செவ்வாய், 20 செப்டம்பர், 2022

அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 1

 கதையைப் பற்றி!!!

ஒரு சில திரைப்படத்தை பார்த்துவிட்டு, அதன் தாக்கத்தில் இருந்து சிலரால் வெளி வர முடியாது. படம் மட்டுமல்ல, நாவல், கதை, கவிதைகளையும் படித்தால் அந்த தாக்கம் குறைந்தது நாலைந்து நாட்களாவது சிலரது மனதை பாதிக்கும்.


ஏனென்றால் இவையெல்லாம் நமக்குத் தெரியாமல், நம் ஆழ் மனதிற்குப் பிடித்தவைகளில் தொடர்புடையவையாக இருக்கும். அதனை நாம் பார்க்கும் போதோ, இல்லை மனதார படிக்கும் போதோ, அதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள... சில நொடிகள் அல்லது சில நாட்கள் கூட, எல்லோருக்கும் அல்ல சிலருக்குத் தேவைப்படலாம்.


அப்படித்தான் இக்கதையில் வரும் நாயகி ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அதன் தாக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறாள். அந்தப் படத்தில் தன் காதலனுடன் வாழ முடியாமல் படத்தின் இறுதியில் இறந்து போகும் நாயகியின் வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறாள். படத்தின் நாயகி எப்படியெல்லாம் வாழ ஆசைப்பட்டாளோ? அப்படியெல்லாம் தான் வாழ்ந்தே ஆகணும் எனத் தீர்க்கமான முடிவில் இருக்கிறாள். அதனால் காவல்துறை அதிகாரியான ஹூரோவை  காதலிக்க ஆரம்பித்து, அவனை கைப்பிடிக்க வேண்டி ஆசைப்படுகிறாள்.


அவளது ஆசை நிறைவேறுமா? அவள் ஆசைப்படுகின்ற நாயகன், அவன் உள்ளத்தை நாயகிக்குக் கொடுப்பானா? அவர்களது காதல் கைகூட எது தடையாக இருக்கிறது? யார் தடையாக இருக்கிறார்கள் என்பது தான் கதை. நாயகியோடு நான்கு பெண்கள் நெருங்கிய நண்பிகளாக இருக்கிறார்கள். அந்நான்கு பேருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள், ஆசைகள், வாழ்க்கை என்று கலகலப்பாக கதையை நகர்த்தி செல்ல முயன்றிருக்கிறேன் படித்துப் பாருங்கள்.


ஒவ்வொரு அத்தியாயத்தின் கீழும் தங்களது கருத்துகளை தவறாமல் பதிவிடுங்கள்...

நன்றி

சாய்லஷ்மி.




அவனுள்ளம் என் வசமாகுமோ!!!




சாய்லஷ்மி.




அத்தியாயம்: 1 

 

"ஏன் இது ஏன் இது 

என்னுள்ளே 

புது மாற்றம் வந்தது 

உன்னாலே??? 

கண்கள் தினமும் உன்னை 

துரத்த... 

கைகள் இரண்டும் உன்னை  

அழைக்க... 

ரசிக்கும் பாடலாய் நீ

இருக்க... 

என் நினைவு முழுவதும்

உனை சுமைக்க... 


ஏன் இது ஏன் இது

என்னுள்ளே 

புது மாற்றம் வந்தது 

உன்னாலேஏ?.... 

நீ கட்டளையிட வேணாமே 

நான் கட்டுப்பட்டுவேனே! 

மழை போல நீ வருவாயென 

நிலம் போலக் 

காத்திருப்பேனே! 

யார் பாதையும் தொடராது

உன் பாதம் தொடர்வேனே! 

எங்கு நீ சென்றாலும் 

சிறுபிள்ளைபோலப் பின்

வருவேனே! 

கடவுளிடம் என் வேண்டுதல்எல்லாம் நீயே... உனையன்றி வேற யாரும் வேணாமே!” என்ற பாடல் வரிகளோடு திரையில் படம் முடிவடையவும், கனத்த இதயத்தோடு அனைவரும் வெளியேவந்தனர் என்று தான் சொல்லணும்...


கூட்டத்திற்குள் இருந்து தனியாக பிரிந்து வந்ததும், ஐந்து பெண் தோழிகளில் ஒருத்தியான ஐஸ்வர்யா, எதிரில் இருந்த உணவகத்தைக் கண்டுவிட்டு, "தீவி!!! சாப்பிட்டுட்டு போலாமா? ரொம்ப பசிக்கிதுப்பா" என்று, பாவம்போல முகத்தை வைத்துக் கொண்டு சன்னமாகச் சிணுங்கினாள்.


"ஓகே டி!!!" என்று தன் சம்மதத்தை தெரிவித்தாள் தீவிதா.


ஆனால் இலியாவோ, "ஹே! ஆல்ரெடி  இங்கேயே லேட்டாச்சு. இன்னும் கொஞ்சம் லேட்டா போனா அவ்வளவுத்தான்... மம்மி கிட்ட  நான் வசமா 

மாட்டிக்குவேன்.  எக்ஸாமுக்கு ஃப்ரெண்ட் வீட்டுக்குப் படிக்க போறேன்னு பொய் சொல்லிட்டு வந்தேன்ப்பா" என்று பதட்டத்துடன் கூறினாள்.


அவளின் தலையில் வலிக்காத மாதிரி ஒரு கொட்டு கொட்டிய தர்ஷா, "அப்ப, நாங்க மட்டும் என்ன விண்வெளிக்கு போறோம்னா, எங்க வீட்டுல சொல்லிட்டு வந்தோம்? படம் முடியற வரை வாயைப் பிளந்து பார்த்துட்டு, இப்பத்தான் உனக்கு மம்மி ஞாபகம் வருதா?" எனக் கேலியாகக் கேட்டாள்.


அனைவரும் தர்ஷாவின் கேலி பேச்சில் சிரித்துவிட, "ஹே... ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் எனக்காக டைம் ஸ்பெண்ட் பண்ண முடியுமா? முடியாதா?" இலியாவை மிரட்டுவது போல, அவளது முகத்திற்கு முன்னால் விரல் நீட்டி கேட்டாள் ஐஸ்வர்யா.


இலியாவோ... சம்மதம் தெரிவிக்காமல் இருக்கவும், அவள் எப்பவும் இப்படித்தான் சரியான பயந்தாங்கோலி என்று மனதிற்குள் அவளை சடைத்துவிட்டு, ஐந்தாம்படையில் கடைசியாக இருக்கும் லஷ்மீகாவின் புறம் திரும்பினாள் ஐஸ்வர்யா.


லஷ்மீகா என்கிற லஷ்மீ சம்மதம் சொல்லிவிட்டால், இலியாவும் எப்படியும் சம்மதித்துத்தான் ஆக வேண்டும். ஏனெனில் ஐவரில் இலியா மட்டும் தனியாக இங்கிருந்து செல்லமாட்டாள் அவள் ஒரு பயந்தாங்கோலி என்ற எண்ணத்தில், "லஷ்மீ!!! நீ என்ன சொல்ற? சாப்பிட்டுட்டுப் போலாமா?" அவளது கைப்பிடித்து கெஞ்சாத குறையாகக் கேட்டாள் ஐஸ்வர்யா.


அவளின் தொடுதலில், ஏதோ மாய உலகத்தில் இருந்து மீண்டவள் போல, தோழிகள் புறம் கவனத்தை கொண்டு வந்த லஷ்மீகா. அவர்கள் தன்னிடம் என்ன கேட்டார்கள் எனத் தெரியாது திருதிருவென முழித்தாள்.


அனைவரும் அவளது பதிலுக்காக காத்திருக்க, அவளின் கைப்பிடித்த படி அருகில் நின்றிருந்த அவளின் தமையனான பவன், "அவ என்ன சொல்றது? வாங்க சாப்பிடுவோம்" என்றான்.


அவனின் பதிலில், மற்றவர்கள் சிரித்துவிட... சாப்பிட அழைத்தார்களா? என்று புரிந்துக் கொண்டாள் லஷ்மீகா.


அவளால், அரங்கில் இருந்து வெளிவந்ததிலிருந்து இயல்பாக இருக்க முடியவில்லை. எதையோ... யாரையோ பறிகொடுத்ததை போன்ற உணர்வில் தவித்தாள். எதைப் பறி கொடுத்தாள் என்று தான் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.


'ஏன் எனக்குள்ள சொல்ல முடியாத ஏதோ ஒரு பீலிங்க்ஸ்?' தோழிகளை பார்த்த படி நின்றிருந்தாலும், தனக்குள்ளே ஆச்சரியமாக கேட்டுக் கொண்டாள். பதில் தான் கிடைக்கவில்லை.


அவளது நிலையை அறியாமல், "லஷ்மீ!!! உனக்கு உன் தம்பி தான்டி முதல் மாமியார்" என்று பவனின் தலைமுடியை கலைத்துவிட்டு விளையாடினாள் தீவிதா.


அவனோ... கைகளால் தன் தலைமுடியை அலங்காரபாணியில் சரி செய்துக் கொள்ளவும், அவனது செய்கையை ரசித்தபடி, "ஆமா... பாவம் நம்ம லஷ்மீ. நல்லா வாய்யடிக்கிறவன் கிட்ட  மாட்டிக்கிட்டா" என்று பவனை கேலி செய்தாள் ஐஸ்வர்யா.


"ஹலோ... வாய் இருந்தா தான் சாப்பிட முடியும்" எனக் கூறிவிட்டு, ஏதோ மிகப்பெரிய தத்துவத்தைக் கூறியவன் போல, சட்டையின் காலரை கெத்தாக தூக்கிவிட்டுக் கொண்டான் பவன்.


அவனின் செய்கையை ரசித்து சிரித்தவர்கள், 'பவன் வரலன்னா நமக்கு போர் அடிச்சிருக்கும்' என்று தங்களுக்குள்ளே பேசிக் கொண்டே உணவகத்தை நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.


இலியாவும் மனசு மாறி அவர்களோடு சென்றுவிட, அசையாது நின்றிருந்த லஷ்மிகாவின் கையை கிள்ளினான் பவன்.


"ஏய்... கையை எடுத்துக்குடா கிள்றா?"


"அவங்களாம் ஹோட்டலுக்கு போறாங்க வா மங்கி போவோம்" என்று லஷ்மீகாவின் கைப்பிடித்து இழுத்தான்.


இருவரும் உணவகத்திற்குள் நுழைந்தார்கள்.


அனைவரும் ஒரு இடம் பார்த்து அமர்ந்தவுடன், அவரவருக்கு பிடித்தமான உணவை, விலைப்பட்டியலைப் பார்த்து, தேர்வு செய்து முடித்தனர்.


லஷ்மீகா மட்டும் எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.


அவளை எதார்த்தமாக பார்த்த தர்ஷா, "லஷ்மீ.... ஏன்டி ஒரு மாதிரி இருக்க?" எனக் கேட்டாள்.


"என்னென்னு தெரிலடி, லைட்டா ஹெட்டேக்கா இருக்கு" என்று, நெற்றியில் விரல்களை வைத்து மெல்லத் தேய்த்தாள்.


"அச்சச்சோ சாரிடி... நான் ஆப்டர்நூன் சாப்பிடல. அதான் ரொம்ப பசிக்கிது. சீக்கிரம் சாப்பிட்டுட்டு கிளம்பிருவோம் ஓகே வா" என்று லஷ்மீயை ஆறுதல் படுத்திவிட்டு, அவளுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டு, அதையும் தங்களுடைய உணவுப் பட்டியலோடு சேர்த்து, உணவகப் பணியாளரிடம் கூறினாள் ஐஸ்வர்யா.


சில நொடிகள் கடந்தது.


தாங்கள் தேர்வு செய்த உணவு வகைகளை பணியாளர் கொண்டு வராமல் சிறிது தாமதபடுத்தவும், "ஹே தர்ஷா!!! நீ கார்லதான வந்திருக்க? என்னை வீட்ல ட்ராப் பண்ணிடுறீயா? பஸ்ல போனா லேட்டாகும்ப்பா" எனத் தயங்கித் தயங்கி தர்ஷாவிடம் கேட்டாள் இலியா.


அவளின் முகத்தில் பயம் அப்பட்டமாகத் தெரிவதைப் பார்த்துவிட்டு, "இப்படி எதுக்கெடுத்தாலும் பயந்துட்டே இருந்தன்னா நீ வாழவே முடியாது. லைஃப்ல ரொம்ப கஷ்டப்படுவ இலியா.


நாம என்ன கொலையா பண்ணிட்டோம். இப்படி பயப்படற?ஜஸ்ட் மூவிதான பார்க்க வந்தோம். இதுல என்ன தப்பிருக்கு? அப்படியே உங்க வீட்டுல கேட்டாலும் ஆமா, நான் மூவிக்குத்தான் போயிட்டு வந்தேன்னு தைரியமா சொல்லுடி" என்று தர்ஷா சொல்லிக் கொண்டிருக்க...


"ஹே அவளை விடுடி. எப்ப பார்த்தாலும் எதுக்கெடுத்தாலும் பயந்துட்டே இருப்பா. அவளை இந்த ஜென்மத்துல திருத்தவே முடியாது. நாம பார்த்த படத்துல ரேயன் சூப்பரா இருந்தார்ல?" என்றாள் தீவிதா.


"ஆமாடி!!! அவருக்கு போலீஸ் ட்ரெஸ் தான் மத்த காஸ்ட்யூஸை விட சூப்பரா இருக்கு. செம்ம அழகாக இருக்காரு சான்சே இல்ல. ரேயன் வைஃப் ரொம்ப கொடுத்து வச்சவங்க" என்றாள் ஐஸ்வர்யா.


"அவரைப் போல ஒரு போலீஸ் ஆபிசர் நிஜத்திலும் இருப்பாங்களாடி? எனக்குப் போலீஸ் ட்ரெஸ் போட்டு இருக்கிறவங்களை பார்த்தாலே பயம்" என்று சந்தேகமாய் தோழிகளிடம் கேட்டாள் இலியா.


அப்போது உணவு வகைகளை பணியாளர் கொண்டு வந்தார்.

அவற்றை வாங்கி ஒவ்வொருக்கும்  கொடுத்த படி, "நீ பகல்ல உன்னோட நிலழை கூட பார்த்து பயப்படுறவளாச்சே... நீயெல்லாம் பேசாத. ஸ்கிரீன்ல காட்டுற மாதிரி நல்லவங்களும், கெட்டவங்களும் இந்த உலகத்துல இருக்கத்தான் செய்வாங்க" எனக் கூறிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள் தர்ஷா.


இலியாவோ யோசனையுடன் சாப்பிட ஆரம்பிக்க,


அவளைப் பார்த்துக் கண்கள் சுருங்கச் சிரித்த பவன், "நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். லஷ்மீ கிட்ட கேட்டுப் பாருங்க?" எனக் கூறிவிட்டு தோசையை பிய்த்து வாய்க்குள் திணித்தான்.


"ஹாங்!!! உன்னை போலத் தான்டா இருக்கணும் செல்லக்குட்டி" குண்டு குண்டுவென இருந்த பவனின் கன்னங்களைப் பற்றிச் செல்லம் கொஞ்சினாள் ஐஸ்வர்யா.


இப்படியாக பேசிய படி சாப்பிட்டு முடித்து, அவரவர் சாப்பிட்டதற்குரிய பணத்தை தர்ஷாவிடம் கொடுக்கவும், அதனை அவள் உணவகத்தின் பணியாளரிடம் கொடுத்தாள்.


உணவகத்தில் இருந்து இரண்டு சக்கர வாகனதரிப்பிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். ஆனால் லஷ்மீகாவோ... அவர்களுடன் சேர்ந்து நடக்காமல் யோசனையுடன், கால் போன திசையில் நடப்பவள் போல பவனின் உதவியால் நடந்தாள்.


வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

நூற்றுக்கணக்கான வாகனத்தில், தங்களுடைய இரண்டு சக்கர வாகனத்தை அடையாளம் கண்டு, ஒருவர் பின் ஒருவராக சாலையை அடைந்தார்கள்.


"ஹே... எல்லோருக்கும் பை. நான் கிளம்பறேன்டி" எனக் கூறிவிட்டு தர்ஷாவின் நான்கு சக்கர வாகனத்தினுள் அமர்ந்தாள் இலியா.


அவ்விருவரும் நகர்ந்துவிட, ஐஸ்வர்யாவும், தீவிதாவும் லஷ்மீகாவிடம் விடைபெற்று, தங்களது இரண்டு சக்கர வாகனத்தில் கிளம்பினார்கள்.


தோழிகள் நால்வரும் கிளம்பி விட, லஷ்மீகாவோ, தன் உயிருக்கு உயிரானவர்களை அவ்வேளையில் பிரிவதைப் போன்ற அவஸ்தையோடு, திரையரங்கை ஒரு தரம் திரும்பிப் பார்த்துவிட்டு,  மெதுவாக வாகனத்தைக் கிளம்பினாள்.


அவளை யோசனையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பவன், "ஹே என்ன யோசிச்சிட்டு இருக்க, டாங்கி?  நீ வண்டியை ஓட்டுறீயா இல்ல... நான் ஓட்டவா?" என்று வண்டியை ஓட்ட தெரிந்தவன் போலக் கேட்டான்.


அவன் புறம் திரும்பிய லஷ்மீகா சலிப்புடன், "உட்காரு மங்கி.

உன்னை போய்க் கூட்டுட்டு வந்தேன் பாரு" என்று அவனை சடைத்தபடி, இரண்டு சக்கர வாகனத்தை மெல்ல இயக்க ஆரம்பித்தாள்.


"நீ கூட்டிட்டு வரலன்னா எனக்கு தியேட்டருக்கு வர தெரியாதா? நானும் உன்னை மாதிரி பெரிசா ஆனதும், என் ஃப்ரெண்ட்ஸோட இங்கலாம் வருவேன். ஜாலியா என்ஜாய் பண்ணுவேன்" என்று, பேசிக் கொண்டே வந்தான் பவன்.


அதனை காதில் வாங்கியும் வாங்காதது மாதிரியும் தங்களுடைய வீட்டை அடைந்தாள் லஷ்மீகா.


வீட்டிற்குள் நுழைந்தவுடன் வேகமாக ஹாலில் இருந்த டெலிபோன் ரிசீவரை கையில் எடுத்து பொத்தனை அழுத்தினான் பவன்.


அவனைக் கண்டுக்கொள்ளாது வீட்டு கதவை சாற்றி, சாவியை கொண்டு கதவை பூட்ட முயன்றாள்.


"டாடி!!! டாங்கி என்னை சினிமாவுக்கு கூட்டிட்டுப் போனா"

என்று, சினிமாவிற்கு சென்று வந்த பின்னர் தந்தையிடம் கூறி கொண்டிருந்தான்.


அவன் பேசியதை கேட்டுவிட்டு அதிர்ந்தவள், 'பயப்புள்ள போட்டுக் கொடுத்திருச்சே' என்று மனதிற்குள் நினைத்துவிட்டு, கதவை வேகமாக பூட்டிட்டு, வேகமாக பவன் அருகில் சென்று ரிசீவரை பறித்தாள்.


"டாடி!!! என் ஃப்ரெண்ட் தர்ஷாவுக்கு இன்னைக்கு பர்த்டே. ஸோ... சினிமா போகலான்னு போனோம்" என்று தயங்கியபடி தந்தையிடம் கூறினாள் லஷ்மீகா.


"ஓகே பேபி... பட் டாடி கிட்ட இன்பார்ம் பண்ணிட்டு நீ போயிருக்கணும்" என்று மறுபக்கம் சற்று கோபமாக கூறினார் அவர்களின் தந்தை சரத்.


"சாரி டாடி" எனக் கூறிவிட்டு இவணக்கம் தழை கடித்துக் கொண்டாள் லஷ்மீகா.


"கதவை நல்லா லாக் பண்ணிட்டு இரண்டு பேரும் பெட்டுக்குப் போங்க சாப்பிட்டிங்களா?" என்று பேச்சை மாற்றினார் சரத்.


'ஓகே மன்னிச்சிட்டேன்' என்று உடனடியாக மன்னிப்பை வழங்கும்  தந்தையிடம் இருந்து அந்த  வார்த்தையை எதிர்ப்பார்த்தவள், அவர் சட்டென்று வேற பேச்சிற்கு தாவவும், அவர் தன் மீது கோபம் கொண்டுவிட்டார் என யுகித்துகொண்டு, "நாங்க சாப்பிட்டோம் டாடி" என்று தனிவான குரலில் முணங்கினாள். எப்படியும் நேரில் தந்தையை பார்க்கும் போது தனக்கு சரியான மண்டகப்படி கிடைக்கும் என்று மனதிற்குள் எண்ணினாள் லஷ்மீகா.


"ஃபோனை பவன் கிட்ட கொடு"


எப்பவும் அன்போடு பேசும் தந்தை ஓரிரு வார்த்தையோடு பேச்சை நிறுத்திவிடவும், அருகில் அமர்ந்திருந்த பவனை முறைத்துப் பார்த்தபடி கோபமாக... அவன் கையில் ரிசீவரை திணித்தாள் லஷ்மீகா.


பவனோ... "சொல்லுங்க டாடி" என்று கொஞ்சலாக பேச ஆரம்பித்தான். அவன் பேசுவதை கேட்க சகிக்காமல் எழுந்து அறைக்கு நகர்ந்தாள்.




***




 ஹாய் ப்ரெண்ட்ஸ்!!! 

இது ஏற்கனவே ஒரு போட்டிக்காக எழுதிய கதை பட் கதையை நான் எங்கும் பதிவிட வில்லை. டீச்சர் மட்டும் தான் பதிவிட்டேன். இது பாதி வரை எழுதிருக்கேன் அதனால் தற்சமயம் பதிவிடுகிறேன். ஆனால் பெரிய கதை. படித்துப பாருங்கள். தங்களது கருத்துக்களை கூறுங்கள். 

நன்றி 

சாய்லஷ்மி 😁



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *