வெள்ளி, 30 செப்டம்பர், 2022

அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 6

 அத்தியாயம் : 6


தன்னைத் தேடி விகரம் வந்துவிட்டான் என்று நினைத்து பார்த்து சந்தோஷம் அடைந்த ஐஸ்வர்யா, சிறிது பதட்டத்துடனும், நம்ப முடியாத நிலையிலும், "எ.. என்ன சொல்றிங்க? உண்மையைத்தான் சொல்றிங்களா" என்று அவனிடம் தயங்கியபடி கேட்டாள். 


"ஜில்லு!!!! நிஜமா நான் இப்ப உங்க காலேஜ் வெளிய தான் நிக்கிறேன். உங்க காலேஜ் லோகால சுயஒழுக்கம், தனி உரிமை கொள்கை, சர சர... சார" எனக் கல்லூரியின் சுவற்றில் தமிழில் எழுதியிருந்ததை வாசிக்க  திணறினான். 


அவன் சொல்லும் விடயம் உண்மையாக இருக்கவும், "ஓகே... ஒகே இரு.... இருங்க நான் வர்றேன்" என்று அழைப்பை துண்டித்தவள், தோழிகளை கேள்வியுடன் நோக்கினாள் ஐஸ்வர்யா.


"என்ன? எங்களை ஏன் பார்க்கற? போய் உன் ஆளைப் பார்த்திட்டு வாடி" என்றாள் லஷ்மீகா.


"இல்லடி!!! நீங்களும் கூட வாங்க. நான் என்னைக்கு நீங்க இல்லாம எங்கேயும் போயிருக்கேன். என் பேரண்ட்ஸ விட, உங்க கூடத் தான் அதிகமா வெளிய சுத்துவேன். உங்க கூடத்தான் அதிகம் நேரம் இருக்கேன். எனக்கு... எல்லாமே நீங்க தான?" என்று அனைவரிடமும் காலில் விழுகாத குறையாக பேசினாள். 


"ஹே... இப்ப இப்படி தான்டி சொல்லுவ. ஆனா, நாளைப் பின்ன உன் ஆளு கூடத் தான் நீ சுத்துவ. எங்களையெல்லாம் நீ மறந்தாலும் மறந்திடுவ. நாங்க உன்னைப் போல எத்தனை பேரை பார்த்திருக்கோம்" என்றாள் தீவிதா.


"நோ நோ நோ எனக்கு ஃப்ரெண்ட்ஷிப் தான் முதல்ல. அடுத்து தான் ஹஸ்பெண்ட் சைல்டு எல்லாமே... ஸோ வாங்கடி" என்று ஒவ்வொருவரின் கைப்பிடித்து எழ வைத்தாள் ஐஸ்வர்யா.


அவளுக்காக பாவம் தோழி என்ற பாசத்துடன் அனைவரும் அவளுடன் வெளியில் சென்றனர். 


விக்ரம்... தனது நான்கு சக்கர வாகனத்தின் மீது ஒய்யாரமாக சாய்ந்து நின்றிருந்தான். 


கண்களுக்கு கருப்பு கலர் கண்ணாடி அணிந்து... இறுக்கிப் பிடித்த கருப்பு கலர் சட்டையுடன் பார்க்க, ஒரு சினிமா நடிகரைப் போலக் காட்சிக் கொடுத்தான்.


"ஐஸ்... உன் ஆளு சூப்பர்டி" என்றாள் தீவிதா.


"அது மட்டுமல்ல இப்பவே உன் மேல இவ்வளவு லவ்வா இருக்கான்" என்றாள் தர்ஷா. 


அனைவரும் ஐஸ்வர்யாவிடம் கிசுகிசுத்தபடி, அவனருகில் சென்றார்கள்.


"ஹாய்" என்று ஐந்து பேரையும் பார்த்துக் கை அசைத்தான் விக்ரம்.


"ஹாய் ப்ரோ நைஸ் டு மீட் யு" என்று பொதுப்படையாகக் கூறினாள் லஷ்மீகா.


அவளிடம் சன்னமாக தலையை ஆட்டியவன் மறுநொடி கண்ணாடியைக் கழற்றிய படி, "என்ன மேடம்!!! நான் என்ன உங்களை கடத்திட்டா போயிடப் போறேன்? துணைக்கு உங்க ஃப்ரெண்ட்ஸை அழைச்சிட்டு வந்திருக்கிங்க?" என்று ஐஸ்வர்யாவை பார்த்த படி, சிரித்த முகமாக கேட்டான் விக்ரம்.


"ஆமா ப்ரோ.... ஐஸ்கிரீம் சிலைபோல இருக்கிற எங்க ஐஸ்வர்யாவை நீங்க மட்டுமில்ல, சான்ஸ் கிடைச்சா யாருன்னாலும் கடத்திட்டு போனாலும் போயிடுவாங்க. அதனால, நாங்க படை வீரர்கள் போலக் கூடவே வந்திருக்கோம்" எனச் சிரித்த படி ஐஸ்வர்யாவிற்கு பதிலாக தர்ஷா பதில் கூறினாள்.


விக்ரமோ, "நானும் இந்த ஐஸ்கிரீம் சிலையை... சீக்கிரம் என் வீட்டுக்கு கடத்திட்டுப் போலான்னு தான்  நினைக்கறேன் சிஸ்டர்" என்றான். அவனது பார்வை ஐஸ்வர்யாவிடமே நிலைத்திருந்தது. 


அதனை அறிந்த தீவிதா, தலைகுனிந்த படி நின்றிருந்த ஐஸ்வர்யாவின் முகவாயை பிடித்து நிமிர்த்தி, "ஹே ஐஸ்!!! உன்னைப் பொண்ணு பார்க்கும் படலம் இங்க நடந்திட்டு இருக்கு. இதோ மாப்பிள்ளை வந்திருக்காங்க. எங்களுக்கெல்லாம் மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு. உனக்குப் பிடிச்சிருக்கான்னு பார்த்துச் சொல்லு?" என்று அமைதியின் சொரூபமாய் மாறிப் போய் நிற்கும் ஐஸ்வர்யாவை கேலி செய்தாள்.


ஐஸ்வர்யாவை தவிர ஏன் விக்ரமே அவளது கேலி பேச்சில் சிரித்துவிட, "ஹே சும்மா இருடி" என்று தோழியை அதட்டினாள்.


"ஓகே.... ஓகே... நான் கிளம்புறேன். ஜில்லுனு அழைக்க ஜி…” என்று வார்த்தையை விட்டவன், மற்றவர்கள் இருப்பதால், ஐஸ்வர்யா என்று மாற்றினான். அதனை தோழிகள் கவனித்தனர். ஆனால் அவனிடம் அவனது ஜில்லு என்ற அழைப்பை பற்றி காட்டி கொள்ளவில்லை. 


“ஈவினிங் எத்தனை மணிக்கு உன்னை பிக்அப் பண்ண வரணும்னு எனக்கு வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பு" என்றான்.


"நா... நான் ஸ்கூட்டியில வந்திருக்கேன்" எனத் தயங்கிய படி  கூறினாள் ஐஸ்வர்யா. 


"அதுனால என்ன? என் ட்ரைவரை உன் ஸ்கூட்டியை எடுத்துட்டு வரச் சொல்வோம். தட்ஸ் ஆல்” என்று தோளைக் குலுக்கினான். 


ஐஸ்வர்யாவோ யோசித்தவாறு இருக்க... 


“பை... சிஸ்டர்ஸ் பை" என்று அனைவரிடமும் கையை ஆட்டிவிட்டு  வாகனத்தினுள் அமர்ந்தான். உடனே வாகனம் நகர்ந்தது.


"ஹே பார்க்க நல்லா இருக்கான். நல்லா பேசறான். குயிக்கா ப்ராப்ளத்தை சால்வ் பண்றான். நல்ல பிஸ்னஸ் ஃபீல்டில் இருக்கான். ஸோ... வீட்டுக்குப் போனதும், உன் மம்மி, டாடிகிட்ட ஆர்க்யூ பண்ணாம, மேரேஜிற்கு எஸ் சொல்லிடு. அது தான் உன் ப்யூச்சருக்கு நல்லது"  அறிவுரை வழங்கினாள் லஷ்மீகா.


அனைவரின் நேர்மறையான வார்த்தையில் ஒரு கணம் விக்ரமை தனது மணக்கண்ணில் நினைத்து பார்த்துவிட்டு, "எனக்கும் அவனை முதல்ல பிடிக்கல. ஆனா இப்ப பிடிச்சிருக்கு" என்று மெல்லிய வெட்க புன்னகையுடன் கூறினாள் ஐஸ்வர்யா. 


உடனே அவனைவரும் அவளை கேலி செய்யும் விதமாக 'ஓஹோ' என்று ஒன்றாக கத்தினார்கள். 


"நம்ம க்ரூப்ல இலியா, ஐஸூக்கு அவங்க ஆசைப்பட்ட மாதிரி ஹஸ்பெண்ட் அமைஞ்சிடுச்சு. நமக்கு எப்படி வாய்க்கப் போதோ? ஆனா பயமாவும், கொஞ்சம் ஈகராவும் தான் இருக்கு" எனச் சொல்லி சிரித்தாள் தர்ஷா.


"ஹே அலையாதடி" என்று தீவிதா அவளை கிண்டல் செய்யவும்,


"லஷ்மீக்கு எப்படிப்பட்ட ஹஸ்பெண்ட் வரணும்னு அவ இன்னும் சொல்லவேயில்லையே?" என்று யோசித்துக் கொண்டிருந்த லஷ்மீகாவை கைக்காட்டினாள் இலியா.


"அவளுக்கு அவங்க டாடி ஃபாரின் மாப்பிள்ளையை தான் பார்ப்பார்னு நினைக்கறேன்" என்று ஒரு யூகத்தின் பேரில் கூறினாள் தீவிதா.


"ஆமாடி!!! சிங்கப்பூர்ல தான், ஒரு மாப்பிள்ளை இருக்கிறதா லாஸ்ட் டைம் வீட்ல பேசிக்கிட்டாங்க. ஆனா…" என்றவள் அத்தோடு பேச்சை நிறுத்திட்டு அனைவரையும் யோசனையுடன் பாரத்தாள். தன் மனதில் உள்ளதை அவர்களிடம் சொல்வோமா? வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள். 


"ஆனா... உனக்கு எங்களையெல்லாம் விட்டுப் போக மனசில்ல. அப்படித் தான?" எனக்  கேட்டாள் ஐஸ்வர்யா. 


அதற்கு லஷ்மீகா பதில் சொல்வதற்குள்,


"ஹே விடாது கருப்பு உன்னை பின் தொடர்றது போல, இலியா அங்க தானடி மேரேஜ் ஆனதும் செட்டில் ஆகப் போறா, அப்புறம் என்ன? அவ கூட நல்லா என்ஜாய் பண்ணு" என்று நினைவு வந்தவளாக கூறினாள் தீவிதா. 


உடனே செல்லமாக அவளது கன்னதை கிள்ளினாள் இலியா.


"நான் அப்ராடு எல்லாம் போகமாட்டேன்ப்பா. இங்க... நம்ம கன்ட்ரீல எந்த ஸ்டேட்னாலும் பரவாயில்ல. வெல் டேலண்ட்டான ஒரு போலீஸ் ஆபிஸரை தான் மேரேஜ் பண்ண நினைக்கறேன்" என்று, அவ்வேளையில் தோழிகளிடம் மனம் திறந்தாள் லஷ்மீகா.


அதனை சற்றும் எதிர்பாராத தோழிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்.


"என் ஹஸ்பெண்ட் ஒரு கன்னியமான, நேர்மையான, டேலண்ட்டான போலீஸ் ஆபிஸிர்னு சொல்லிக்க நான் பெருமைபடணும்" என்று அடுக்கிக் கொண்டே போனாள்.


"ஹே நீ யாரைக் கட்டிக்க நினைக்கிற தெரியுமா?" என்று அதிர்ச்சியாக இலியா கேட்கவும்,


சிறிதும் யோசிக்காமல், "போலீஸ் ஆபிஸரை" எனச் சந்தோஷமாக கூறினாள் லஷ்மீகா.


அவளின் சந்தோஷம் அனைவருக்கும் மேலும் ஆச்சரியத்தை கொடுத்தது. 


"போலீஸ் ஜாப்ல உள்ள மாப்பிள்ளையா?" என்று தர்ஷா வாயை பிளக்கவும்,


"ஏன்... ஏன் போலீஸ் ஜாப்க்கு என்ன? அந்த ஜாப் தான் ரொம்ப ரெஸ்பெக்டபில் ஜாப். என்னடி ஐஸ்?" என்று, அவளை துணைக்கு அழைத்தாள் லஷ்மீகா. 


ஏனெனில் லஷ்மீகாவிற்கு ஐஸ்வர்யா என்றும் துணை நிற்பாள். ஆனால் அவளோ... அமைதியாக லஷ்மீகா சொன்னதை பற்றி யோசித்தாள். 


"அந்த ஜாப் நல்ல ஜாப் தான் இல்லங்கல்ல. ஆனா அன்னைக்கு  பார்த்தோம்ல, அந்த படம் மாதிரி உன் லைஃப் ஆகிடாமடி" எனக் கவலையுடன் கூறினாள் தீவிதா.


"ஹே ஹே... அப்ப போலீஸ் ஜாப்ல உள்ளவங்க கல்யாணமே பண்ணிக்க முடியாதா?" எனக்  கோபப்பட்டாள் லஷ்மீகா.


"லஷ்மீ!!! நான் அப்படி சொல்ல வரல?"


"தீவி... அவங்களும் நம்மளை மாதிரி ஒரு நார்மல் பெர்சன் தான். அவங்க மேரேஜ் பண்ணிக்கலாம். ஆனா, அவங்களுக்கு ரெஸ்பான்சிபிலிட்டி, ட்யூட்டி டைம், இதெல்லாம் மத்த ஜாப் காட்டிலும் அதிகம். 


எனக்கு அன்னைக்கு படம் பார்த்தோம்ல ரேயன், அப்படியொரு பெர்சன் தான் ஹஸ்பண்ட்டா வேணும். எதையும் தாங்கும் இதயத்தோடு இருக்கணும். அந்த இதயத்துக்குள்ள நான் எப்பவும் இருக்கணும்" என்று இனம் புரியாத ஒரு சந்தோஷத்துடன் கூறினாள்.


ஐஸ்வர்யாவோ, "லஷ்மீ... ஒரு முடிவெடுத்திட்டா அதுல இருந்து எப்பவும் மாறமாட்டா. ஸோ... அவளோட விருப்பத்தை நாமளும் ஏத்துக்கணும். நம்ம க்ரூப்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஃபீல்டுல இருக்கிற மாப்பிள்ளையை கட்டிக்கிட்டா, நமக்குத் தான நல்லது. 


லஷ்மீ... ஹஸ்பெண்ட் ஒரு போலீஸ் ஆபிஸர்ன்னு சொல்லிக்க, நமக்கும் பெருமையா இருக்கும். எனி ஹெல்ப்னாலும் ஆபிஸர் கிட்ட கேட்டுக்கலாம்" என்று, மற்ற தோழிகளை சமாதானப்படுத்தும் நோக்கத்தோடு கூறினாள்.


"ஆனாலும்"


"ஹே நீயா மேரேஜ் பண்ணிக்க போற? என்ன ஆனாலும் உனாலும்ங்கிற" என்று நேரிடையாக தோழியிடம் எடுத்தெறிந்து சட்டென்று பேசிவிட்டாள் லஷ்மீகா.


அதனால் அனைவரும் அமைதியாகி விட்டனர்.


அவர்களின் மெளனம் லஷ்மீகாவை வருத்தமடைய செய்யவும், "நீங்க சொல்ல வர்றது எனக்குப் புரியுது. ஆனா, இப்படி ஆகிடுமோ அப்படி ஆகிடுமோன்னு எடுத்த எடுப்பிலேயே என்னைய பயமுறுத்தாதிங்கடி. நம்ம வாழ்க்கைய நாம தான் வாழ்ந்து தான் பார்க்கணும். ஒதிங்கிப் போய்யிடக் கூடாது. நேசிச்சிட்டே வாழணும். யோசிச்சிட்டே இருக்கக் கூடாது. ஏன்னா ஒரே ஒரு வாழ்க்கை, அந்த வாழ்க்கையில என்ன ஆனாலும் வாழ்க்கைய லவ் பண்ணிட்டே வாழணும்" என்று உணர்வுப்பூர்வமாகக் கூறி முடித்தாள் லஷ்மீகா.


அவளின் உருக்கமான பேச்சில், அனைவரின் உள்ளமும் நெகிழ்ந்து விட, "ஹே லஷ்மீ.... நீ விரும்புற மாதிரியே, ஒரு வெல் டேலண்ட்டான போலீஸ் ஆபிஸர், கண்டிப்பா உனக்கு ஹஸ்பெண்ட்டா கிடைப்பாங்க. டோண்ட் பீல் ஹாங்..." என்றாள் இறுதியாக தீவிதா.


அவளை போல மற்றவர்களும் கூறவும், தோழிகள் ஆதரவு கிடைக்க பெற்றதை நினைத்து மனதிற்குள் சந்தோஷம் அடைந்தாள். 


சீக்கிரம் அவனை பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை மனதிற்குள் பிறக்க, தன் மனதை கொள்ளை கொண்ட அந்த காவலனை பற்றி  எப்படி கண்டுப்பிடிப்பது என்று தோழிகளிடம் அபிப்பிராயம் கேட்கலாம் என முடிவெடுத்தாள். 


***



அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 7

 அத்தியாயம் : 7


கடந்த ஒரு மாத காலமாக தன் கண்களின் வழியே தன்னிடம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும், தன் மனதை ஈர்த்த காவலனை பற்றி அனைவரிடமும்  கூறினாள் லஷ்மீகா.


அதனைக் கேட்டுவிட்டு அனைவரும் ஒருத்தரை ஒருத்தர் கேள்வியாய் பார்த்து கொண்டனர். 


"லஷ்மீ!!! நான் சொல்றனேன்னு கோ... கோபப்படாதடி. இதெல்லாம் உன் கற்பனை தான்" என்று தனிவான குரலில் கூறினாள் இலியா.


அவளைப் பார்த்தபடி கசந்த புன்னகை சிந்தியவள், "நானும் இது கற்பனையாகிட கூடாதுன்னு தான், இப்ப களத்துல இறங்கி தேடவே ஆரம்பிச்சிட்டேன். என் ஆழ் மனசு சொல்லுது. சீக்கிரம் அவனை நான் மீட் பண்ணிடுவேன்னு"


"உன... உனக்குத் தெரிஞ்ச சிம்டம்ஸை வச்சு, அப்படி ஒருத்தன் இருக்கானான்னு கண்டுபிடிக்க முடியுமான்னு தெரில? ஆனா... உன் ஆழ் மனசு சொல்ற படி, அப்படி ஒருத்தன் இருந்தா, கண்டிப்பா உன்னை விடச் சந்தோஷப்படுறவங்க, நாங்களா தான்டி இருப்போம்" என்று சந்தேஷமாகக் கூறினாள் ஐஸ்வர்யா.


"ஹே... முதல்ல போலீஸ் ஜாப்ல இருக்கிறவங்களை கூகுள்ள சர்ச் பண்ணிப் பார்ப்போம். அதுல உன் கனவுல வந்த ஆபிஸர் இருக்கிறானான்னு பார்ப்போமா?" எனக் கூறியபடி தன்னுடைய கைப்போனை எடுத்தாள் தர்ஷா. 


"நானும் எனக்குத் தெரிஞ்ச வரை நல்லா சர்ச் பண்ணி பார்த்துட்டேன். அவன் போல யாருமில்ல. ஆனா, அவன் முகம் மட்டும் எனக்குத் தெரிஞ்சவுடனே, அவன் முன்னாடி போய் நிற்பேன்டி" என்றாள் ஆணித்தரமாக... 


"எப்படி உன் கண்ணுக்குள்ள இருக்கிறவனை கண்டுபிடிச்சி நீ.... கல்யாணம் பண்ணிக்கப் போற? எனக்கு உன் பைத்தியகாரத்தனமான முடிவை நினைச்சு கவலையா இருக்குடி" என்றாள் இலியா.


"அவன் ஹைட் ஆறடி, போலீஸ் கட் ஹேர் ஸ்டைல், பிஸ்கட் கலர், முஸ்டாச், பிளாட்டினம் பிரேஸ்லெட் இதலாம் வச்சு அவனை கண்டுப்பிடிக்க முடியாதா?" என்று பைத்தியம் போல லஷ்மீகா கேட்கவும், 


"இதெல்லாம் பொதுவான விஷயம். வேற ஏதாவது தெரிஞ்சா சொல்லுடி?" என்று கோபப்பட்டாள் இலியா.


எப்பவும் வாய் பேசாமல் அமைதியாக இருக்கும் இலியா இன்று தன்னை திட்டிக் கொண்டே இருக்கவும், அவளை முறைத்துப் பார்த்தபடி, "இந்த விஷயத்தை வச்சு தான், நானே தேடிட்டு இருக்கேன். அப்ப கண்டுப்பிடிக்க முடியாதாடி?" என்று சோகமாக ஐஸ்வர்யாவை பார்த்தாள். 


"லஷ்மீ!!! நான் மறுபடியும் சொல்றேன். இதெல்லாம் உன் கற்பனை தான்டி" பக்குவமாக அவளுக்கு எடுத்துச் சொல்ல புரிய வைக்க நினைத்தாள் இலியா.


"இது என்னுடைய கற்பனை தான்னு எனக்குப் புரியுதுடி. பட் என் கற்பனையில பார்த்த போலீஸ் ஆபிஸர் மாதிரி ஹைட், வெயிட், கலர்னு நிஜத்துல யாராவது இருக்காங்களான்னு தேடிட்டு இருக்கேன். 


ரீல்ல உள்ள பெர்சன் மாதிரி ரியல்லையும் இருப்பாங்கன்னு நீங்க தான அன்னைக்குச் சொன்னீங்க? அந்த மாதிரி கேரக்டரை தான் நான் விரும்புறேன். 


இல்லன்னா வெல் லேண்ட்டான போலீஸ் ஆபிசர் லிஸ்ட்டை கண்டுபிடிச்சி அவனை தேடுவோமா? எனக்கு அப்படி ஒரு போலீஸ் ஆபிசர் தான்டி வேணும். மத்த தத்தி ஆபிஸர் எனக்கு வேணா" என்றாள்.


"சினிமாவுல ஏற்கனவே நடந்ததையோ, இல்ல நடந்துகிட்டு இருக்கிறதையோ, ஏன் நடக்கப் போறதையோ தான் காட்டுறாங்க. அதுல நிஐமும் இருக்கும் பொய்யும் இருக்கும்டி. 


நாங்கலாம் எங்க ஹஸ்பெண்ட் ஃபேமிலின்னு இருக்கிறப்ப, உனக்கோ இல்ல உன் ஃலைப்பிற்கோ சடர்னா ஏதாவது ஆகிடுச்சுன்னா... எங்களால தாங்கவே முடியாது. 


ஏன்னா... நாம அஞ்சு பேரும் யூ.கே.ஜில இருந்து இப்ப வரைக்கும் ஃப்ரெண்ட்ஸா இருக்கோம். ஃலைப் லாங்கா ஃப்ரெண்ட்ஸாவும் இருப்போம். நாமலாம் ஜாலியா எப்பவும் சந்தோஷமா இருக்கனும்டி. கொஞ்சம் யோசிடி" என்றாள் மனம் கேட்காமல் இலியா.


"ஒரு படத்துல ஹீரோயின் இறந்து போற மாதிரி காட்டுவாங்க. வேறொரு படத்துல ஹீரோ இறந்து போற மாதிரி காட்டுவாங்க. ஏன், நாம பொறக்கும் போதே இறக்க தயராகிடுறோம். டெத்ங்கிறது என்னைக்கு எப்ப... எப்படின்னு தான் நமக்குத் தெரியாதுடி. எப்பவும் நல்லதையே யோசி" எனக் கூறிய லஷ்மீகா… தன் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க முயற்சிக்கவில்லை. 


"ஏன்டி நாமெல்லாம் எம்பிஏ தான பிடிச்சிட்டு இருக்கோம்? ஆனா, லஷ்மீ என்னென்னா… சைக்காட்ரிஸ்ட் மாதிரி பேசறா?" என்று ஆச்சரியமாக கேட்டாள் தீவிதா.


"ஹே... நான் பொதுவான விஷயத்தை தான் சொல்றேன்டி. இந்த உலகத்துல முதல்ல எல்லா விஷயத்தையும் கற்பனை தான் பண்ணாங்க. அடுத்து தான், அது கைவண்ணமாச்சு. கற்பனை பண்றதுல தப்பில்ல. கற்பனை நல்ல கருவா இருக்கனும். அடுத்து அது கனவா மாறனும். அப்துல்கலாம் சார் சொன்ன மாதிரி, நாம என்னவா ஆகணும்னு நினைக்கிறோமோ... அதுக்கான கனவை காணனும். 


சின்ன வயசில இருந்தே கற்பனை பண்ணலையா... நாம ஒரு டாக்டர் ஆகணும், ஒரு இன்ஜினியர் ஆகணும் அப்படி இப்படினு. அது மாதிரி தான் இந்த கற்பனையும்... 


என்னுடைய மனசை பாதிச்ச அந்த படத்துல இருந்து தான், எனக்குக் கற்பனை உருவாச்சு. அது கனவா மாறிச்சு. இப்ப... ஒரு நல்ல போலீஸ் ஆபிஸருக்கு மனைவியா ஆகணுங்கிற லட்சியமாகிடுச்சு"


"எப்படி? அவனக் கண்டு பிடிச்சிடலாமா?" என்று  லஷ்மீகாவிற்காக மற்றவர்களிடம்  கேட்டாள் ஐஸ்வர்யா.


"டிடெக்டிவ் ஏஜென்சி மூலமா, வெல் டேலண்ட்டான, லஞ்சம் வாங்காத, கெட்ட பழக்கமில்லாத முக்கியமா மேரேஜ் ஆகாத போலீஸ் ஆபிஸர்ஸோட லிஸ்ட் கேட்டு வாங்கலாம் வித் பயோட்டாவோட. ஆனா பேமண்ட் எவ்வளவு கேட்பாங்கன்னு தெரியல?" என்றாள் தீவிதா.


"லஷ்மீ!!! என் மச்சான் ஒருத்தர் ப்ரைவெட் டிடெக்டிவ்வா இருக்கார்டி. அவர் கிட்ட நான் கேட்டுப் பார்க்கவா? ஐஸ்வர்யா சொல்லவும் தான், எனக்கும் இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகும்னு தோணுது" என்றாள் சந்தோஷமாக தர்ஷா.


"ஓகேடி... அவர் என்னுடைய கேஸை எடுத்துப்பாரானு கேட்டுட்டு, அப்படியே பேமண்ட் பத்தியும் கேட்டுச் சொல்லுடி. டாடி கிட்ட அமெளண்ட் கேட்க முடியாது. அட் த சேம் டைம் பவனுக்கும் இந்த விஷயம் தெரியக் கூடாது. நீங்க யாரும் அவன் என் கூட இருக்கும் போது, என் ட்ரீம் பாய் பத்தி பேசிடாதிங்க" என்று அனைவரையும் முன் கூட்டியே எச்சரித்தாள் லஷ்மீகா.


"ஓகே!!! அவர் கிட்ட உடனே கேட்கறேன்" என்று தன்னுடைய கைப்போனை எடுத்து விபரத்தை அந்நபரிடம் தெரிவித்தவள், பேசி முடித்துவிட்டு லஷ்மீகாவை சோகமாகப் பார்த்தாள்.


தர்ஷாவின் உதட்டில் இருந்து உதிர போகும் வார்த்தைக்காக தவம் கிடப்பவள் போலத் தவிப்புடன் அவளது முகத்தை நோக்கிய படி இருந்தாள், லஷ்மீகா. 


“ஒன்லாக்ஸ் பேமண்ட் ஆகுமாம்டி" 


"ஒன் லாக்ஸா?" என்று அனைவரும் வாயைப் பிளந்தார்கள்.


"ம்ம்ம்... ஆளுக்கு டொண்டி தவுசண்ட் போட்டா கரைட்டா இருக்கும்ல?"  உடனே ஐஸ்வர்யா சொல்லவும்,


"ஆமாடி!!! நான் நாளைக்கு அமெளண்ட் தர்றேன்" என்று தர்ஷா பதில் கூறவும், அனைவரும் அதே போல் கூறினார்கள்.


யோசித்த வண்ணமிருந்த லஷ்மீகாவோ, "இல்லடி இருக்கட்டும். இன்னும் சிக்ஸ் மன்த்ல ஜாப்க்கு போயிட்டு சொல்றேன். அப்போ ட்ரை பண்ணலாம். அதுவரைக்கும் நாம தேடுவோம். எனக்கு நம்பிக்கை இருக்கு, அவனை சீக்கிரம் நான் கண்டுபிடிச்சிடுவேன்" என்று உறுதியாகக் கூறினாள் லஷ்மீகா.


"எஸ்... இன்னும் சிக்ஸ் மன்த்குள்ள நாம ப்ராஜெக்ட் முடிக்கணும். கேம்பஸ் இன்டர்வியூக்கு ட்ரை பண்ணனும். அதுக்கு அப்புறம் நம்முடைய ட்ரீம்ஸ்லாம் கன்டினியூ பண்ணுவோம். அதுவரைக்கும் நோ சினிமா, நோ அவுட்டிங். ஆனா, லஷ்மீ சொன்ன படி போலீஸ் ஆபிஸரை யாராவது பார்த்தா, உடனே அவங்களை போட்டோ பிடிச்சு லஷ்மீ கிட்ட காட்டுவோம். அவளே அவளுடைய ஃலைப் பாட்னரை செலக்ட் பண்ணிக்கிடட்டும்" என்று நல்ல அறிவுரை கூறினாள் இலியா.


"ஓகே" என்று அனைவரும் ஒட்டு மொத்தமாக உடன் பட்டார்கள்.


"இன்னைக்கு இலியா அநியாயத்துக்கு அறிவாளியா பேசறாள்ல!!!" என்று அவளை கேலி செய்தாள் ஐஸ்வர்யா. 


அன்றிலிருந்து ஒவ்வொருவரும் எந்த போலீஸ் ஆபிஸரையாவது எதார்த்தமாகப் பார்க்க நேர்ந்தால், உடனே அவரை  புகைப்படம் எடுத்து, அதனை லஷ்மீகாவிற்கு அனுப்பினார்கள்.

 

ஒவ்வொரு தடவையும் தன் மனம் கவர்ந்த நாயகனாக இருக்குமோ? என்ற எண்ணத்தில் ஆசையுடன் தோழிகள் அனுப்பும் புகைப்படத்தைப் பார்த்தாள். ஆனால், ஒருவர் கூட அவளது ஆசை நாயகனின் கால் தூசிற்கு கூடத் தேராதவர்களாக இருந்தனர். 


அந்த வாரம் பரீட்சை ஆரம்பமானது. அது முடிந்து திட்டபணி ஒப்படைவு செய்வதற்கான நாள் வந்தது. 


அதனை முடித்துவிட்டு அனைவரும் மூச்சுவிடுவதற்குள் 

நேர்முகத்தேர்வு நடைபெற ஆரம்பித்தது. 


ஒவ்வொரு தொழில்ஸ்தாபனமாக நேர்முகத்தேர்வு நடத்த ஆரம்பிக்கவும், அதில் தாங்கள் அனைவருக்கும் ஒன்றாக வேலை கிடைக்கும்படியான ஸ்தாபனமாக பார்த்து தோழிகள் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். 


அவர்கள் முயற்சியின் படி எதிர்பாராவிதமாக அனைவருக்கும் ஒரே அலுவலகத்தில் வேலை கிடைத்தது. 


அந்த மகிழ்ச்சியை கொண்டாட வேண்டி, மேலும் பரீட்சை, படிப்பு என எல்லாம் முடிந்துவிட்டது என்ற சந்தோஷத்தில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, நிம்மதியாக வெளியில் செல்லலாம் என்று முடிவு எடுத்தார்கள்.

 

அன்று… தமையனுக்கு பள்ளி விடுமுறை என்று அவனையும் உடன் அழைத்து, தோழிகள் வரச் சொல்லியிருந்த பல்கடை அங்காடிக்கு விரைந்தாள் லஷ்மீகா.

 

அனைவரும் வந்தவுடன், ஆறு மாடி பல்கடை அங்காடிக்குள் நுழைந்து,   தங்களுக்கு வேண்டியதை, ஒருவருடன் ஒருவராக பேசிய படி தேர்வு செய்து முடித்தனர். அதற்கேற்ப நேரமும் விரைந்து சென்று கொண்டிருந்தது.

 

அதனால் மதிய உணவை கூட அங்கேயே இருந்த உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, எந்தப் படத்தை பார்க்கலாம் என்று அவர்களுக்குள் கலந்துரையாடல் ஆரம்பமானது. 


சிங்கம் படத்திற்குப் போகலாம் எனக் கூறினாள் லஷ்மீகா.


"ஹே!!! என்னப்பா போலீஸ் கான்செப்ட் இருக்கிற மூவியா சொல்ற? நீ பேசாம போலீஸாகிடு. அப்பத்தான் உன் ட்ரீம் பாய்யை சீக்கிரம் உன்னால கண்டு பிடிக்க முடியும்” என்று இலியா சொல்லிக் கொண்டிருக்க… 


பவனுக்குத் தெரியாமல் இலியாவிற்கு கை சைகையால், 'பவன் இருக்கிறான் பேசாத' என்று அறிவுறுத்தினாள் லஷ்மீகா. 

 

"அப்ப ஹாரர் படம் வேணா பார்ப்போமா?" என்று இலியாவை கேலியாக பார்த்தாள் தர்ஷா.


"ஹாங் வேணாடி. நைட்டு எனக்குத் தூக்கம் வராது" என்று இலியா கண்களை விழிக்கவும்,

 

"பயந்தாங்குளி" என்று அவளை சடைத்தாள் தீவிதா.


அச்சமயம் பல்கடை அங்காடிக்குள் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. எல்லோரும் கண்ணாடி ஜன்னல் வழியாக கீழே எட்டிப் பார்த்தனர்.


முதலில் இலியா எழுந்து சென்று  எட்டிப் பார்த்தாள். கீழே காவல் துறையில் இருந்து கூட்டம் கூட்டமாக ஆட்கள் நிறைய பேர் நின்றிருந்தனர். "ஹே லஷ்மீ!!!  இன்னைக்கு உனக்கு ஜாக்பாட் தான்டி. இங்க வந்து பாரேன், எத்தனை போலீஸ்னு?" என்று அழைத்தாள்.

 

"ஏன் போலீஸ் போர்ஸ் வந்திருக்காங்க?" என்று தீவிதா  சொல்லவும், மற்றவர்களும் வந்து எட்டிப் பார்த்தனர்.


லஷ்மீகாவோ ஆர்வமாய் பார்த்தாள். 


"டைம் வேற ஒன் பார்ட்டி ஆகப் போகுது. இப்ப கிளம்பினா தான் படம் போடுறதுக்குள்ள நாம தியேட்டர்குள்ள போக முடியும். இவங்களை கடந்து எப்படி நாம போறது. ஓ.... காட்! இன்னைக்கு நாம படம் பார்க்க முடியாதா?" என்று சோகமாகக் கூறினாள் ஐஸ்வர்யா.

 

அவளது கைப்பிடித்து அசைத்து, "ஐஸ் சிஸ்டர், வாங்க நாம படத்துக்கு போவோம். இவங்க வந்தா வரட்டும்" என்றான் பவன்.

 

அவனுக்கு வலிக்காத மாதிரி அவனது தலையில் ஒரு கொட்டு கொட்டிய தர்ஷா, "உனக்கெல்லாம் படம் பார்க்கிற வயசாடா? ஆனா படம் பார்த்துட்டு வீட்டுக்கு போய் லஷ்மீயை மட்டும் நல்லபிள்ளை மாதிரி உன் டாடி கிட்ட போட்டுக் கொடுத்திடு. என்ன?" 


"ஓகே சிஸ்டர்" என்றான் பவன்.


"ஹாங்… சரின்னு சொல்றான் லஷ்மீ. சொன்னதை செஞ்சிடுவானோ?" என்று லஷ்மீகாவை பார்த்தாள் தீவிதா. 

 

"எஸ் சொன்னதை செய்வேன். செய்வதைத் தான் சொல்வேன்.   டாடி கிட்ட நீங்க சொல்லச் சொன்னீங்கன்னு உங்க பெயரை சொல்லியே சொல்வேன். அப்பத்தான், நீங்க வீட்டுக்கு வரும் போது, டாடி உங்களைத் திட்டுவாங்க" என்று முகத்தை கோபமாக வைத்த படி கூறினான் பவன்.


"ஹே மங்கி, சும்மாயிரு!!!" என்று வெளியில் வேடிக்கை பார்த்த வண்ணம் அவனை அதட்டினாள் லஷ்மீகா.

 

உடனே கோபத்துடன் நடக்க ஆரம்பித்தான் பவன்.


***




 









வியாழன், 29 செப்டம்பர், 2022

அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 5

 அத்தியாயம் : 5


பவனை பள்ளியில் விட்டுவிட்டு கல்லூரிக்கு விரைந்த லஷ்மீகா, இடையில் காக்கிச்சட்டை அணிந்திருந்த நபர் தென்பட்டால், உடனே வாகனத்தை நிறுத்தி, ஒரு கணம் அவர்களைப் பார்க்கத் தவறவில்லை.


'தன் கண்களுக்குப் புலப்படுபவன் நிஜத்திலும் இருப்பானா?’ என்ற கண்ணோடத்தில் பைத்தியம் போல, செல்லும் இடங்களிலெல்லாம் அவனைத் தேட ஆரம்பித்தாள்.


'அவன் முகம் வேற சரியா தெரியல? காக்கி ட்ரெஸ், ஹெட், பின்பக்க ஹேர்ஸ் டைல், முஸ்டாச், கையில பிளாட்டினம் பிரேஸ்லெட். இதை வச்சுக்கிட்டு இந்த உலகத்துல எப்படி அவனைக் கண்டுபிடிக்க? இந்த அடையாளத்தோட தான், லட்சம் பேர் இந்த நாட்டுல சுத்திட்டு இருப்பாங்க. அவன் நிஜமா... இல்ல நம்ம கற்பனையா? இல்ல வெறும் கனவா?' என்று தனக்குள்ளே திரும்ப... திரும்ப கேட்டு... கேட்டு சலித்துப் போனாள். 


ஆனால் அடுத்த நொடி, 'அவனை எப்படி கண்டு பிடிக்கிறது? அவனை சீக்கிரம் கண்டு பிடிக்கணும். இல்லன்னா நாம நிம்மதியா தூங்க முடியாது' என்று நினைத்தாள். 


'கொஞ்ச நாள் நமக்கு தெரிஞ்ச சிம்டம்ஸை வச்சு, உண்மையிலே அப்படியொரு ஆள் இருக்கானானு தேடிப் பாப்போம். அவன் கிடைச்சாலும் ஓகே. இல்லன்னா ஒரு நல்ல சைக்காட்டிரிஸ்ட்டை நாமளே பார்த்திட வேண்டியது தான்!' என்று முடிவெடுத்தவண்ணம் கல்லூரியை அடைந்தாள்.


ஐஸ்வர்யாவை தவிர மற்ற தோழிகள் வாகனநிறுத்துமிடத்தில் நின்றிருப்பதை கவனிக்காது  வாகனத்தை நிறுத்திட்டு, தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு யோசனையுடன் வகுப்பறையை நடக்க ஆரம்பித்தாள் லஷ்மீகா.


"என்ன லஷ்மீ... ஒரு மாதிரி நடந்து போறா?" என்று தர்ஷா சொல்லவும்,


"என்ன ப்ராப்ளமோ? நாம நிற்கிறது கூடத் தெரியாம போயிட்டு இருக்கா?" என்றாள் யோசனையுடன் இலியா.


"சரி வா... என்னென்னு கேட்டுப் பார்ப்போம். இன்னும் ஐஸை காணோம்?" எனக் கூறிய படி தீவிதா நடக்க ஆரம்பிக்க, லஷ்மீகாவை அழைத்த படி, அவளது பின்னே மூவரும் நடக்கலானார்கள்.


அவர்களின் குரல் கேட்டு பின்னால் திரும்பியவள் சோகமாக, "ஹாய்" என்றாள் லஷ்மீகா.


அருகில் சென்றதும், "ஹாய் இருக்கட்டும். ஏன் உன் ஃபேஸ் டல்லா இருக்கு? அந்த வாண்டு உனக்கு வீட்ல திட்டு வாங்கிக் கொடுத்துட்டானா?" என்று பவனை பற்றிக் கேட்டாள் தீவிதா.


நால்வரும் நடக்க தொடங்கினார்கள். "அப்படிலாம் இல்லடி. அவனுக்கு எக்ஸாம்னு கொஞ்சம் அடக்கி வாசிச்சிட்டு இருக்கான். ஏன்னா... ஸ்டடிஸ்ல ஏதாவது டவுட்னா என் தயவு வேணும்ல. அதான், எக்ஸாம் டைம் மட்டும் சார் என் கூட சண்டை போட மாட்டாங்க" என்றாள் சிரிப்புடன்...


"அப்புறம் என்ன ப்ராப்ளம்?" எனக் கேட்டாள் இலியா. 


"ப்ராப்ளமே நீ தான்டி!!!" என்றாள் லஷ்மீகா.


இலியாவோ, "நானா?" என்று அதிர்ச்சியாகக் கேட்டாள்.


"பிறகென்ன... உன் ஆளுக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை எல்லாம் எனக்கு அனுப்பிருக்க? எப்பா... சாமி அதை படிச்சிட்டு" என்று மீதியை சொல்லாமல் அவளை முறைத்தாள் லஷ்மீகா.


"ஐயையோ! உனக்கு அனுப்பிட்டேனா? ஹே சாரிடி"


"அப்படி என்ன மெசேஜ்டி அனுப்பினா?" என்று இலியாவை சந்தேக கண்களுடன் பார்த்த படி கேட்டாள் தர்ஷா.


உடனே இலியாவோ, லஷ்மீகாவின் கைப்பிடித்து, "ஹே வேணாடி, அதை வெளிய சொல்லாத என் மானமே போகும்" எனக் கெஞ்சினாள்.


அவள் கெஞ்சிக் கொண்டிருப்பதை வைத்து, "இல்ல லஷ்மீ!!! நீ சொல்லியே ஆகணும்" என்று சட்டமாய்க் கூறினாள் தீவிதா.


லஷ்மீகாவோ குறுஞ்செய்தி பற்றி சொல்வோமா? வேண்டாமா? என யோசித்த நிமிடம், அவர்களை நோக்கி வேகமாக ஓடி வந்தாள் ஐஸ்வர்யா.


"ஹலோ டியர்ஸ்... கடைசில எ... எனக்கும் எங்க வீட்ல கால்கட்டு, கை.... கைக்கட்டுன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க. அ.... அப்பப்பா அவங்க கிட்ட ஆர்க்யூ பண்ணிட்டு வர்றதுக்குள்ள கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. நல்லவேளை பெல் அடிக்கிறதுக்குள்ள வந்திட்டேன்" என்று மூச்சு வாங்க கூறினாள்.


"ஹே மாப்பிள்ளை யாருடி?" என்று சந்தோஷமாகக் கேட்டாள் தீவிதா.


"பேரு விக்ரமாம் பிஸ்னஸ்மேன். வீட்டுக்கு ஒரே பையன். எங்க வீட்டிலேயும், அவன் வீட்டிலேயும் என்னை... அவன் தலையில் கட்ட முடிவே பண்ணிட்டாங்க. நான் தான் மேரேஜிற்கு எஸ் சொல்லாம வந்திட்டேன். 


அதுமட்டுமல்ல, என் போன் நம்பரை மம்மி அவன் கிட்ட கொடுத்திட்டாங்களாம். அந்த சாரு, வாட்ஸ்ஆப்பில் எனக்கு மெசேஜ் பண்ணிருக்காராம். ஏதோ என் கிட்ட பேசணுமாம்" என்று ஐஸ்வர்யா சொல்லிக் கொண்டிருக்க,


"பிஸ்னஸ் பண்றான்னா... ஏன் அவனை நீ மேரேஜ் பண்ணிக்ககூடாது? ஆள் பார்க்க எப்படியிருப்பான்?" எனக் கேட்டாள் தர்ஷா.


"போட்டோவுல பார்த்தேன். ஆள் பார்க்க நல்லா தான் இருக்கான். ஆனா... எனக்கு சினி ஃபீல்டுல ஏதாவது ஒரு ஒர்க் பண்றவனா இருக்கணும். இல்லன்னா, அன்னைக்கு சொன்னேன்ல தியேட்டர் வச்சிருக்கணும்னு" என்று ஐஸ்வர்யா சொல்வதைக் கேட்டுட்டு, அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


அவர்களின் பார்வை வேறுபாட்டை பார்த்துவிட்டு, "என்ன யாரும் ஒன்னும் பேச மாட்டேன்ங்கிறிங்க?" என்று யோசனையாகக் கேட்டாள், ஐஸ்வர்யா.


"ஐஸ்!!! கொஞ்சம் கூட உனக்கு ப்யூசர் பத்தின பயமே இல்லடி. அதான் இப்படி பேசிட்டு இருக்க?" என்றாள் தீவிதா.


"என்னடி சொல்ல வர்ற? கொஞ்சம் புரியும் படியா சொல்லு?" என்று சிணுங்கினாள்.


"பிஸ்னஸ் பண்றவன் என்ன சினிமா பார்க்க மாட்டானா? இல்ல, தியேட்டருக்கே போக மாட்டானா? எல்லோருக்குமே சினிமாங்கிறது இப்பலாம் ஒரு பார்ட் ஆப் லைஃப்பா ஆகிடுச்சுடி. கண்டிப்பா அவனுக்கும் எந்த ஹீரோ, ஹீரோயினையாவது பிடிச்சிருக்கும். 


அதனால, நீ அவனை மேரேஜ் பண்ணிக்கிட்டு சந்தோஷமா சினிமா பார்க்கலாம். உன்னோட ஆசைக்கெல்லாம் அவன் நோ சொல்லமாட்டான். பிஸ்னஸ்மேனுக்கு இந்த சொசைட்டியில் தனி மதிப்புண்டு.  யோசிடி" என்று லஷ்மீகா சொல்லவும்,


"அ... அப்படியாடி சொல்ற?"


"எஸ்..."


"அப்ப... உடனே அவனுக்குக் கால் பண்ணி, உனக்கு சினிமா பார்க்க பிடிக்குமான்னு கேட்கட்டா?" என்று பரபரத்தாள் ஐஸ்வர்யா.


உடனே தோழிகள் நால்வரும் ஒன்று போலச் சிரிக்கவும், ஐஸ்வர்யாவும் தன்னை நினைத்துச் சிரித்து கொண்டாள்.


"கேளுடி... ஆனா சினிமா பத்தி மட்டும் கேட்காத. அப்புறம் நீ சினிமா பைத்தியம்னு அவன் கண்டு பிடிச்சிடப் போறான்" என்றாள் இலியா.


உடனே அவளின் புறம் திரும்பி, "நீலாம் இப்போ தெளிவாகிட்ட?" என்று கேலி செய்தாள் ஐஸ்வர்யா.


'ஏன் ஐஸ்... அத்தனை படம் பார்த்தும் இவ்வளவு ஸ்டெடியா இருக்கா? நாம ஒரு படம் பார்த்திட்டு பைத்தியம் போல ஊர் பெயர் தெரியாதவனை, சொல்லப்போனா அப்படி ஒருத்தன் இருக்கானானே தெரியல ஆனா தேடிட்டு இருக்கோம். நம்ம கனவுல வர்றவன பத்தி, ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லுவோமா? ஏதாவது சொல்யூசன்ஸ் கிடைக்குமான்னு பார்போம்' என மனதிற்குள்  யோசித்துக் கொண்டிருந்தாள்.


"யாரு இவளா தெளிவு? நேத்து அஜய்க்கு அனுப்ப வேண்டிய மெசேஜை மாத்தி லஷ்மீக்கு அனுப்பிட்டா. அதைப் படிச்சுட்டு பாவம் புள்ள, இன்னைக்கு பித்துப் பிடிச்சவ மாதிரி காலேஜுக்கு வந்தா?" என்று சொல்லி சிரித்தாள் தீவிதா.


"அப்படி என்ன மெசேஜ்டி?" என்று லஷ்மீகாவிடம் ஐஸ்வர்யா கேட்ட சமயம், இலியா வெட்கத்தில் தலை குனிந்தாள்.


"ஹே அதை விடுடி! உன் விஷயத்துக்கு வா. சீக்கிரம் அந்த பிஸ்னஸ் மேனுக்கு கால் பண்ணு. அவனை வேற எவளாவது கொத்திட்டுப் போயிடப் போறா?  இப்போலாம் எல்லா இடத்திலும் காம்பட்டீஷன் ஜாஸ்தி, நீ வேற மேரேஜிற்கு நோ சொல்லிருக்க." என்று அவசரப்படுத்தினாள் லஷ்மீகா.


தீவிதாவோ, "ஹே வாங்க. நம்ம ப்ளேஸூக்கு போயிட்டு கால் பண்ணலாம். இப்ப பிரின்ஸி வர்ற டைம். ஏன் க்ளாஸ்க்கு போகாம இங்க நிற்கிறாங்கன்னு கேட்டு, கேஸை போட்டிற போகுது" என்றாள். 


அனைவரும் விளையாட்டு மைதானத்தில் இருந்து, வழக்கமாக தாங்கள் அமரும் மரத்தடிக்குச் சென்று அமர்ந்தார்கள்.


தன் கைபோனில் புலனம் பக்கம் சென்று வேகமாக மெசேஜை பார்த்த ஐஸ்வர்யா, "ஹாய்ன்னு மெசேஜ் அனுப்பியிருக்கான்டி" எனப் போனிலிருந்து நிமிர்ந்தாள்.


"சரி... சரி கால் பண்ணு" என்றாள் தர்ஷா.


உடனே அந்த நம்பரைத் தொடர்பு கொண்டாள் ஐஸ்வர்யா. 


எதிர்முனையில் சில நொடியிலே அழைப்பு ஏற்றுக்கப்பட்டது. தோழிகளை பார்த்த படி போனில் ஒலிப்பெருக்கியை தொட்டு அழுத்தியவள், "ஹலோ.... நான் ஐஸ்வர்ய..."


அவள் பேசுவதற்குள்... இடையே குறிக்கிட்டவன் உடனே, "சொல்லுங்க ஐஸ்...வர்யா...!” என்று மறுபக்கம் அவளது பெயரை அழகாக உச்சரித்தான் விக்ரம். 


அவனின் வேகத்தை கண்டு ஐஸ்வர்யா திகைக்க... 


“நான் ஏன் உங்களை ஐஸ்னு கூப்பிடக் கூடாது?" என்று ஒரு கேள்வியை கேட்டான்.


தோழிகளைப் பார்த்த படி, "ஓ.... எஸ்" என்று அனுமதி வழங்கினாள்.


அவனோ யோசனை வந்தவனாக, "ஐஸ்னு... ம்.... உங்களை கூப்பிடுறதுக்குப் பதிலா ஜில்லுனு கூடக் கூப்பிடலாம். ஏ.....ன்னா, உங்களை நினைச்சாலே, இங்க... ஹார்ட்க்குள்ள ஒரு பீல் அது.... அது... எப்படி எப்படின்னு எக்ஸ்ப்ளைன் பண்ண தெரியல. பட் ஆயிரங்கோடி கிடைச்ச பீல் ஆகுது" என்றான்.


அவனின் இனிமையான வார்த்தைகளை கேட்டுவிட்டு, ஐஸ்வர்யாவுக்கு வெட்கம் வந்துவிட, அவளையே பார்த்துக் கொண்டிருந்த தோழிகளில் ஒருத்தியான தீவிதா,  செல்லமாக அவள் கன்னத்தை கிள்ளினாள்.


"ஐஸ்... ஜில்லுனு கூப்பிட வா? அது இன்னும் கொஞ்சம் கிக்கா இருக்கு" எனக் கிரங்கிய குரலில் கூறிவிட்டு, சன்னமாகச் சிரித்தான். 


அவனது சிரிப்பில் தன்னை தொலைத்தவளாக, ஐஸ்வர்யா சந்தோஷத்தில் திளைக்க... அடுத்து அவள் வாய் திறப்பதற்குள், "ஒன் செகண்ட்... ஒரு இம்பார்ட்டெண்ட் கால்" என்று, தனது அலுவலகம் சம்பந்தப்பட்டவைகளை மற்றொரு அலைபேசியின் வழியாக பேச ஆரம்பித்தான்.


இலியாவோ, "எனக்கு ஹிந்தி க்ளாஸ் இருக்கு, நான் கிளம்புறேன்" எனச் சைகையில் கூறியபடி நகர முயன்றாள்.


அவளின் கைப்பிடித்து, "போட்டேன்னா இருடி" என்று அதட்டினாள் தர்ஷா.


"ஹே நெக்ஸ்ட் க்ளாஸ்ல என்னை வெளிய நிறுத்திரு வாங்கடி" என்றாள். 


அனைவரும், அவளை முறைத்துப் பார்த்தார்கள். அதனால் கோபமாக, “இருக்கேன்!” எனக் கூறிவிட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள் இலியா.


"ஹலோ.... ஹலோஓ.... லைன்ல இருக்கிங்களா?" என விக்ரம் குரல் கேட்கவும்,


திருதிருன்னு முழித்தவள், 'என்ன பேசட்டும்?’ என்பது போல, தோழிகளிடம் சைகையில் பதட்டத்துடன் கேட்டாள் ஐஸ்வர்யா.


'நான் உங்களை எப்படி கூப்பிடட்டும்னு கேளு?' என்று கோபத்தை மறந்து, ஐஸ்வர்யாவுக்கு சைகையிலே யோசனை வழங்கினாள் இலியா.


உடனே அவளது கன்னத்தைப் பிடித்து, செல்லம் கொஞ்சிவிட்டு, "நா... நான் உங்களை எப்படி கூப்பிட?" என்று விக்ரமனிடம் கேட்டாள் ஐஸ்வர்யா.


"என்னை நீங்க எப்படிக் கூப்பிட்டாலும் ஓகே தான். விக்ரம், அம்முக்குட்டி, செல்லக்குட்டி, பட்டுக்குட்டி, டார்லிங், பேபி, ஹஸ் இதுல ஏதாவது ஒண்ணு கூப்பிடுங்க. இப்படித்தான சினிமாவுல பசங்கள பொண்ணுங்க கூப்பிடுறாங்க"


சினிமா என்ற வார்த்தையைக் கேட்டதும் சந்தோஷத்துடன், "நீங்க சினிமாலாம் பார்ப்பீங்களா?” என்று பட்டென்று கேட்டாள். 


"ம்ம்ம்... அடிக்கடி தியேட்டருக்குப் போவேன்" 


இந்த பதிலை கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டாள் ஐஸ்வர்யா. "நா.... நானும் சினிமா விரும்பிப் பார்ப்பேன். இன்பேகட் சினி பீல்ட்ல இருக்கிறவங்களை  மேரேஜ் பண்ணனுங்கிறது தான் என்னோட ஆசை. ஆனா..." என்றதோடு அவள் பேச்சை நிறுத்திவிட,


"ஹே என்னோட பிஸ்னஸே டிவி, ரேடியோ, ஆன்லைன் வெப்சைட்டில் ஆக்டர்ஸை வைச்சு அட்வர்டைஸ்மென்ட் பண்றது தான்" என்றான் விக்ரம். 


"வாவ்!!! அப்ப நீங்க ஹீரோ, ஹீரோயின்ஸ் கூடப் பேசியிருக்கிங்களா?" என்று அவள் பேச ஆரம்பிக்கவும், விக்ரம் பதில் சொல்ல...


மற்றவர்களுக்குக் கொஞ்ச நேரத்தில், லேசாக சலிப்பு தட்ட ஆரம்பித்தது. அவள் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தார்கள்.


முடிவில்... "எப்ப மேரேஜ் வச்சுக்கலாம்?" எனக் கேட்டான் விக்ரம்.


"என் ஸ்டடிஸ் முடிய இன்னும் சிக்ஸ் மன்த்ஸ் தானே இருக்கு முடியட்டும்" என்றாள் ஐஸ்வர்யா.


"அப்ப... அதுவரை சம்திங்... சம்திங்" என்றான் விக்ரம்.


அதனைக் கேட்டு வாய்பொத்தி தோழிகள் சிரிக்க, "ஹே... விக்ரம், ச்சு.... நான் காலேஜ்ல இருக்கேன். இங்க.... பக்....கத்துல..." என்று தோழிகளை பார்த்தாள். ஆனால் எதுவும் பேசவில்லை. 


"நானும் உங்க காலேஜ் பக்கத்துல தான் இருக்கேன். இன்னைக்கு இங்க சூட்டிங். ஆனா இன்னும் சூட்டிங் ஸ்டார்ட் பண்ணல. ம்ம்ம்... பை த பை... நான் உன்னைப் பார்க்க வரட்டுமா?" என்று அனுமதி கேட்டான்.


அனைவரும் ஐஸ்வர்யாவை பார்க்க, "அய்யோ... வேணாம் விக்ரம். இப்ப க்ளாஸ் ஆரம்பிக்கப் போகுது. நான்... நான் போனை வச்சிடுறேன், ஈவினிங் கூப்பிடுறேன்"


"ஹே ஒரு நிமிஷம்"


"பை.... பை... டைம் ஆகிடுச்சு" என்று பெய்யான அவசரம் காட்டினாள்.


"ஹே வெயிட்!!! நான் உங்க காலேஜுக்கு வந்துட்டேன். உன் க்ளாஸ் எது?" எனக் கேட்டான் விக்ரம்.


அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.


***



Popular Posts

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *