சனி, 15 அக்டோபர், 2022

அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 9

 

அத்தியாயம் : 9

இலியாவின் பேச்சில் பவன் எதாவது நினைத்துக் கொள்வான் என்று, "ஹே மங்கி... இலியாவைத் தவிர, எங்க நாலு பேருக்கும் வேலை கிடைச்சிருக்கு. அதுவும் ஒரே கம்பெனில… அதான் ஹைலைட். சேல்ட்ரீ வாங்கியதும் சர்ப்ரைஸா சொல்லலான்னு இருந்தேன். அதுக்குள்ள இலியா விஷயத்தை போட்டு உடைச்சிட்டா" என்றாள் லஷ்மீகா.

உடனே தமக்கையை கட்டிப்பிடித்தான் பவன். "வாவ்!!! டாங்கி சூப்பர் ந்யூஸ். இந்த விஷயத்தை நீ முதல்லையே சொல்லிருக்கலாம்ல? நான் பெரிசா ஏதாவது கேட்டிருப்பேனே?" என்று கண்களை உருட்டிய படி கூறினான்.

தீவிதாவோ… "பெரிசா, அப்படி என்னடா கேட்க போற?" எனக் கேட்டாள்.

"டாங்க்கிக்கு கார் இருக்கு, டாடிக்கு கார் இருக்கு. எனக்கும் கார் வேணும்" என்று அனைவரையும் பார்த்தான்.

அவனை நினைத்து வியந்த வண்ணம், "இவன் பெரிய பையனானான்… பெரிய ஆளா வருவான்டி" என்றாள் தர்ஷா.

"இப்பவும் எங்க வீட்ல இவன் தான்டி பெரியவன். இவன் கிட்ட கேட்டுத்தான், என் டாடி எதுனாலும் வாங்குவாங்க. இப்ப கூட, இவனுக்குப் பிடிச்ச ப்ளாட் ஒண்ணு வாங்கப் போறாங்க அதுவும் இவன் பெயர்ல" என்றாள் லஷ்மீகா.

தர்ஷாவோ, "நல்லவேளை எங்க நாலு பேர் வீட்லையும் நாங்க ஒரே பொண்ணுங்க. காம்படீஷனுக்கு ஆளே இல்ல" என்றாள்.

"நானும் ஒரே ஒரு பொண்ணா இருந்திருப்பேன்டி. ஆனா... சின்ன வயசுல இருந்து டாடியும், மம்மியும் ஆபிஸ் போடுவாங்க. விளையாட, பேச்சுத் துணைக்கு ஆள் வேணும்னு... எனக்கு ஒரு தம்பி பாப்பா வேணும்னு கேட்டேன். அதனால வந்த விணை தான் இவன்" என்று அவனது தலையில் செல்லமாகக் கொட்டினாள் லஷ்மீகா.

"நான் பிறந்ததால தான், நீ என் பெயரை சொல்லி, டாடி கிட்ட நிறைய பணம் வாங்கற?" என்றான் பவன்.

"அந்த பணத்துக்கு நல்லா வேட்டு வைக்கற???"

இப்படியாக இருவரும் சண்டை போட்டுக் கொள்வதை வேடிக்கை பார்த்த வண்ணம் தோழிகள் சாப்பிட்டு முடித்தார்கள்.

அனைவரும் சாப்பிட்டு முடிந்ததும் ஒவ்வொருவராக தாங்கள் வந்த வாகனத்தில் வீட்டைப் பார்த்து கிளம்பினார்கள்.

வீட்டை அடைந்ததும், அறைக்குள் நுழைந்து மஞ்சத்தில் குப்புற கவிழ்ந்த லஷ்மீகா, மனசு நிறைய சந்தோஷத்துடன், கண்களை மூடி மதியம் பார்த்த காவலனை பற்றி எண்ண ஆரம்பித்தாள். 

காவலதிகாரியான சித்தார்த்தன், இன்று, தன்னால் ஒரு உயிர் உடலை விட்டுப் பிரிந்ததை நினைத்துக் கலக்கத்துடன் வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தான்.

'என் கையால சாகணும்னு விதியோட பிறந்திருப்பான் போல!' என எண்ணியவாறு,  குறைந்தது இரண்டடி தூரம் இடைவெளியில் அமைய பெற்ற சாலையில், முதல் வீட்டிற்கு முன்னால் வாகனத்தை நிறுத்தினான்.

வீட்டைச் சுற்றிலும் மரம், செடி, கொடிகள், அதன் நடுவில்  நவீன வடிவமைப்பில், கண்களைக் கவரும் வண்ணம் ஒரு அழகிய வீட்டை தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்திருந்தான்.

வீட்டிற்குள் நுழைந்ததும், கண்ணாடியால் அலங்கரிக்கப் பட்ட அலமாரிகள், அறைகதவுகள் மற்றும் ஆங்காங்கே பூச்செடிகள், பெயிண்டிங் என்று அவனுடைய ரசனைக்கேற்ப வீட்டைச் செதுக்கியிருந்தான் என்று தான் சொல்லணும்.

தன் கையால் ஒருவன் இறந்துவிட்ட சேதியை மறக்க நினைத்து, துவலைக்குழாயின் அடியில் குறைந்தது ஒரு அரைமணி நேரமாவது நிற்க வேண்டும்  என்று விரும்பியவனாக, குழாயை திறந்து அதன் அடியில் கண்களை மூடி நின்றான்.

சில நொடியில் அவனது கைபேசி ஒலி எழுப்பும் சத்தம் கேட்டது. உடனே இடையில் துண்டை சுற்றி  கொண்டு குளியலறையிலிருந்து வேகமாக வெளிய வந்து அழைப்பை ஏற்றான்.

"சார்…. இம்பார்டெண்ட் மீட்டிங் அரேஞ்ச் பண்ணிருக்காங்க. டிஜிபி ஆபிஸ் வந்திருங்க" என்று மறுபக்கம் கூறினார்கள்.

"ஓகே" என்று பதிலளித்துவிட்டு, அடுத்த நொடி தனக்குரிய காவல் உடைக்கு மாறினான். 

அறையை விட்டு நகர முயன்றவன், ஒரு நிமிடம் நின்று பொறுமையாக  கண்ணாடியில் தன்னைக் கவனித்தான்.

ஈரமாக இருந்த  முடிக்கற்றையை கைகளால் இரண்டு தரம் கோதிக் கொடுத்து, முடிக்கற்றையை சரி செய்ய முயற்சி செய்தான். அது அடங்க மறுக்கவும், 'நமக்கே அடங்க மாட்டிங்கிதே' என்று மனதிற்குள் எண்ணிவிட்டு, கைபோனை மறக்காமல் எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தான்.

"தம்பி சாப்பாடு எடுத்து வைக்கவா" என்று சமையல்காரர் மணி கேட்டார்.

"இல்லண்ணே சாப்பிட நேரமில்ல" எனக் கூறிவிட்டு வாகனத்தை அடைந்தான்.

'இந்த தம்பி இப்படி சாப்பிடாம இருக்கே. வேலை இருக்க வேண்டியது தான் அதுக்காக சாப்பிடாம வேலை பார்க்கனும்னு சட்டமா' என்று மனிதற்குள் எண்ணினார் மணி.

வாகனத்தை இயக்க ஆரம்பித்த சித்தார்த்தன், ஒரு கையால் வாகனத்தை இயக்கியபடி மற்றொரு கையால் ஈரமாக இருந்த முடிக்கற்றையை கலைத்து விட்டபடி, தன்னை நோக்கிப் படையெடுத்து வரும் தென்றலுடன் முடிகற்றையை மோதவிட்டான். அதனால், சிறிது நேரத்திலே முடிக்கற்றையில் பதுங்கியிருந்த ஈரம் காற்றோடு கரைந்து போய், பஞ்சு மெத்தை போன்று தலை முடி அடர்த்தியாக மாறியது.

எப்படியோ தென்றலோடு போட்டி போட்டுக் கொண்டு வேகமாக வாகனத்தை இயக்கியபடி, தமிழ்நாடு காவல்துறை கிளை சென்னை என்று பெயர் தங்கியிருந்த கட்டிடத்தின் அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு,  வேகமாக அலுவலகத்திற்குள்  நுழைந்தான்.

அங்கே, அவனைப் போல சக அதிகாரிகள்  வந்திருந்தனர். அவர்களில் தன் பெயர் எழுதியிருந்த இடத்தில் சென்று அமர்ந்தான் சித்தார்த்தன்.

சில நொடியில் 'த சென்டர் ஆப் பவர்' என்கிற, காவல் துறையிலே உயர் பதவியான, காவல்துறைத் தலைமை இயக்குனர் டிஜிபியின் வருகையை கண்டுவிட்டு, அனைவரும் எழுந்து நின்றனர்.

அவர் இருக்கையில் அமர்ந்ததும் அவர் அனுமதி அளித்ததும் அனைவரும் இருக்கையில் அமர்ந்தனர்.

"மிஸ்டர் சித்தார்த்தன். உங்களுக்கென்ன, மனசுக்குள்ள எமதர்மன்னு நினைப்பா? போட்டுத் தள்ளுறதுல உங்க ஆர்வத்தை அவ்வளவு காட்டுறிங்களாமே?" என்று எடுத்த உடனே சித்தார்த்தனை  வார்த்தையால தாக்க ஆரம்பித்தார் தலைமை அதிகாரியான வஜ்ரவேல்.

'போச்சுடா! இன்னைக்கு நமக்குக் கட்டம் சரியில்ல போல' என்று மனதிற்குள் நினைத்தபடி எழுந்து நின்றான் சித்தார்த்தன்.

மற்ற அதிகாரிகள் வஜ்ரவேல் கேட்ட கேள்வியை நினைத்து, மெல்ல தங்களுக்குள் புன்னைகைத்துக் கொள்ள… அவர்களின் புன்னைகையை கவனித்த சித்தார்த்தன், அதனை கண்டும் காணாதது போல இருந்தான்.

"முடிஞ்ச அளவு அந்த சூளைமேடு அருளை அரஸ்ட் பண்ணுங்கன்னு தான உங்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திருந்தோம். தென் ஓய் டிட் யு சூட் ஹிம்?" எனக் கணீரென்ற குரலில் கேள்வி கேட்டார்.

மற்றவர்கள் அவரது கேள்வியில் அமைதி காக்க, "நாங்களும் முடிஞ்ச அளவு ட்ரை பண்ணினோம் சார். பட், சூட் பண்ண வேண்டியதா போச்சு" என்றான் சித்தார்த்தன்.

இப்படித் தான் அவன் பதில் சொல்வான் என்று மற்ற அதிகாரிகள் மனதிற்குள் ஊகித்திருந்தார்கள்.

"நீங்க ஒருத்தரே அவனோட கதையை முடிச்சிட்டீங்க. அப்படின்னு  சொல்லுங்க, மிஸ்டர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் சித்தார்த்தன்"

வஜ்ரவேலின் குற்றச்சாட்டில் மற்ற அதிகாரிகள் மறுபடியும் மென் புன்னைகை  சிந்தினார்கள்.

நடந்த நிகழ்வுகள் வெளிப்படையாகவே எல்லோருக்கும் தெரியும். சூளைமேடு அருள், காவல்துறையால் தேடப்படும் ஒரு மிகப்பெரிய மற்றும் முக்கிய குற்றவாளி.

அவனை உயிரோடவோ அல்லது பிணமாகவோ பிடிக்க,  காவல்துறை சார்பில் பேச்சு வார்த்தை அடி பட்டது. அதனை அறிந்த அருள்... தன் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தான்.

அவனை, தனிப்படை ஒன்றை அமைத்து, நாலாபுறமும் காவல் துறையினர் தேடிக் கொண்டிருந்தனர்.

இறுதியில், சித்தார்த்தனிடம் வழக்கு கை மாறியது.

ஒரு வாரத்தில் அவனது இருப்பிடம் தெரிந்ததும், அவன் மேல் உள்ள குற்றசாட்டை வைத்து, அவனை உயிருடன் பிடித்து என்ன பயன் என்று தூப்பாக்கியால் அவனை துளைத்திட வேண்டியது தான் என்று  முடிவெடுத்து, அருளின் இறப்பு, அவனைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்று முடிவெடுத்தான் சித்தார்த்தன்.

அருளை பற்றிய  விசாரணையில் அவனிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளதாக தெரிய வரவும், அருளின் அடியாட்களை பிடித்து பணத்தை பற்றி அறியலாம் என்று, அவனின் அடியாட்களை வெற்றிக்கரமாகப் பிடித்து, தற்போது விசாரணைக்கு அழைத்து வந்திருக்கிறான்.

அவனிடம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக இரு கேள்விகள் கேட்டுவிட்டு, "ஓகே சித்தார்த்தன்!!! அருளை பற்றிய வேற எந்த டீடைல்ஸ் ஆதாரத்தோட வச்சிருக்கிங்க?" என்று முக்கியமான விஷயத்தை பேச முனைந்தார் வஜ்ரவேல்.

உடனே அருளை பற்றிய கோப்பைகளை டிஜிபியின் பார்வைக்குக் கொடுத்தான் சித்தார்த்தன்.

மற்ற அதிகாரிகளும், அருளைப் பற்றிய தகவல்களை அவரிடம் கொடுத்தார்கள்.

மலை போலக் குமிந்திருக்கும் புகாரைக் கண்டவுடன், "ஓகே! விசாரணையை தீவிரப்படுத்துங்க. அவன் கூட்டாளிகள்ல, அடுத்த அருள் உருவாகாம பார்த்துக்கங்க" எனக் கூறிவிட்டு எழுந்தார் வஜ்ரவேல்.

அனைவரும் எழுந்தனர்.

தலைமை காவலதிகாரியான வஜ்ரவேல் கொஞ்சம் நகர்ந்ததும், "சார் வாழ்த்துக்கள்!!! இந்த கேஸ்ல உங்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்க வாய்ப்பிருக்கு" என்று, முன் வந்து சித்தார்த்தனிடம் தங்களது வாழ்த்துகளை மற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாழ்த்து கூறியவர்களிடம் புன்னகை முகமாக நன்றி தெரிவித்தான் சித்தார்த்தன்.

அப்போது அவனது அருகில் வந்து, "சூப்பர் சித்து" என்று ஒருமையில் வாழ்த்தினாள் விஷாலாக்க்ஷா ஐபிஎஸ்.

மற்றவர்களை விட, அவளிடம் சற்று  இதழை விரித்துச் சிரித்து, "தேங்க்ஸ் விஷா" என்றான் சித்தார்த்தன்.

இருவரும் பேசிய படி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார்கள்.

அவ்விருவரும் எப்போதும் ஒன்றாக வருவதையும், போவதையும் கண்டு, விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக, அவர்களது துறையில் பரவலாக, பேச்சு ஒன்று எழுந்தது.

அதனை அறியாத சித்தார்த்தன், தன்னுடன் சிறு வயதில் இருந்தே நட்பாக இருக்கும் தோழியிடம், மற்றவர்களை விட, சற்று அதிகப்படியாக ஓரிரு வார்த்தைகள் பேச்சு வார்த்தை வைத்துக் கொண்டான்.

ஆனால் விஷாலாக்க்ஷாவோ... மற்றவர்கள்... ஏன் அவனறியாமல், அவனை நினைவு தெரிந்த நாளிலிருந்து காதலித்து வருகிறாள்.  சொல்லப் போனால், அவனுக்காகத் தான் ஐபிஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றாள் எனலாம்.

தன் காதலை அவனிடம் தெரிவிக்க, ஒவ்வொரு நாளும் அவனுடனான பொழுதுகளை தவிப்புடன் கழித்தும் வருகிறாள்.

சமயம் கிடைக்கும் பொழுது, அவன் மீதான தன் காதலை கண்டிப்பாகச் சொல்லிவிட வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நினைத்து, ஏக்கத்துடன், தன்னை தானே சமாதானம் செய்து கொண்டிருக்கிறாள்.

அதற்கு ஏற்ப... சூளைமேடு அருள் வழக்கில் அவனுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய அருமையான வாய்ப்பு ஒன்று விஷாலாக்க்ஷாவிற்குக் கிடைத்தது.

இதற்காகத் தான், கடந்த நான்கு ஆண்டுகளாக காத்திருந்தது என்று மனதிற்குள் சந்தோஷப்பட்ட விஷாலாக்க்ஷா,

"சித்து... நெக்ஸ்ட்  ஆக்ஷன் என்ன?" எனக் கேட்டாள்.

"அவன் கூட அருளோட வொய்ஃப் தம்பி ஒருத்தன் இருந்திருக்கிறான். அவன் மட்டும் இப்ப மிஸ்ஸிங். மத்தவன்களை பிடிச்சாச்சு. அவனைப் பத்தி கொஞ்சம் விசாரிக்கணும் விஷா" என்று, வாகனத்தை ஓட்டிய படி கூறினான் சித்தார்த்தன்.

"அவன் பெயரு சிங்கமா?" என்று விஷாலாக்க்ஷா சந்தேகமாய் கேட்கவும்,

அவள் புறம் திரும்பி வியப்பாய் புருவத்தை உயர்த்திவிட்டு, "எஸ்... எஸ் அவனே தான்" என்றான்.

"அவன் இன்னொரு கேஸ்ல, இப்ப ஜெயில்ல இருக்கான் சித்து"

யோசனையாய் தலையை ஆட்டியவன், "தென்... அருள் வொய்ஃப் பத்தி விசாரிக்கணும். நீ நாளைக்கு என்கொயரி பண்ணிட்டு ஆபிஸ் வந்திடு"

"ஓகே சித்து, ஆனா எனக்கு ஒரு சந்தேகம்" எனக் கேட்டாள்.

அவள் புறம் திரும்பி, என்ன என்பது போலப் புருவங்களை உயர்த்தினான்.

அவனின் இச்செய்கை,  அவனிடம் அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

பள்ளி நாட்களில் இருந்தே அவனது இச்செய்கையை ரகசியமாய் ரசிக்கும் ரகசிய காதலி என்று கூட, அவளுக்கு பட்டம் கொடுக்கலாம்.

ஒரு நிமிடம் அவனை மெய் மறந்து பார்த்தவள், தான் கேட்க நினைத்ததை மறந்தே போனாள்.
பின்னர் சிறிது தடுமாற்றத்துடன், "அருள் தன்னோட வலது கால் தொடையில ஏதோ சீக்ரட் கோடு ஒண்ணு டாட்டூவா போட்டிருக்கான்னு சொ... சொன்னல சித்து, அது பத்தின டிலைட்ஸ் என்ன?"

"அது பத்தி தான் என்னோட அடுத்த  இன்வெஸ்டிகேஷன் விஷா. அது என்னென்னு  சீக்கிரம் கண்டுப்பிடிக்கனும். ஒருவேளை அது பணம் இருக்கிற இடத்துக்கான டிலைட்ஸா கூட இருக்கலாம்" என்றான்.

இருவரும் அருள் வழக்கு பற்றி பேசிக் கொண்டே, அருளின் அடியாட்கள் இருந்த இடத்திற்குச் சென்றனர்.


***


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *