வியாழன், 20 அக்டோபர், 2022

அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 11


அத்தியாயம் : 11

திரையரங்கில் இருந்து இருவரும் வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்கள்.

இவ்வளவு நாளாக சல்லடை போட்டு தேடி கொண்டிருந்த தன் ஆசை நாயகனை கண்டுவிட்ட சந்தோஷத்தில், "டே மங்கி!!! இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டா" என்று தமயனிடம் கூறினாள் லஷ்மீகா.

"நீ மட்டும் சந்தோஷமா இருந்தா எப்படி? நானும் சந்தோஷமா இருக்க வேணாமா?" எனக் கேட்டான் பவன்.

அவன் என்ன கேட்க போகிறான் என்று மனதிற்குள் யோசித்தபடி, "அதுக்கு நான் என்னடா பண்ண?" எனக் கேட்டாள் லஷ்மீகா.

"எனக்கு ஸ்கூட்டி ஓட்ட கத்துக்கொடு இப்பவே" என்றான்.

"இன்னும் கொஞ்சம் நீ பெரியவனா ஆனதும் கத்துத்தரேன் டா"

"நோ நோ இப்பவே கத்துக்கொடு" என்று அடம்பிடித்தான் பவன்.

அவனை சமாதானப்படுத்த எண்ணியவள், "சரி வா சும்மா முன்னால வந்து நிக்க மட்டும் செய்" என்று வாகனத்தை நிறுத்தி, தமயனை முன்னால் வந்து நிற்கும்படி பணித்தாள்.

அவனோ… அவளை பின்னுக்குத் தள்ளி அவள் இடத்தில் உட்கார்ந்து வண்டியை ஓட்டத் துடித்தான்.

அவனது கையை வண்டியின் கைபிடியின் மீது வைத்து, அதற்கு மேல் தன் கையை வைத்து, மெல்ல வண்டியை இயக்கி வந்தாள் லஷ்மீகா.

ஆனால், பவன் சும்மா இல்லாமல்  வண்டியின் வேகத்தை சட்டென்று கூட்டி விட்டுவிட்டான்.

அதனால் வேகமாகச் சென்ற வண்டி குறுக்கே இருந்த போன் கடைக்குள் பாய்ந்துவிட்டது.

லஷ்மீகா வண்டியின் வேகத்தை குறைப்பதற்குள் விபத்து நடந்திருக்க, இரண்டு பேரும் கடையினுள் வண்டியோடு கவிழ்ந்தார்கள்.

கடையினுள் முன்னால் இருந்த கண்ணாடி  உடைந்து விழுந்திருந்தது. மேலும் கடையினுள் நின்றிருந்த இருவர், நடந்த கலவரத்தில் கீழே விழுந்து கிடந்தார்கள்.

இதனை எல்லாம் பார்த்துவிட்டு, 'வசமா மாட்டிக்கிட்டமா?' என்று மனதிற்குள் பயந்தபடி எழுந்து நின்றாள் லஷ்மீகா.

பவனோ, கைக்கால்களை உதறிய படி எழுந்தான்.

அவனின் அருகில் குனிந்து  காதருகே, "ஹே எல்லாம் உன்னால தான்டா. நீ எதுவும் பேச வேணாம். நான் பேசிச் சமாளிச்சுக்கறேன்" என்று யாருமறியா வண்ணம் திட்டினாள்.

"நீ ஒழுங்கா எனக்குக் கத்துத் தராம பழியை என் மேல போடுறீயா????" என்று அவளிடம் சண்டைக்கு விரைந்தான் பவன்.

இந்த சமயம் போய் எப்படி பேசுகிறான் என்று மனதிற்குள் எண்ணிய லஷ்மீகா, சைகையால் அவனை வாயை மூடி கொள்ளும்படி கூறிவிட்டு நிமிர்ந்தாள் லஷ்மீகா.

கடையினுள் இருந்தவர்கள் வண்டியை எடுத்து நிறுத்திவிட்டு, "என்னம்மா? என்ன வண்டி ஓட்டுறிங்க ஹாங்???? இவ்வளவு பொருள் சேதாரமாச்சு? என்ன பதில் சொல்லப் போறிங்க?" என்று கோபமாக கேட்டார்கள்.

"சார்!!! வண்டி திடீர்னு இப்படி வேகமா போகும்னு தெரியாது சார்" என்று  பயத்துடன் பதில் அளித்தாள் லஷ்மீகா.

"அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. உடைஞ்ச பொருளுக்கு பணத்தைக் கொடுத்துட்டுப் போங்க"

'பணமா??? கடைக்கே பில் போடுவான்க போல இருக்கே' என்று மனிதற்குள் எண்ணியவள், "அய்யோ சார்!!! ஏதோ தெரியாம நடந்திடுச்சு. எங்களை விட்டிருங்க சார். என்கிட்ட பணமெல்லாம் இல்ல" என்று பொய் கூறினாள்.

"என்னம்மா? எப்படி விட முடியும்? உடைஞ்ச பொருளுக்கு ஐம்பதாயிரம் பணத்த, ஒழுங்கா கொடுத்துட்டுப் போங்க. இல்லன்னா, உங்க வீட்டு ஆட்கள் யாரையாவது போன் போட்டு வரச் சொல்லுங்க" என்று கோபமாக கூறினார் கடைக்காரர்...

இரண்டு பேரும் திருதிருன்னு முழித்தார்கள். அதற்குள் கடையின் வாசலில் பத்து பதினைந்து பேர் கூடிவிட்டனர்.

"சார்!!! வீட்ல உள்ளவங்க ஊ… ஊருக்குப் போயிருங்காங்க" என்று மறுபடியும் பொய் கூறினாள் லஷ்மீகா.

'டாங்கி ஏன் பொய்க்கு மேல பொய் சொல்றா?' என்று  மனதிற்குள் பவன் யோசிக்க…

அப்போது அதிரடியாக கடைக்குள் வந்தான் சித்தார்த்தன்.

அருளின் ஆட்களை பிடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருந்தவன், கடையின் முன்பு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து, சந்தேகமாய் உள்ளே வந்தான்.

அவனைக் கண்ட நொடி  லக்ஷ்மிகா மிகவும் சந்தோஷப்பட்டாள்.

உண்மையில் அவன் தானா? என்று மனதிற்குள் ஆனந்த ஆதிர்ச்சி அடைந்தவள், மறுகணம்  இப்படியான தருணத்தில் அவனை முதன் முறையாக பார்க்கிறோமே என்று வருந்தினாள்.

"என்ன இங்க ப்ராப்ளம்?" எனக் கேட்டுவிட்டு கடையைச் சுற்றி முற்றி நோட்டமிட்டான்.

கடையில் இருந்த ஒருவர், அவனிடம் நடந்தவற்றைக் கூறினார்.

உடனே லஷ்மீகாவின் புறம் திரும்பியவன், அவளை பார்வையால் துளைத்தெடுத்துவிட்டு, "லைசென்ஸ் இருக்கா? இல்ல, இப்ப தான் புதுசா வண்டி ஒட்டுறிங்களா?" என்று கணீரென்ற குரலில், அதே சமயம் முகத்தை இயல்பாக வைத்த படி கேட்டான்.

"என்கிட்ட கார் லைசன்ஸ் வரை இருக்கு சார். நான் பைவ் இயர்ஸா நல்லா ட்ரைவ் பண்ணிட்டு இருக்கேன். ஆனா… ஸ்கூட்டில என்ன ப்ராப்ளம்னு தெரியல. திடீர்னு  கடைக்குள்ள வந்திடுச்சு. என்னால ஸ்பீடை கன்ட்ரோல் பண்ண முடியல" என்று தயக்கத்துடன் அவனைப் நோக்கினாள்.

'முதல் சந்திப்பிலே பொய் சொல்ல வேண்டியதா போச்சே! எல்லாம் பவனால வந்தது!' என்று மனிதற்குள் பவனை திட்டினாள் லஷ்மீகா.

கடைக்காரர் புறம் திரும்பியவன், "கடை பெயர்ல இன்சூர்
பண்ணிருக்கிங்களா?" எனக் கேட்டான் சித்தார்த்தன்.

உடனே கடைக்காரர் தலையைச் சொறிந்தார்.

அவர் ஏன் பதில் சொல்லாமல் மெளனம் சாதிக்கிறார் எனப் புரிந்துகொண்டு, "உடைஞ்ச பொருளுக்கு என்ன ஒரு டொன்டி தவுசண்ட் ஆகுமா?" என்று குத்து மதிப்பாக  உடைந்த பொருளுக்கான மதிப்பு பற்றி கேட்டான்.

"அதுக்கு மேலேயே ஆச்சு சார்" என்று சட்டென்று கூறினார் கடைக்காரர்.

"இதுக்கு மட்டும் டக்குன்னு பதில் வருது. இன்சூரன்ஸ் பத்தி பதில் வரல???" என்று புருவத்தை உயர்த்தி கேட்டான்.

"நாள… நாளைக்கே பையனை விட்டு இன்சூரன்ஸ்க்கு அப்ளை பண்ணிடுறேன் சார்" என்றார் கடைக்காரர்.

அவரிடம் கடை எப்பொழுது ஆரம்பித்தீர்கள்? அது எப்போது வாங்கினீர்கள்? இது எப்போது வாங்கினீர்கள் எனக் கேட்டு தெரிந்துவிட்டு, லஷ்மீகா புறம் திரும்பி, "நீங்க ஒரு பத்தாயிரம் அமெளண்ட், இவங்க கிட்ட கொடுத்துட்டு கிளம்புங்க" என்றான்.

'பணம் கொடுக்கணுமா?’ என்று மனதிற்குள் தயங்கியவள், அவன் முன்பு எதிர்ப்பைக் காட்டமுடியாமல், அதே சமயம் கடைக்காரர் கேட்ட ஐம்பதாயிரம் பணத்திற்கு, இது எவ்வளவோ பரவாயில்லை என்று மனதிற்குள் எண்ணிவிட்டு, “ஜிபே இருக்கா?" என்று கடைக்காரரிடம் கேட்டாள் லஷ்மீகா.

அவர் இருக்கு என்று கூறவும், அந்த செயலி மூலம் பணத்தை செலுத்திவிட்டு வண்டியை இயக்க முயன்றாள்.

"ஹலோ!!! மறுபடியும்   வேறெந்த கடையையாவது காலி பண்ணப் போறிங்களா?"  என்று சற்று அதட்டுவது போல கேட்டான் சித்தார்த்தன்.

அவனின் கேள்வியில் பதில் சொல்ல முடியாத தவித்தவள், திருதிருவென கண்களை  விழித்தாள் லஷ்மீகா.

"வீடு எங்க?"

"தாம்பரம் சார்"

"இப்ப ஆட்டோ பிடிச்சிப் போங்க. நாளைக்கு  உங்களுக்குத் தெரிஞ்ச மெக்கானிக்க வரச் சொல்லி ஸ்கூட்டிய எடுத்துக்கங்க"

"ஓ… ஓகே சார்" எனக் கூறிவிட்டு வாகனத்தினுள் இருந்த தன்னுடைய உடைமைகளை  எடுக்க ஆரம்பித்தாள் லஷ்மீகா.

"நாளைக்கு அவங்க வந்து வண்டிய எடுத்துக்குவாங்க. அப்ப... அவங்ககிட்ட  எந்த ப்ராப்ளமும் நீங்க பண்ணக் கூடாது. முதல்ல கடை பெயர்ல இன்சூர் பண்ணுங்க. தென் வண்டி பத்திரம்" என்று கடைக்காரரிடம் உத்தரவிட்டு,  பவனை அழைத்துக் கொண்டு லஷ்மீகா வெளியில் நகரவும், அவர்களது பின்னால் வெளியில் வந்த சித்தார்த்தன், சாலையில் வந்த ஒரு ஆட்டோவை கைகாட்டி சட்டென்று நிறுத்திவிட்டு, லஷ்மீகாவின் அருகில் வந்தான்.

அவனது அருகாமையில் மனதிற்குள் சொல்ல தெரியாத ஒரு உணர்வில் தவித்தாள் லஷ்மீகா.

அவளது காதோரமாய், "வீட்டுக்குப் போனதும் 8255.. இந்த நம்பருக்குக் கால் பண்ணி ‘வி ஆர் சேப்னு' சொல்லுங்க. இல்ல ஏதாச்சும் ப்ராப்ளம்னா உடனே இந்த நம்பர்க்கு கால் பண்ணுங்க" என்று, தனிவான குரலில் கூறினான் சித்தார்த்தன்.

'நாமளே இவனோட செல்போன் நம்பரை கண்டுப்பிடிக்கனும்னு நினைச்சோம். ஈசியா கிடைச்சிருச்சு. நமக்கு ஒரு வேலை மிச்சம்' என்ற சந்தோஷத்தில், "சரிங்க சார்" என்று மகிழ்ச்சியாக தலையாட்டினாள் லஷ்மீகா.

அவர்களை ஆட்டோவில் ஏறும் படி சைகையில் கூறினான்.

அவனிடம் நன்றி தெரிவித்துவிட்டு, ஆட்டோவிற்குள்  இருவரும் அமர்ந்தார்கள். ஆட்டோ நகர்ந்தது.

வீடு வரை அவன் பேசியதை நினைத்து நினைத்துச் சந்தோஷப்பட்டு கொண்டவள், வீட்டிற்குள் நுழைந்ததும், சத்தமாக தொலைக்காட்சியில் பாட்டு வைத்து ஆட ஆரம்பித்தாள்.

அவளையே வேடிக்கை பார்த்த பவனையும், கைப்பிடித்து இழுத்து  தன்னோடு ஆட வைத்தாள்.

இரண்டு பேரும் சிறிது நேரம் ஆடிவிட்டு, சோர்வாக மஞ்சத்தில் கவிழ்ந்தார்கள்.

"டா...ங்கி!!! உன் மே...ல எனக்கு டவுட்டா இருக்கு?" என்று மூச்சு வாங்கக் கேட்டான் பவன்.

அவனின் கேள்வியில் இதழோரமாய் சிரித்தவள், 'இனி… இவனை ரொம்ப சமாளிக்க வேண்டியிருக்கும்' என்று மனதிற்குள் எண்ணியபடி, "என்ன டவுட்???" எனக் கேட்டாள்.

"என்கிட்ட எதையோ மறைக்கிற"

"அய்யையோ!!! ஆபிஸர் கால் பண்ணச் சொன்னாரே!" என்று நினைவுவந்தவளாக  அவன் கூறிய எண்களுக்கு அழைப்பு விடுத்தாள்.

மறுபக்கம் அழைப்பு ஏற்கபட்டதும், "வி ஆர் சேப், சார்" என்றாள் சந்தோஷமாக...

"ஓகே மேடம்!!! உங்க குழந்தைய பத்திரமா பார்த்துக்கங்க.  யாராவது குழந்தையை கடத்திட்டா, ஆர் குழந்தையைக் காணோம்னா, உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க. இப்ப… சிட்டில குழந்தைங்கள அதிகமா கடத்துறாங்க அந்த கேஸ் தான் போயிட்டு இருக்கு. எச்சரிக்கையா இருங்க" என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.

"ஹலோ!!! இது சித்தார்த்தன்…" என்று கத்தியவள், அழைப்பு துண்டிக்கப்பட்டதும், அவன் எதற்காக அழைக்கச் சொல்லியிருக்கிறான் என்று புரிந்து கொண்டாள் லஷ்மீகா.

***


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *