செவ்வாய், 18 அக்டோபர், 2022

அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 10

 அத்தியாயம் : 10


அருளின் ஆட்களில், அவன் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும்  பாஸ்கர் என்பவனை மட்டும் தனியாக அடைத்து வைத்திருந்தார்கள். 


அவ்விடத்திற்கு செல்ல நெடுஞ்சாலையில்  ஜூப்பை இயக்கி கொண்டிருந்த சித்தார்த்தன், சட்டென்று   குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, மாற்று வழியில் சென்றான். 


ஒரு கையால் வாகனத்தை இயக்கியபடி, மற்றொரு கையால் ஜூப்பில் இருந்து இரண்டு முகமுடியை எடுத்து, ஒன்றை அவளிடம் கொடுத்துவிட்டு, மற்றொன்றை தான் அணிந்தபடி, "விஷா!!! நம்மளை யாரும் ஃபாலோ பண்றாங்களானு செக் பண்ணு" என்று யோசனையாக கூறினான். 


எதார்த்தமாக பார்ப்பது போல நாலாபுறம்  யாராவது தங்களை கவனிக்கிறார்களா என்று ஒரு பார்வையை பார்த்துவிட்டு, "நோ சித்து…" என்றாள் விஷாலாக்க்ஷா. 


ஒரு வேப்ப மரத்தின் அருகில் ஜூப்பை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த வீட்டை ஒட்டியபடி வேகமாக நடக்க ஆரம்பித்தான் சித்தார்த்தன். 


அவனுக்கு குறையாத வேகத்துடன் விஷாலாக்க்ஷாவும் உடன் நடந்தாள். 


அக்கம் பக்கம் யாராவது தங்களை கண்காணிக்கிறார்களா எனப் பார்த்தபடி, செடி கொடிகள் நிறைந்த ஒரு சிறிய பாதையில் நடந்து, சிறிது தூரத்தில் தெரிந்த பத்துமாடி கட்டிட வளாகத்தினுள் இருந்த மின்தூக்கிக்குள் நுழைந்தார்கள். 


மின்தூக்கி வழியாக பத்தாவது மாடியை அடைந்து, வலது பக்கம் இருந்த முதல்  வீட்டிற்குள் புகுந்தார்கள். 


வீட்டினுள் இருந்து, "ம்ம்ம்… ம்ம்ம்ம்" என்ற முணங்கல் சத்தம் கேட்டது. 


வீட்டின் கதவை உள்ளிருந்து பூட்டிவிட்டு, படுக்கையறை கதவைத் திறந்தார்கள். 


அங்கு ஒரு சேரில் பாஸ்கர் கட்டி வைக்கப்பட்டிருந்தான். அவனது அருகில் சென்று வாயில் ஒட்டியிருந்த பிளாஸ்திரியை எடுத்துவிட்டான் சித்தார்த்தன். 


"ஏ போலீச்சு!!! எங்கள என்னன்னு நெனச்சுகன? அண்ணாத்தைக்கு விச்சியோம் தெரிஞ்சுச்சு, அம்புட்டு தா  உன்ன  ஹா... ஹாலி பண்ணிடும் தெர்மா?" என்று கத்தினான் பாஸ்கர்.


அவன் பேசி முடிக்கும் வரை பொறுமையாக கேட்டுவிட்டு, "உன் அண்ணாத்தயையே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் காலி பண்ணிட்டு வர்றேன். வாலு நீ இவ்வளவு சவுண்ட் விடுற? ரொம்ப சவுண்ட் விட்ட உன் அண்ணாத்தை போன இடத்துக்கு இப்பவே உன்னை அனுப்பி வைச்சிடுவேன்!!!" என்று இலகுவாக கூறினான் சித்தார்த்தன். 


"ஆ… அல்லா போலீச்சும் இப்படித்தான எங்ககிட்ட பேசிகினு விஷயத்தை வாங்க நினைப்பீங்கோ. நாங்க ரொம்ப உச்சார்மா" எனக் கூறிவிட்டு சத்தமாக சிரித்தான். 


தான் சொன்னதை நம்பாது முப்பத்திரண்டு பல்லையும் காட்டும் பாஸ்கரிடம், அருள் சடலத்தை வீடியோ எடுத்திருந்த காணொளியை தனது கைபோனிலிருந்து தேடி எடுத்து காட்டினான் சித்தார்த்தன். 


அதனைப் பார்த்துவிட்டு, அருள் இறந்துவிட்டானா என்று அதிர்ச்சியான பாஸ்கர், மெல்ல தன் கை, கால்கள் நடுக்கம் கொள்வதை உணர்ந்தான்.


"நான் கேட்கற கேள்விக்கு உன்மைய சொன்னா உன்ன விட்டுருவேன்.  பொய் சொல்லிருந்தன்னு தெரிஞ்சது மவனே எப்பனாலும், உன்ன நான் பார்க்கிற நொடி உனக்கு என்கவுண்டர் தான்!!!" என்று  கர்ஜித்தான் சித்தார்த்தன். 


அவனது கர்ஜனையில் அதிர்ச்சிக்கு ஆளாகி இருந்த பாஸ்கர் மேலும் அதிர்ச்சி அடைந்தான். 


அவர்களை கவனித்துக் கொண்டிருந்த விஷாலாக்க்ஷாவோ, 'சின்ன வயசுல அமைதியா சாந்தமா இருந்த சித்துவா இப்ப சிங்கம் போல கர்ஜிக்கறது. உன்னை இப்படி பார்க்க ரொம்ப அழகா தெரியுற டா. உன் மேல ஒவ்வொரு நாளும் எனக்கு லவ் கூட்டிட்டே போகுது சித்து' என்று, சித்தார்த்தனை காதலோடு நோக்கிக் கொண்டிருந்தாள். 


"எனக்கு தேவை உண்மை. உண்மைய சொல்லிட்டு உயிர்பிழைச்சுக்க. நா... நான் சொன்னா சொன்ன படி நடந்துக்குவேன். அநியாயமா என் துப்பாக்கி பழியாகிடாத!!!" என்று அவனிடம் பேரம் பேசினான் சித்தார்த்தன்.


"ச… சார் என்னை விட்டிருங்க சார்" என்று பயத்தில் எச்சில் விழுங்கினான் பாஸ்கர். 


"அருளை பத்தி சொல்லு???" என்று பாஸ்கரிடம் கேட்டுவிட்டு, விஷாலாக்க்ஷாயிடம் அவன் பேசுவதை காணொளியாக  எடுக்கும் படி பணித்தான். 


"எனக்கு அண்ணாத்த வியாபாரம் பத்தி ஒன்னும் தெரியாது சார்" எனக் கூறிவிட்டு, அவ்விருவரையும் பயத்துடன் நோக்கினான் பாஸ்கர். 


அவனை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சித்தார்த்தனோ, அவன் பொய் சொல்கிறான் என யுகித்துவிட்டு, சட்டென்று  ஷூவிற்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேகமாக அவனது விரல்களை வெட்ட ஆரம்பித்தான். 


அவனது அதிரடி செயலிலும் அவன் ஏற்படுத்தும் வலியிலும், "சார்… சார்" என்று அலறினான். 


"அருள் தொடையில போட்டுருக்கிற டாட்டூக்கு என்ன அர்த்தம்???" எனக் கேட்டபடி பாஸ்கர் விரலை கத்தியால் பதம் பார்க்க ஆரம்பித்தான் சித்தார்த்தன். 


"சார்!!! அத்து பத்தி மெய்யாலும் என்க்கு முழுச்சா தெரியாது. அ... அத்து வந்து கடத்துன கொல்ந்திங்கள வாங்குறவர்ரு இந்த டாட்டு தொடைல இருக்குதான்னு பார்த்துகன்னு தான் பணம் கொடுபாரு. ஏன்னா உங்கள மாதிரி போலீச்சு தொல்ல வந்துகினும்ன்னு ஒரு செட்டப்பு" என்று கத்தி கூறினான். 


அதனை கேட்டதும், பாஸ்கரின் விரல்களை பதம் பார்ப்பதை நிறுத்திவிட்டு, "ஏன்டா எல்லா அக்யூஸ்ட்டும் செய்ற தப்பை தடயம் இல்லாம செய்ய மாட்டிங்களா? இன்னும் கொஞ்சம் எங்களால உங்களை கண்டுபிடிக்க முடியாதளவுக்கு தப்பு பண்ணுங்கடா" என்றான் சித்தார்த்தன். 


அவனது பதிலில் இதழோரமாய் விஷாலாக்க்ஷா சிரிக்க, பாஸ்கரனோ, 'என்ன இவன் நல்லவனா கெட்டவனா?' என்பது போல மனதிற்குள் யோசித்தான். 


"குழந்தைய எப்ப எப்படி கடத்துவிங்க???"


"ரோட்ல தன்னியா வெளையாடிட்டு இருக்கிற கொல்ந்திங்க. கோயிலு, சர்ச்சு, கண்ணால மண்டபம் இப்டி கூட்டமா இருக்கற எடத்துக்கு வர்ற கொல்ந்திங்க. பணக்கார வுட்டு கொல்ந்திங்கனு பாத்து கடத்துவோம் சார். கடத்துறது ஒரு ஆள், பணம் வாங்கறது ஒரு ஆள் சார்" 


"ஓகே… பல லட்சம் கோடி பணத்தை எங்க வச்சிருக்கிங்க?" எனக் கேட்டபடி அவனது மற்றொரு விரலை பிடித்தான். 


'இந்த விரலையும் கத்தியால் கிழிப்பானோ' என்று மனதிற்குள் பயந்த பாஸ்கர், "சார்!!! அத்து என்க்கு தெர்யாது ஆனா பண்த்த பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் சிங்கம் தான்" என்றான் பம்மியமடி. 


"நீங்க செய்ற வேலைக்கு பின்னாடி அரசியல் கூறுக்கிடு இருக்கா???" 


"இதலாம் நம்ம கைல சொல்லிக்க மாட்டாங்க. சிங்கமும், அண்ணாத்தையும் தன்னியா போய்க்குவாங்க சார். நான் ஒன்னியும் அவ்வளவு பெர்ய ஆள் இல்ல சார். மூணு வேளை பிரியாணி கெடைக்கும். அப்பாலிக்கா செல்வுக்கு பணம் கெடைக்கும். அத்தான் சார் என் நெல்ம. என்ன வுட்டுரு சார்" என்று கெஞ்சி கேட்பது போல கேட்டான். 


"பரவாயில்ல உண்மைய சொல்லிட்ட" என்று அவளின் தோளில் இரண்டு தட்டு மெல்ல தட்டினான் சித்தார்த்தன். 


பாஸ்கரோ சிறிது பயத்துடன், "தங்க்ஸ் சார்!" என்று தன் கோரப் பற்கள் தெரியச் சிரித்தான்.


அவர்களை பார்த்துக் கொண்டிருந்த விஷாலாக்க்ஷா, சித்தார்த்தனின்  புன்னகை  சிந்தும் உதட்டை ரசித்துப் பார்த்தாள்.


அவள் புறம் சட்டென்று திரும்பிய சித்தார்த்தன், "விஷா!!! தம்பி நமக்கு ஒரு நல்ல ஐடியா கொடுத்திருக்கான். அப்ப வேலைய ஸ்டார்ட் பண்ணுவோமா???" எனக் கேட்டான். 


அவனை காதலாக நோக்கி கொண்டிருந்தவள், சட்டென்று அந்த நினைவை தூக்கி போட்டுவிட்டு, சரி என்று வேகமாக தலையாட்டினாள். 


"இனி அருளோட அல்லக்கைகள அள்ளவே நமக்கு நேரம் சரியா இருக்கும்னு நினைக்கிறேன்" என்று வலது புருவத்தை உயர்த்தி, பாஸ்கரை ஒரு மார்க்கமாகப் பார்த்தான்.


அவனோ… சித்தார்த்தனின் பார்வைக்கான அர்த்தம் என்னவென்று தெரியாமல் பயத்தில் முழித்தான். 


அவனது விரிந்து வளைந்த  புருவங்களை ரசித்துப் பார்த்தபடி, "சித்து... யார் யாரு அருளோட ஆட்கள்னு நாம எப்படி கண்டு பிடிக்கிறது. ஏன்னா, மத்த ரவுடீஸை அரட்ஸ்ட் பண்ணினா, நான் அவன் ஆளு இவன் ஆளுன்னு சப்போர்ட்க்கு யாரோடையாவது வருவாங்க" என்று சந்தேகம் கேட்டாள் விஷாலாக்ஷா.


"அதான் தம்பி இப்ப க்ளூ கொடுத்தானே… தொடையில டாட்டூ போட்டுருக்கிறவன்லாம் அருள் ஆளுனு, சொல்லப்போனா தம்பியே தொடைல ஒரு டாட்டூ போட்டுருக்கான்" என்று பாஸ்கரனை நோக்கினான் சித்தார்த்தன்.


"அய்யோ சார்… நான்ந்தா அப்ரூவரா மாற்ட்டனே! என்னைய விட்டுரு சார்!"


"விடுறேன் உன்னைக் கொண்டு போய் ஜெயில்குள்ள… அதுவும் நீ இப்படியொரு க்ளூ கொடுத்ததால தான். இல்லன்னா, நீயும் உன் அண்ணாத்தைய இந்நேரம் மீட் பண்ணிருப்ப மேலோகத்துல!" எனக் கூறிவிட்டு குளியலறைக்குள் நுழைந்து கத்தியை கழுவிட்டு வெளியில் வந்தான் சித்தார்த்தன். 


பாஸ்கரின் வாயை மறுபடியும் பிளாஸ்திரி கொண்டு ஒட்டிவிட்டு, அவனை பாதுக்காக ஒரு ஆளை நியமித்திவிட்டு இருவரும் ஜூப்பை அடைந்தார்கள்.


"விஷா!!! இன்னைக்கு நைட், அருளோட அத்தனை ஆட்களையும் அரஸ்ட் பண்ணனும். இல்லன்னா, அருளோட டெட்பாடி  ஊர்வலத்துல தேவையில்லாம பப்ளிக்க டிஸ்டர்ப் பண்ணுவான்க" எனக் கூறியபடி வாகனத்தை இயக்கினான் சித்தார்த்தன். 


"யு ஆர் ரைட் சித்து. நான் டிஜிபி சார் கிட்ட பர்மிஷன் வாங்கறேன். உடனே நாம டீம் பார்ம் பண்ணனும்" என்றாள்.


‘அன்று இரவு ஒவ்வொரு தெருவின் மூளை முடுக்கிலும், புதிதாக கத்தியை வைத்துச் சுற்றிக் கொண்டிருந்தவர்களையும் விட்டு வைக்காது கைது செய்தார்கள். 


யார் தொடையில் அருள் போலப் பச்சை குத்தியிருந்தார்களோ, அவர்கள் அனைவருக்கும், சிறப்பான முறையில் விசாரணை நடத்தப்பட்டது. 


அந்தக் கூட்டத்தில் இனி யாராவது குழந்தைகளை கடத்தி விற்க முயல்வது விசாரணையில் தெரிய வந்தால், நேரிடையாக நெஞ்சில் குண்டு தான் பாயும்’ என்று எச்சரிக்கை கொடுத்தார்கள்.


அருளின் இறுதி ஊர்வலத்தில், எந்த வித கலகமும் வரக் கூடாது. மேலும், அவனின் சடலத்தை வைத்து அரசியலும் பண்ணக் கூடாது என்று, அருள் மனைவியின் தமையனான சிங்கம் ஜாமீனில் இருந்து வெளி வருவதைத் தடுத்தான் சித்தார்த்தன்.


வெளியூர்களில் இருந்து சந்தேகபடுகிற மாதிரி நபர்கள் யாரேனும் சென்னைக்குள் நுழைவரை தடுத்தான். 


விமானநிலையம், ரயில்நிலையம், பஸ்நிலையம் என்று எல்லா இடங்களிலும் பாதுக்காப்பை பலப்படுத்தினான். 


அன்றைய நாள் சாப்பாடு, தூக்கமின்றி வேலையில் மும்முரமாக ஈடுபட்டான் சித்தார்த்தன். 


சோர்வடையாது, துவண்டு போகாது தொடர்ந்து வேலையில்  ஈடுபடுவனை கண்டுவிட்டு, மனதிற்குள்  வியந்த விஷாலாக்க்ஷா, "சித்து!!! உன்னை மாதிரி ரொம்ப சின்சியரான ஆபிஸரை இதுவரை  நான் பார்த்தில்ல. கொஞ்ச நேரமாச்சும் ரெஸ்ட் எடு சித்து" என்று அக்கறையாக கூறினாள். 


"நான் என்னைக்கு ரெஸ்ட் எடுத்தேன்" என்று இலகுவாக கூறிவிட்டான் சித்தார்த்தன். 


மனம் கேட்காது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தரம் ஆட்களின் மூலம் பழச்சாறு வாங்கி, அவனை பருக வைத்தாள் சித்தார்த்தன்.

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *