக தூக்கி இடையில் வைத்துக் கொண்டு, ஜன்னலை பார்த்தாள். அவளது கனவில் வந்த காவலனை காணவில்லை. 

 

அவன் அந்த இடத்திலிருந்து அகன்று விட்டான் போலும், ஆளை காணவில்லை. லஷ்மீகாவிற்கு ஏமாற்றமானது. 


மற்றொரு ஜன்னல் அருகே வேகமாக வந்து அவனைத் தேடினாள். காணவில்லை, ஆனாலும், அவனைத் திரும்ப பாரத்திட வேண்டும் என்று மனதிற்குள் தவித்தாள்.

 

அவனோ... கைபோனில் வந்த அழைப்பை ஏற்ற படி, தனியாக நடந்தான்.


"சார்!!! ஆள் வந்தாச்சு" என்று, மறுபக்கம் அச்செய்தியை கேட்டதும் காதில் மாட்டியிருந்த காதொலிப்பானை அமர்த்திவிட்டு, கண்களில் மாட்டியிருந்த கண்ணாடியை கழற்றி அணிந்திருந்த சட்டைபட்டனின் இடையே சொருகிவிட்டு, கைகளை பின்னால் கொண்டு சென்று, சட்டையின் இடையே மறைத்து வைத்திருந்த ‘கன்’னை எடுத்து நேராக நீட்டினான்.


கண்களைச் சுருக்கி துப்பாகியில் இருந்த லென்ஸ் வழியாக, தனக்கு எதிரே தெரிந்த கட்டிடத்திற்குள் பார்வையைச் செலுத்தினான். தனது பார்வை வட்டத்திற்குள், தான் குறி வைத்த நபரின் முகம் தெறியவும், நொடி நேரம் தாமதிக்காது, ஸ்டிக்கரை அழுத்தினான் சித்தார்த்தன் ஐபிஎஸ். 


எதிரில் இருந்த ஆள் மயங்கி சரிவதை கண்டவன், துப்பாக்கியை இருந்த இடத்திலே மறுபடியும் வைத்துவிட்டு, காதொலிப்பானை அழுத்தி உயிர்ப்பித்தான்.


"சார்... சார்... குட் அட்டெம்ப்ட், ஹூ இஸ் டெட்" என்று மறுபக்கம் கேட்டது.

 

தன்னுடைய குறி என்றும் தவறாது என்ற பெருமிதத்தில், "டேக் த பாடி அவே!" எனக் கூறிவிட்டு, தனக்கென அரசாங்கம் கொடுத்த வாகனத்தின் அருகில் வந்தான்.

 

அப்போது அவனைப் பார்த்து விட்டாள் லஷ்மீகா. தொலைந்த நிம்மதி மீண்டும் வந்தடைந்த பெரும் சந்தோஷத்தில், தோழிகளை அழைத்து அவனைக் காட்டினாள்.


"வாவ்!!! நிஜமாவே இந்த போலீஸ் ஆபிஸர் சூப்பர்டி. அப்படியே படத்துல பார்க்கிற ஹீரோ மாதிரி இருக்கார்டி" என்று முதல் ஆளாகக் கூறினாள் இலியா.

 

அவனது வாகனம் கண்களை விட்டு மறையும் வரை, அனைவரும் அவனை ரசித்துப் பார்த்தார்கள்.


அவனோடு மற்ற காவலர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகரவும், நிலைமை மறுபடியும் சீரானது. பல்கடை அங்காடியின் கதவும் திறக்கப்பட்டது.

 

"ஹேய் கங்கிராட்ஸ்!!!" என்றாள் ஐஸ்வர்யா.

 

தீவிதாவோ, "உன் ஆளு சூப்பர்டி" என்றாள்.

 

"சான்ஸே இல்ல" என்று அவளது கைப்பிடித்து உலுக்கினாள் தர்ஷா.


ஒவ்வொருவரும் லஷ்மீகாவை கட்டிப்பிடித்து, தங்களது வாழ்த்தையும், சந்தோஷத்தையும் வெளிப்படுத்தினார்கள்.


அவர்கள் அனைவரையும் இடையில் கை வைத்த படி, ஒரு திணுசாக நோக்கிக் கொண்டிருந்தான் பவன்.

 

அவனை எதார்த்தமாக பார்த்த லஷ்மீகா, "ஹே... வாங்கடி சினிமாவுக்குப் போகலாம்" என்று பவனின் அருகில் சென்று அவனது கண்களை கைகளால் மறைத்துவிட்டு, அப்பறமா பேசலாம் என்று அனைவரையும் பார்த்து சைகையில் கூறினாள்.

 

அவள் எதற்காகக் கூறுகிறாள் என்று புரிந்துக் கொண்ட தோழிகள், "டைம் இன்னும் இருக்கு. சினிமா பார்த்திட்டே போலாம்" என்றனர்.


தன் கண்களிலிருந்து தமக்கையின் கையை வம்படியாக எடுத்துவிட்டவன், அவளைப் பார்த்து, "என்னமோ எனக்குத் தெரியாம உங்களுக்குள்ளே பேசிக்கறீங்க? கண்டு பிடிக்கறேன்" என்று விரல் நீட்டி அனைவரின் முன்னாலும் கூறினான் பவன்.

 

"ஹே குட்டி பையா போலீஸ் தான்டா திருடனைக் கண்டுப்பிடிக்கணும். நீ லாயர் அதுனால எங்களுக்கு சப்போர்ட் தான் பண்ணனும்" என்றாள் தீவிதா.


"இல்ல நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன்"


"லஷ்மீ பவன் சொல்றதை கேட்டீயா?" 


பேசிக் கொண்டே அனைவரும் நகர்ந்தார்கள். 


"அவன் சப்போர்ட் பண்ண மாட்டான்னு எனக்கே தெரியுமே" என்றாள் சலிப்புடன் லஷ்மீகா. 

 

அனைவரும் அருகில் இருந்த திரையரங்கிற்குள் சந்தோஷமாக பேசியபடி நுழைந்தார்கள். 


சில நொடியில் படம் ஒலிபரப்பப்பட்டது.

 

திரையில், காக்கிச்சட்டை உடையணிந்திருந்த நடிகர் சூர்யா வந்ததும், உடனே லஷ்மீகாவை திரும்பிப் பார்த்தனர் தோழிகள்.

 

உடனே தானும் தமக்கையை பார்த்தான் பவன்.

 

அவளோ முகம் நிறைய சந்தோஷத்துடன், தற்சமயத்திற்கு முன்பு நேரில் பார்த்த காவலனை படத்தில் வரும் நாயகனாகவும், கதையில் இடம் பெறும் நாயகியை தானாக பாவித்து படத்தைப் பார்க்க ஆரம்பித்தாள் லஷ்மீகா.

 

திரைப்படம் முடிந்ததும், அனைவரும் ஒன்று போல வெளியே வந்தார்கள்.


"ஹே சாப்பிட்டுட்டுப் போலாமா? எனக்கு மேரேஜ் பிக்ஸானதுக்கு, நான் ட்ரீட் கொடுக்கிறேன். அஜி, எனக்கு அமெளண்ட் போட்டு விட்டான்டி" என்றாள் இலியா.

 

"வாவ்!!! இப்பவே ப்யூச்சர் ஹஸ்பெண்ட்டை முந்தானைல முடிஞ்சு வச்சிட்ட" எனச் சொல்லி சிரித்தாள் தர்ஷா.

 

இலியாவின் கன்னத்தை வலிக்காத மாதிரி பிடித்துக் கொஞ்சியவள், "ஹே எனக்கும் சொல்லிக் கொடுடி" என்றாள் ஐஸ்வர்யா.


"அவ எப்படி அவ ஆளை மடக்கினானு எனக்குத் தெரியும்டி. மெசேஜ் பண்ணியே கவுத்திருப்பா" என்றாள் அவளை மார்க்கமாகப் பார்த்த படி, லஷ்மீகா.

 

"அது என்ன மெசேஜ்னு எங்க கிட்டலாம் இரண்டு பேரும் சொல்ல மாட்டேங்கிறிங்க?" என தீவிதா கேட்கவும், 

 

சிரித்தபடி, "அது ரொம்ப ரொமாண்டிக்கான மெசேஜ்டி" என்றாள் லஷ்மீகா. 


"ஹே போதும் வாங்க சாப்பிடுவோம்" என்று பேச்சை மாற்றிய இலியா, முதல் ஆளாக பவனை இழுத்துக் கொண்டு உணவகத்திற்குள் நுழைந்தாள்.


பவன் நகர்ந்ததும், "லஷ்மீ...! லஷ்மீ… இன்னைக்கு பார்த்த அந்த போலீஸ் ஆபிஸர் தான், உன் ட்ரீம் பாயா?" சந்தோஷத்தில் அவளின் கைப்பிடித்து உலுக்கிய படி கேட்டாள் ஐஸ்வர்யா.

 

"ஆமாடி!!! சான்ஸே இல்ல அவனே தான். என்னால ஹண்ட்ரடு பெர்சன்ட் சொல்ல முடியும். என் கண்ணுக்குள்ள இருந்த போலீஸ் ஆபிஸர், அவனே தான்டி. அதே ஹைட், வெயிட், கலர், முஸ்டாச். அவன் கைல கூட, பிளாட்டினம் பிரேஸ்லெட் போட்டிருந்தான். இவ்வளவு நாளும் என் மனசுல இருந்த உருவதிற்கும் அவனுக்கும் அப்படியே பொருந்துது. துளிகூட வித்தியாசமில்ல. அவனை பார்க்கும் போது யாரையோ பார்க்கிற மாதிரி பீல் ஆகல" என்று சந்தோஷத்தில் சற்று துள்ளிக் குதித்தாள் லஷ்மீகா.

 

அவளைப் பிடித்து நேராக நிறுத்திய ஐஸ்வர்யா, "ஹே… இது பப்ளிக் ப்ளேஸ்டி. நீ பாட்டுக்கு இப்படி டான்ஸ் ஆடிட்டு இருக்க. பார்க்கறவங்க, உன்னை பைத்தியம்னு நினைக்கப் போறாங்க"

 

"நினைச்சா நினைச்சுட்டுப் போகட்டும். பவன் இருக்கான்னு தான் கொஞ்சம் அடக்கி வாசிக்கறேன்டி. இல்லன்னா எனக்கு இருக்கிற சந்தோஷத்துக்கு..." என்று ஐஸ்வர்யாவின் கன்னத்தைப் பிடித்துச் செல்லம் கொஞ்சினாள் லஷ்மீகா.

 

"நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல. எப்படி நீ கற்பனை பண்ணின மாதிரியே ரியலா? சான்ஸே இல்ல. ரியலி நாங்க ஹேப்பீ!" என்றாள் தீவிதா. 

 

"லஷ்மீ!!! ஒரு பாயிண்ட்ட நீ யோசிக்க மறந்துட்ட, அந்த போலீஸ் ஆபிஸர் லஞ்சம் வாங்காதவரா நேர்மையான ஆளான்னு தெரியலையே? அதை யோசிச்சியா?" நினைவு வந்தவளாகக் கேட்டாள் தர்ஷா.

 

"அவன் யார்னு கண்டுபிடிச்ச பிறகு… அவனோட கேரக்டரை பத்தி கண்டு பிடிக்கிறதென்ன கஷ்டமா?" என்று பெருமையாக கைபோனை காட்டிய படி கூறினாள் லஷ்மிகா.


"ஹே!!! அதுக்குள்ள ஆபிஸரை பத்தி கண்டு பிடிச்சிட்டீயா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் ஐஸ்வர்யா.

 

"ஷாப்பிங்மாலுக்கு வெளிய ஒரு லேடி போலீஸ் இருந்தாங்க. அவங்க கிட்ட போன்ல அவனை நான் போட்டோ எடுத்திருந்தேனா அந்த போட்டோவை காட்டி கேட்டேன். அவங்க தான் அவனை பத்தி சொன்னாங்க. 


இன்டர்வெல்ல அவனைப் பத்தி கூகுள்ல பார்த்தேன். புதுசா நம்ம ஊருக்கு வந்திருக்கிற ஐபிஎஸ் ஆபிஸர். வந்து ஒரு வாரம் ஆகுது. பெயர் சித்தார்த்தன். இந்த ஒரு வாரமா நமக்கு இன்டர்வியூ இருந்ததால, போலீஸ் ஆபிஸர்ஸ் பத்தி நெட்ல சேர்ச் பண்ணல. எனிவே, இ... இன்னைக்கு எனக்கு இருக்கிற சந்தோஷத்துக்கு ஏதாவது செய்யணும்னு தோணுது" என்று உணவகத்தை நோக்கி சந்தோஷமாக நடக்க ஆரம்பித்தாள் லஷ்மீகா.

 

சிரிப்புடன் அவளை மற்றவர்கள் பின் தொடர்ந்தனர். 

 

உணவகத்திற்குள் தமையன் அருகில் அமர்ந்த லஷ்மீகா, "ஹே மங்கி.. உனக்கு என்ன வேணுமா வாங்கிக்கடா" எனக் கூறிவிட்டு அவனின் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

 

உடனே தன் கன்னத்தை துடைத்து கொண்ட பவன், "டாங்கி!!! நீ சரியில்ல. எனக்கு வேற முத்தம் கொடுக்கற... உன்னை வேற உன் ப்ரெண்ட்ஸ் அடிக்கடி பார்த்துச் சிரிக்கறாங்க. எனக்குத் தெரியாம என்னவோ பண்றீங்க? என்னை ஏமாத்துறீங்க? ஒழுங்கா நீயே சொல்லிடு. நீயே சொல்லிட்டா, நமக்குள்ளையே என்னென்னு பேசிக்கலாம். நானா கண்டுப்பிடிச்சா, டாடி வரை ந்யூஸ் போகும் வசதி எப்படி?" என்று தமக்கையை மிரட்டினான்.

 

அதில் மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரிக்க, "அப்புறம் என்ன லஷ்மீ!!! விஷயத்தை இப்பவே உன் தம்பிகிட்ட சொல்லிடு. உன் டாடி கிட்ட போட்டுக் கொடுத்திடப் போறான்" என்று உளறினாள் இலியா.


"வெரி குட் இலியா சிஸ்டர். நீங்க உண்மையைச் சொன்னதுக்கு. நான் பேசாம உங்களுக்கு தம்பியா பிறக்காம போயிட்டேன். அப்படி பிறந்திருந்தா, ஈசியா உண்மையெல்லாம் கண்டுபிடிச்சிடுவேன்" என்று பெருமையாக தன் சட்டை காலரை தூக்கிவிட்டு கொண்டான் பவன்.

 

"ஆமா!!! இந்தக் கூட்டத்திலே இலியாவை மட்டும் தான்டா நீ ஈசியா ஏமாத்த முடியும்" என்றாள் ஐஸ்வர்யா.

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *