வெள்ளி, 11 மார்ச், 2022

பூங்குயில் மெளனம்! - சிறுகதை

பூங்குயில் மெளனம்! 






அந்தி மாலையில் ஆரஞ்சு பழ நிறத்தை உரித்தாற் போன்று, கீழ் வானமெங்கும் காட்சியளிக்க... இதமான காற்றும் சேலைகளுக்கு இடையே ஊருடுவி இன்பத்தைக் கொடுக்க, இப்பிடித்தமான தருணங்களெல்லாம் சைரந்தரியை எங்கோ அழைத்துச் சென்றது.


"என் இதயக்கதவை

உன் நினைவுகள்

தட்ட...

எட்டிப்பார்கின்றன

என் விழிகள்

நீ வரும்

வழியை நோக்கி..." என்று அவளது மனம் கவி பாடியது. 


அவளின் கண்கள் வழக்கமாக பயணிக்கும் சாலையின் இருபுறமும், தேடுதலில் ஈடுபட்டது.  அவள் கண்கள் தேடிய தேடலுக்கு, இன்றும் பலனின்றி போகவும், "அடிக்கடி உன் நினைவுகள்... என் கன்னத்தை நனைக்க வைக்கின்றன" என்று மனதிற்க்குள் சொல்லிக் கொண்டாள். 


விறுவிறுவென வீட்டை நோக்கி  நடந்தாள். லேசாக எட்டிப் பார்த்த கண்ணீரை யாரும் அறியா வண்ணம் துடைத்துக் கொண்டு, வீட்டிற்குள் நுழைந்தாள்.


"வாம்மா சைலு..." 


வீட்டிற்குள் நுழைந்தவளை, அவளது அன்னை ஆனந்தி வரவேற்றதும், அவளது கற்பனையைக் கலைந்தது.


விழித்துப் பார்க்க, அங்கு முகமறியா மனிதர்கள் பலர் கூடியிருந்தனர்.  வீடே நிரம்பி வழிந்தது. அதனைப் பார்த்து விட்டுத் திருதிருவென முழித்தாள் சைரந்திரி.


"என்னம்மா இப்படி நின்னுட்டு இருக்க? சீக்கிரம் ஒரு நல்ல சேலைய கட்டிட்டு வாம்மா!" என்று ஆனந்தி கூறியதும், அவளுக்குப் புரிந்து விட்டது.  


பருவமடைந்த பெண்ணிற்கு இதெல்லாம் புரியாதாயென்ன...? மெல்லியதாக தலையை ஆட்டினாள்.


"ம்மா… சைலுவை அலங்காரம் பண்ணி கூட்டிட்டு வாம்மா. " என்று ஒரு பொண்ணை அழைத்து, அவளுடன் சைரந்தரியை அனுப்பி வைத்துவிட்டு, 


"இப்போ வந்திடுவா, இந்த மாசம் பிள்ளைங்களுக்கு பரீட்சை வேற. அதானல, ஸ்கூலில் இருந்து வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாகும்." என்று தன் மகளின் ஆசிரியர் பணியைப் பற்றி, பெருமையாய் பெண் பார்க்க வந்திருக்கும் பட்டாளத்திடம் சொல்லி கொண்டிருந்தாள் ஆனந்தி.


அவளின் முன்பு, "ஆன்ட்டி… என்ன நியாபகம் இருக்கா? நான் சைலுவோட ஸ்கூல் மேட் ப்ரெண்ட் சுஜிதா என் ஒண்ணு விட்ட பெரியப்பா பையன் தான் மாப்பிள்ளை. பொண்ணு போட்டோவைக் காமிச்சதும், இது நம்ம சைலுவாச்சேன்னு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதனால அவள் கிட்ட கூட, நான் வந்ததை இன்னும் சொல்லல." என்று, அவளது நண்பி என்றும் மாப்பிள்ளையின் தங்கை என்றும் சுஜிதா தன்னை ஆனந்தியிடம் அறிமுகம் செய்து கொண்டாள்.


"உன்னை சுஜினு தானே சைலு கூப்பிடு வா. இப்போ ஞாபகம் வந்திருச்சிம்மா. உன் கல்யாணத்துக்கு  நாங்களாம் வந்திருந்தோம். இப்போ அமெரிக்காவுல இருக்கிறதா சைலு சொன்னா. நல்லாயிருக்கியாம்மா?" என்று ஆனந்தி நலம் விசாரித்தாள்.


"நல்லா இருக்கேன் ஆன்ட்டி, என் கல்யாணத்துக்கு நாத்தனாரா இருந்து, சைலு எவ்வளவு கலாட்டா பண்ணினா? இப்போ நான் அவளுக்கு நெஜமாலுமே நாத்தனாரா ஆக போறேன்.  சைலுவை ஒரு வழி பண்ணனும்ன்னு தான் கிளம்பி வந்திருக்கேன்." என்று அவள் சொல்லவும் ஆனந்தியும் சிரித்து விட்டாள். 


அப்போது,  சைரந்தரி மணப்பெண் போன்று அலங்கரிக்கபட்டு, சபையின் நடுவில் நிறுத்தபட்டாள்.


"உன்னுடனும்

உன் நினைவுகளுடனும் பேசிப்பேசி

ஊமை மொழியும் கற்றுக்கொண்டன என் உதடுகள்." என்று நொந்துக் கொண்டவளின் உதடுகள் சிப்பு போட்டது போல மூடியிருந்தன. 


இங்கு நடப்பது யாவும் அவளின் சம்மதத்துடனும், அவளது விருப்பத்துடனும் நடை பெறுவது போல அல்ல, என்பது போல அவளது நடை, உடை, பாவனை எல்லாம் முகம் காட்டும் கண்ணாடி போன்று சொல்ல முடியாத சோகத்தைப் பிரதிபலித்தது. 


அதனை அவள் வாய் திறந்து சொல்லாமலே புரிந்துக் கொண்ட நண்பி, ‘தீடீர்ன்னு கல்யாணம் என்றால், எல்லா பெண்களுக்கும் உள்ள தயக்கம், பயம் தான் போல’ எனத் தனக்கு தானே, சைலுவின் சோகமான முகத்தைப் பார்த்து முடிவெடுத்துக் கொண்டாள் சுஜிதா.


"அப்புறம், என்ன தட்டை மாத்த வேண்டியது தானே?" எனச் சபையில் பேச்சு எழுந்ததும், திடுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் சைரந்தரி. 


அதனை சுஜிதா கவனித்தாள்.


"அது என் பொண்ணு இப்ப தான வந்தா, அவள் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்குறேன்.” என்று ஆனந்தி, தன் மகளைப் பார்க்க, நல்ல வேளை என்று மனதிற்குள் நினைத்தாள் சைரந்தரி. 


“அதுவும் சரி தான்...” என்று ஒருவர் சொல்ல,


சைரந்திரி அவளது அறையை நோக்கிச் சென்றாள். 


“ஆன்ட்டி… நான் போய் அவகிட்ட பேசிட்டு சொல்லவா?" எனறு சுஜிதா சொல்லவும்,


“பொண்ண கட்டிக்க போறவன் நான்… அதனால நானும் உன் கூட வரேன்.” எனக் கூறினான் மாப்பிள்ளை. 


அதானல் சபையில் ஒற்றும் சொல்ல முடியாத நிலையில் நின்றாள் ஆனந்தி.


"இருவரும் மனசு விட்டுப் பேசட்டும், நாளைக்குக் கல்யாணம் பண்ண போறாவங்க அவங்க தானே?" என்று மாப்பிள்ளையின் அன்னை  கூறினாள்.


சைலுவின் அறையை நோக்கி சுஜிதாவும், மாப்பிள்ளையும் சென்றார்கள்.


அவளது அறையின் வாசலில் வைத்து, "நீ முதல்ல பேசு அடுத்து நான் வரேன்." என்று முதலில் சுஜிதாவை, அவளது அறைக்குள் அனுப்பி வைத்தான்.


என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த சைரந்தரியின் அருகில் சுஜிதா சென்றதும், அவளைக் கண்டு புன்னகைத்தாள் சைரந்தரி. 


"ஹே நீ எப்ப டி வந்த?" என்று ஆர்வமாக கேட்டவளை முறைத்து பார்த்தாள் சுஜிதா.


"நான் வந்தது இருக்கட்டும், ஏன் முகத்தை இப்படி வச்சிருக்க?" என்று கடிந்தாள் சுஜிதா.


"அதெல்லாம் ஒண்ணுமில்ல!!!" என்று அதனை கூட சோகமாக கூறினாள் சைரந்தரி.


"இல்ல டி உனக்கு ஏதோ பிரச்சனை போல தோணுது. உனக்கு இந்த மாப்பிள்ளைய பிடிக்கலையா?" என்று இலகுவாக சுஜிதா கேட்க, 


பதில் பேசாது முந்தானையின் முனைப்பை பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்தாள் சைரந்தரி.


"எதுவா இருந்தாலும் சொல்லுடி, உன்னை பொண்ணு பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளை வேற யாருமில்ல என் அண்ணன் தான். ஸோ… எனக்கு என் அண்ணாவோட வாழ்க்கையும் முக்கியம். நீயும் முக்கியம். வேற... எந்த மாதிரியான விஷயமா இருந்தாலும் தயங்காம சொல்லு டி." என்று அவளது கைப்பிடித்து கேட்டாள் சுஜிதா. 


அவள் பதில் சொல்லாது இருக்கவும், "சைலு..." என்று மறுபடியும் தன் நண்பியை அழைத்தாள்.


"நா... நான் வேற ஒருத்தரை ரொம்ப நாளா காதலிக்கிறேன் டி. உயிருக்கு உயிரா அவனும் அப்படித்தான். நீ மௌனமாகும் போதெல்லாம் என் கண்களும் கண்ணீர் சிந்தும்ன்னு... என்ன பேச வச்சான், பார்க்க வச்சான், சிரிக்க வச்சான். ஏன் அவனை மட்டுமே ரசிக்க வைச்சான். இப்படி, முப்பொழுதும் இருவரும் காதல்ல எங்களை மறந்தோம்." என்று தலை குனிந்த, சைரந்தரியின் குரல் ஸ்ருதியின்றி இருந்தது.


தலை நிமிர்ந்து தன் நண்பியை பார்த்தவள், “இப்போ ஒரு ப்ராஜெக்ட்ஸ்க்காக வெளியூர் போயிருக்கான்." என்று சொல்லும் போது, அவளது இதழ் லேசாக சிரித்தது.


"என் கிட்ட சொல்லவேயில்ல???" என்று அவளை ஓரப்பார்வை பார்த்தாள் சுஜித்தா. 


"ஐ எம் சாரி டி. நீ புதுசா கல்யாணம் ஆன பொண்ணுன்னு உன்ன டிஸ்டர்ப் பண்ணல." என்று தன்னுடைய காதலை பத்தி சொல்ல ஆரம்பித்தாள். 


"எனக்கு பிடிச்ச மாதிரி அவன் இருந்தான். அவனுக்கு பிடிச்ச மாதிரி நானும் என்னை அலங்காரம் பண்ணிக்கிட்டேன். தினம் தினம், அவன் பார்வையின் போக்கே சொல்லும், என்னை அவன் ரசிக்கறதை. கள்வன் மாதிரி பார்ப்பதை அவன் கண்ணுல நான் பார்த்திருக்கேன் டி." என்று இமைகளை மூடித் திறந்து, தன்னை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் நண்பியை கண்டவள், ஒரு அடி அவ்விடத்தை விட்டு நடந்தாள்.


"நாளாக நாளாக அவன் மனைவியா என்னை நினைக்க, அல்ல நடக்கவும் வச்சான். சின்ன சின்னத் தொடுகை, முத்தம் இதலாம் கூட... இது தப்புன்னு தெரியும். ஆனா... என்கிட்ட முதன் முதலா என்னைக் கல்யாணம், பண்ணிக்கிறீங்களான்னு தான் அவன் கேட்டான். நான் உங்களை காதலிக்கிறேன்னு சொல்றதை விடக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களான்னு என்கிட்ட கேட்டது, எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது." என்றவளின் பேச்சைத் தடுத்து,


"நல்ல விஷயம் தானே?" என்று கூடச் சொன்னாள் சுஜிதா. 


தன் தோழி நிச்சயம் வழி தவறி போகிறவள் அல்ல, என்ற நம்பிக்கை அவள் மேல் சுஜிதாவிற்கு இருந்தது.


"நானும் அவனும் தனியா சந்திச்ச பல சமயம்... அவனிடம் பிடிச்ச குணங்கள் ஏராளம். நான் அவனை ரசிச்சதை போல, அவன் பிறந்த போது அவங்க அம்மா கூட ரசிச்சிருக்க மாட்டாங்க!!!" என்று அவளைப் பார்த்தாள் சைரந்தரி. 


"சரி டி. நீ ஒரு முடிவு எடுத்தா கண்டிப்பா நல்ல முடிவா தான் இருக்கும். நீ கண்டிப்பா தவறான ஒரு ஆளை செலக்ட் பண்ணிருக்க மாட்ட. உனக்கும் பிடிச்சிருக்குன்னு சொல்ற அப்புறம் என்ன???"


"இப்போ உள்ள காதலை போல எங்க காதல் இல்ல டி. ஒரு மெசேஜ் இல்ல ஒரு போன் இல்ல." என்று அவள் பேசிக் கொண்டிருக்க...


"சைலு நீ சொல்றதெல்லாம் ஓகே. நீங்க இரண்டு பேரும் உயிரா விரும்புறீங்க, அப்புறம் என்ன கல்யாணம் செய்துக்க வேண்டியது தான?" என்று அவளிடம் கேட்டாள்.


"கல்யாணம் எப்போ பண்ணிக்கலாம்ன்னு கேட்டதுக்கு தான், இந்த ரிங்கை என் கையில் போட்டுவிட்டு நீ தான் என் பொண்டாட்டி. உன்னை எதுக்காகவும் யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன். நீ தான் டி என் புள்ளைய உன் வயித்துல சுமக்கனும். இந்த வயித்துல தான் என் குழந்தை பிறக்கனும்னு என் நெத்தில முத்தம் கொடுத்தான்." என்று அந்த ரிங்கை ரசித்துப் பார்த்த படி கூறினாள்.


"இதையெல்லாம் கேட்கும் போது, உன்னவர் உன் மீது எவ்வளவு பாசம் வச்சுருக்காங்கன்னு புரியது. நீ கல்யாணத்தை பத்தி மறுபடியும் பேசலையா?" என்று கேட்க,


"என் மேல அவனுக்குப் பிரியம் ஜாஸ்தி தான். என்ன பொறுத்த வரை யாருக்கும் தெரியாம என் கல்யாணம் நடந்துருச்சுன்னு தான் சொல்லுவேன். அப்படித் தான் இந்த ரிங்கை என் கைல போட்டு விட்டான். இப்போ, அவன் கலந்துக்கிட்ட ப்ராஜெக்ட்ஸ் மட்டும் சக்ஸஸ் ஆச்சுன்னா அவருக்கு காலேஜில் வேலை கிடைச்சிரும். அதுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்து, அம்மா கிட்ட பேசுறேன்னு சொன்னான்." என்று பெருமூச்சு விட்டவளை பார்த்துச் சிரித்தாள்.


"அப்படியா?"


"ஊரறிய கல்யாணம் பண்றதை மட்டும் இப்போதைக்கு தள்ளிப் போட்டுருக்கோம். அது ஒண்ணு தான் என் கவலை"


"நீ ஒண்ணும் கவலபடாத டி உன் கல்யாணம்." என்று அவள் வாய் திறக்க, அப்போது மாப்பிள்ளை உள்ளே நுழைந்தான். அவனை கண்டதும் அதிர்ந்து போனாள் சைரந்தரி.


"என்ன உன் ப்ரெண்ட் இப்படி பயந்தாங்குழியா இருக்கா. லவ் பண்ண தெரியுது. அதனை தைரியமா வெளியே சொல்ல தெரில?" என்று சுஜிதிவிடம் சொல்லவும், சைரந்தரிக்கு கோபம் வந்து விட்டது.


"ஏன் லவ் பண்ண எங்களுக்கு மட்டும் தான் தெரியுமா? ஏன் நீங்க லவ் பண்ணலையா?" என்று பதிலுக்கு அவள் கேட்டாள்.


"அண்ணா பொறுமையா இருண்ணா?" என்று சுஜிதா சொல்லிப் பார்க்க,


"நீ சும்மா இரு சுஜி. இவர் பெரிய வீர பராக்கிரம சாலி, ஒரு மாசமா என்ன தவிக்க விட்டுட்டு போனவர் தான?" என்று அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள,


"என்னாது அண்ணன் சைலுவ ஒரு மாசமா தவிக்க விட்டுட்டானா?" என்று  யோசித்தாள் சுஜிதா.


"நான் என்ன சும்மா வா போனேன் வேலை விஷயமா சொல்லிட்டு தானே போனேன்." என்று அவன் சொல்ல, அவளுக்குப் புரிந்து விட்டது. சைரந்தரியின் ஆசை நாயகன் நம் அண்ணன் அபிமன்யு தான் என்று, அவர்கள் பேசிக் கொள்வதிலே புரிந்து போனது.


"வேலை வேலைன்னு வேலையைக் கட்டிக் கொள்ள வேண்டியது தானே? பின்னே நான் எதுக்கு?" என்று அவள் சொல்லும் போதே அவ்விரும் பேசிக் கொள்ளட்டும் என்று, சத்தம் இல்லாமல் அறையை விட்டு வெளியேறினாள் சுஜிதா.


"ஹே சுஜிதா..." என்று சைரந்தரி அழைக்க,


"நீங்க பேசிட்டு வாங்க. கீழ போய் நான் இவங்களுக்கு கல்யாணத்துக்கு சம்மதம்ன்னு சொல்லிடுறேன்." எனச் சிரித்தாள். 


அவளை பார்த்து, அவ்விரும் சிரிக்க, "ம்ம்ம் கன்டினியூ..." என்றாள் சுஜிதா.


எவ்வளவு நாள் கழித்து பார்க்கிறேன். இது கனவா இல்லை நினைவா? என்னால நம்ப முடியல... இத்தனை நாள் காத்திருப்பிருக்கு... கைமேல் பலன் கிடைத்ததை எண்ணி மனதிற்குள் மகிழ்ந்தாள் சைரந்தரி. 


"இப்போ உன்னை கட்டிக்கலாமா?" என்று அபி அனுமதி கேட்க,


"அனுமதி கேட்கனுமா?" என்று அவள் சொல்ல, தன்னருகே அவளை கைப்பிடித்து இழுத்தான்.


"ஏன் அபி என் கிட்ட நீங்க வந்ததை சொல்லல... நான் எப்படி பயந்துட்டேன் தெரியுமா? இப்போ யாரோ தான் பொண்ணு பார்க்க வந்துட்டாங்கன்னு இந்த கல்யாணத்தை நிறுத்த, எவ்வளவு தவிச்சேன்." என்று கண்கள் கலங்கியவளின் கண்ணீரை துடைத்து விட்டான்.


"நான் போன இடத்துல வேல கிடைச்சிருச்சு. அதன் பின்பு வீட்டுல உன்னை பத்தி சொல்லிச் சம்மதம் வாங்கி, இந்த கல்யாணத்தை நடத்த நான் பட்ட பாடு அப்பப்பா!!!" என்று அவன் அழுத்துக் கொண்டான்.


"ம்ம்ம்..." என்று அவனை பார்க்க,


ம்ஹம்..." என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான் அபிமன்யு. இனி அவர்கள் வாழ்க்கை வசந்தமே! 

மறக்காமல் தங்களது கருத்துக்களை தெரிவியுங்கள். 

அன்புடன் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *