வெள்ளி, 11 மார்ச், 2022

மது விலக்கு - சிறுகதை

 

மது விலக்கு




“வாங்க பிள்ளைகளா!!! இன்னைக்கு, புதுசா காய்கறி தோட்டம் பத்தி படிப்போமா?” என்று அங்கன்வாடி டிச்சர் பாரதிம்மா பாட்டு படிப்பது போலக் குழந்தைகளுக்கு ஏற்பச் சொன்னவுடன், குட்டி குழந்தைகள் தலை அசைத்தனர்.

ஆயாம்மா  பள்ளி கூடக் கதவைத் திறந்து, சுத்தம் செய்து முடிக்கவும், முதலில் குழந்தைகளின் வருகைபதிவை கணக்கிட்டாள் பாரதிம்மா.

அதில், பேச்சியம்மாள் என்கிற குழந்தை வரவில்லையெனத் தெரியவந்தது.

“பேச்சியம்மாள் இன்னும் வரலையா? அவள வீட்டுக்குப் போய் அழைச்சிட்டு வா ஆயாம்மா.” என்று உத்தரவிட்டாள் பாரதிம்மா.

சிறிது நேரத்தில், சத்துணவு கூடத்திற்கு திரும்பி வந்தாள் ஆயாம்மா.

என்னவென்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் பாரதிம்மாவிற்கு வருத்ததை அளித்தது.

“சரி பிள்ளைங்கள பாத்துங்கங்க. சத்துமாவு கொஞ்ச பேருக்குக் கொடுக்கனும் கொடுத்திட்டு வரேன்.”  என்று  மாவு வாளியை தூக்கி கொண்டு, ஊருக்குள்  நுழைந்தாள் பாரதிம்மா.

ஊரில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்குச் சத்துமாவை கொடுத்துவிட்டு பேச்சியம்மாள் வீட்டிற்குள் நுழைய, சட்டிபொட்டியெல்லாம் நெளிந்து துணிமணிலாம் சிதறி ஒரே அலங்கோலமாய், அவர்களது கவலைக்கிடமான நிலையைக் கண் கூடாகக் காட்டியது.    

“வாங்க டீச்சரம்மா.” என்றவர்களது குரல் வழுவிழந்து, கண்களில் கண்ணீர் விழவாயென்று அனுமதி கேட்டுக் கொண்டிருந்தது.

ஒருபத்தி அறையில், ஒரு ஓரமாகத் தலையில் கட்டுடன் உறங்கிகொண்டிருந்த பேச்சியம்மாளின் அருகில், கைக்கால்களில் அடிபட்ட கட்டுகளுடன், வேதனை கொள்ளாவலியுடன் பேச்சியம்மாளின் தாய் கருப்பாயி மற்றும் ஆச்சி அலமேலுவும் அமர்ந்திருந்தனர். 

“ஏ வூட்டுகாரன்ந்தே, முட்டாகுடிகாரன்னா எம்மகவுக்கு வாச்சவே முழுகுடிகாரனா இருக்கான். குடிபோதையில சின்ன பொண்ணுன்னு பாக்காம தள்ளி  விட்டுட்டான்ம்மா. அந்த சின்ன பிஞ்சுக்கு அதனால தலையில அடி பட்டிருச்சு.” எனத் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் அலமேலு.

“நேத்து, ஒரு பொட்டு கூடத் தூங்கலம்மா. குடிக்க பணம் கொடுக்கலன்னு ஒரே ரகளை பண்ணினா. சண்டபோட்டு ரேஷன்கார்ட எடுத்துட்டு போயிருக்கான் அந்தக் குடிகாரே. ஆங்...ம்...ம்...." என விசும்பியவள், "வேலவெட்டிக்கு போறதில்ல. நாம போனாலும், அங்க வந்து காசு காசுன்னு நொச்சரிச்சு வேல செய்ய விடறதில்ல. இதனால என்னைய வேலைய விட்டு அனுப்பிடுறாக!” என்று அழுதாள் கருப்பாயி.    

“எம்மக கிடச்ச வேலையைப் பாக்குது. அதுலதே ஏதோ வண்டி ஓடுது. பேச்சிக்கு சத்துணவு சாப்பாடுதே வேற ஒன்னும் அந்த,  புள்ளைக்கு  ஊட்டமில்லம்மா.” என்று, தன் ஒற்றை மகளை நினைத்து, அழுது ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார் அலமேலு.

“குடியை விட்டுருயான்னு தல பாடா எடுத்துச் சொல்லியாச்சு. போலீஸ்லையும் புடுச்சு கொடுத்தாச்சு. இவனால பத்து பதினைஞ்சு வீடும் மாத்தியாச்சு ஆனா எப்படியோ கண்டு பிடிச்சு வந்திடுறான். இதுக்கு மேல, சாவுறத தவிற வேற வழியில்லம்மா.” எனக் கருப்பாயி தேம்பி தேம்பி அழுக ஆறுதலாக அவளின் கைப்பிடித்தாள் பாரதிம்மா.

அவர்களிடம் ஒரு ஐந்து நிமிடம் பேசிவிட்டு, “நா… சொன்னதை செஞ்சு பாரம்மா.” என்று அறிவுரை வழங்கி விட்டு, பாரதிம்மா சென்று விட்டாள்.

சிறிது நேரம் யோசித்து விட்டு அவிழ்ந்திருந்த முடிக்கற்றையை கொண்டையிட்டு புருஷனை தேடி சென்றாள் கருப்பாயி.

வழி நெடுக, கண்கள் கணவனைத் தேடி அலைய ஊர் முக்கில் இருந்த டாஸ்மார்க் கடையின் வாசலில் மயங்கிக் கிடந்தான் குமார்.

பிடித்து இழுத்து நேராக அரசு மது மறுவாழ்வு மைய மருத்துமனைக்கு அழைத்துச் சென்றாள்.

"ஏய் என்ன டி? ஏய் எதுக்கு ஏன்டி இங்க என்னைய கூட்டிட்டு வந்த?" எனக் காலை முன்னும் பின்னும் மாறி மாறி வைத்த படி, வேட்டியை பிடித்துக் கொண்டு நின்றவனை அங்கிருந்து இம்மியளவும் நகர முடியாதளவிற்கு, கொத்தாகப் பிடித்துக் கொண்டாள் கருப்பாயி.

"எனக்கு உடம்பு சரியில்லையா அதா…  உன்னைய தொணைக்கு கூட்டிட்டு வந்தே வா." எனத் தர தரவென ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

உள்ளே நுழைந்ததும் முதல் படுக்கையில் படுத்திருந்தவன், "ம்மா… என்னைய விஷ ஊசி போட்டுக் கொன்னுட சொல்லும்மா!" என்று இருமிக் கொண்டே ரத்த வாந்தி எடுத்தான்.

முகத்தில் மாஸ்க் அணிந்திருந்த செவிலிப் பெண் ஒருத்தி அவர்கள் மத்தியில் வந்து நின்றாள்.

"யோவ்… உன்னையை எத்தன தடவையா திட்டுறது. அறிவிருக்கீதா? ஏன்யா எங்கள சாவடிக்குறீங்க. நல்லா  இருக்குறப்போ குடிக்க வேண்டியது. முத்தி போய் இங்க வந்து எறியது எறியதுன்னு கத்த வேண்டியது. சாவு கிராக்கி. வாட் பாய் வாட் பாய்..." எனக் குரல் கொடுக்க அவளின் பார்வையில் கருப்பாயியும், குமாரும் தென்பட்டனர்.

"யார் நீங்க இன்னா வேணும்? இந்த இடத்துக்குலாம் வர கூடாதும்மா வெளிய போங்க." என்று வாசலை நோக்கிக் கையைக் காட்டினாள் செவிலிபெண்.

"அம்மா என்னைய உங்க சகோதரியா நினைச்சுக்கோங்கம்மா. இந்தாளு நிதோம் குடிச்சுட்டு வரான். இவனுக்குப் புத்தி புகட்டத்தான். இங்க கூட்டிட்டு வந்தே." என்று அழுத படி கூறினாள் கருப்பாயி.

"ஏம்மா அழாத, அந்த ஆளைப் புடிச்சு அங்கிருக்கோ ஜன்னலோடு கட்டி வை. இரண்டு நாளு பெறவு வந்து இட்டுட்டு போ. நாளை பின்ன இந்த ஆளும் இதுக மாதிரி குடிச்சுட்டு வந்து, என் உசுர வாங்குறதுக்கு இங்க நடக்குறத பாத்து திருந்தட்டும்." என்றவுடன்

"கருப்பாயி வேணா டி. என்னைய இங்க வூட்டுட்டு போயிறாத." என்று அங்கிருப்பவரின் நிலையைப் பார்த்து, பாதி போதை தெளிந்து நின்றான் குமார்.

"எனக்கு வேற வழி தெரிலய்யா!!!" என்றாள் கருப்பாயி.

"ஏய் வெளியே வந்தே மவளே ************ உன்ன… உன்ன..." எனக் கத்திய குமாரை... அங்கு வந்த வாட்பாய் பிடித்துப் பத்து பேரின் மத்தியில் இருந்த ஜன்னல் அருகே  குமாரை கட்டி வைத்தான். கருப்பாயி வீட்டை நோக்கி சென்று விட்டாள்.

அவள் சென்றவுடன், "இந்தா உன் பெயரு என்ன?" என்று வாட்பாய் கேட்டான்.

"கு... கு.... குமாரு..." எனத் தந்தியடித்த படி பேசினான் குமார்.

முதல் படுக்கையில் படுத்திருந்தவன் “அய்யோ என்னால முடியல. அய்யோ எனக் கொன்னுருங்க கொன்னுருங்கப்பா." எனப் புலம்பினான்.

அவரைக் கட்டிலின் காலுடன் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர்.

"முதல வெறும் ஆசைக்காவும், ப்ரண்ட்ஸ்ங்கோ சொன்னாங்கன்னு வெறும் 45 மில்லியில தொடங்கும் மதுப்பழக்கம். நாளாக நாளாக, இன்னும் அதிகமா குடிச்சா தான் போதை வரும்னு குடிக்க ஆரம்பிப்பிங்க.

அதுனால கை நடுங்கும், தூக்கம் வராது, மனச்சோர்ந்து போயிரும். சுயமா சிந்திக்க முடியாது. எதைத் தொட்டாலும் பயம், பிரமை, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சியில்லாம போயிரும்.

அப்புறம், கணையத்தில் ரணம், தோல் தொடர்பான வியாதிக... ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண்ணு, ஜீரணசக்தி குறை, புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை, இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல்ன்னு வந்திடும். கடைசியா... நீ ஆண்மையை இழந்து தான்யா செத்து போவ. அதுவும், உன்ன எரிக்க வேணா. எரிஞ்சு தான் செத்து போயிடுவ." எனக் கடைசியாக திட்டிவிட்டு ரத்த ரத்தமாய் கிடந்த இடத்தைச் சுத்தமாகத் துடைத்து விட்டுச் சென்றான் வாட்பாய்.

அவனின் அருகில் "ஏய்யா குடிக்குறத நிறுத்திடுய்யா. நான், இதனால ஐந்து வருஷமா கஷ்டபடுறேன். எனக்கு வயசு என்ன இருக்குன்னு நெனைக்குற?" என்று ஒருவன் தானாகவே முன் வந்து குமாரிடம் பேசினான்.

"ஒரு ஐம்பது வயசிருக்குமா?" எனக் குத்து மதிப்பாகப் பதில் சொன்னான் குமார்.

"இல்லயா எனக்கும் உன் வயசுதான். பதினேழு வயசுல விளையாட்டா குடிக்க ஆரம்பிச்சேன். இப்போ வயசு இருபத்தி அஞ்சு. ஆனா, பார்க்க ஐம்பது வயசு ஆன மாதிரியாகிட்டேன். எல்லாம் அந்தக் குடி தான். " எனக் கண்கலங்கி பேசினான்.

அவன் சென்றவுடன் முதல் படுக்கையில் இருந்தவன் கத்திக் கொண்டேயிருக்க யாரும் வரவில்லை குறைந்தது, அரை மணி நேரம் கழித்து, அவனது சத்தம் அடங்கிக் காணபட... "அக்கா... க்கா..." எனப் பயத்துடன் குமார் கத்தினான்.

"என்னையா இன்னா வேணும். பசிக்குதா?" என்று வந்து கேட்டாள் செவிலிப்பெண்.

"இல்ல அந்த ஆளு!" என்று முதலில் படுத்திருந்தவனை கைக்காட்டினான் குமார்.

அவனை பரிசோதனைச் செய்து பார்க்க இறந்து விட்டான் என்று, அவனது சடலத்தை எடுத்து விட்டு படுக்கையை மாற்றிபோட்டு அடுத்து ஒருவனை அந்த இடத்தில் படுக்க வைத்தனர்.

"ஏய் இது தான்யா நெலமை. இங்க, பத்து வரும் போகும். எல்லா குடிக்காரனும், இங்க வந்து அழுது, செத்துட்டு தான் போவான்ங்க. உனக்கும், அதே நெலமை வராம பார்த்துக்க. நாளை உன் பொண்டாட்டிய வர சொல்லுறே." எனத் தன்னால் முடிந்த அறிவுரையை வழங்கி விட்டு அகன்றாள் செவிலிபெண்.

மறுநாள் கருப்பாயி வரவும் அந்த ஜெயிலிலிருந்து விடுதலையாகினான் குமார்.

இருவரும் வீதியில் நடந்து வந்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கே தெருவில் ஒரே கூட்டமாக இருக்கவும் என்னவென்று எட்டி பார்க்க... "ஏன்யா நான் என்னாத்த கொறை வச்சேன்னு என் மேல, இப்படி பழி போடுற?" என்று அழுத படி முனியம்மா வீதியில கதறி அழுது கொண்டிருந்தாள்.

"ஏய் நான் குடிச்சா உனக்கென்னடி. என்னைய குடிக்காதன்னு சொன்னா. நீ என் பொண்டாட்டியே இல்லடி. இந்தப் புள்ளைங்க எனக்குப் பொறக்கலடி." எனக் குழந்தைகள் ஒரு பக்கம் அழுக, அவர்களின் தாய் முனியம்மா ஒரு பக்கம் அழுதாள்.

"என்னையா பாக்கற நாமலாம் முனியம்மா கல்யாணத்துக்கு போயிட்டு வந்தோம். அந்தப் புள்ள உன் தூரத்து சொந்தமுல்ல. அந்தப் புள்ள நடத்தையிலே, சந்தேக படுறான். நீ என்னன்னு கேட்க மாட்டியா? அதானே உனக்கே யோகித கெடையாது. நாளைக்கு, நீயே என்ன பாத்து, இந்த மாதிரி கேள்வியைக் கேட்டாலும் கேட்டப்ப அந்தளவுக்கு குடிக்குறீங்க." எனக் கருப்பாயி தலையில் அடித்துக் கொண்டாள்.

அப்போது, முனியம்மாவை திட்டிய கணவன் குடி போதையில் தரையில் படுத்துப் புலம்பிக்கொண்டிருந்தான். அந்த வழியே சென்ற, ஒரு சொறி நாய் அவனின் மீது மூத்திரம் பெய்தது.

அதனைப் பார்த்து உடனே, அந்த நாயைக் கல்ல கொண்டு ஏறிந்துவிட்டு, அழுதுக் கொண்டே தன் கணவனை வீட்டிற்குள் முனியம்மா இழுத்து செல்வதை ஊரே வேடிக்கை பார்த்தது.

அவர்களைக் கடந்து நடக்க, தெரு ஓரமாய் இருந்த சாக்கடையிலிருந்து ஏதோ சத்தம் வந்தது. என்னவென்று முதலில் எட்டி பார்த்தாள் கருப்பாயி. அவளைத் தொடர்ந்து, குமாரும் எட்டி பார்த்தான்.

"உல்லாச உலகம் எனக்கே சொந்தம்..." என்று நல்லா குடிச்சுட்டு பஞ்சு மெத்தையில் படுத்திருப்பதை போன்ற நினைவில் சாக்கடையில் படுத்துப் பாடிக் கொண்டிருந்தான் ஒருவன்.

அதனைப் பார்த்து, குமாருக்கே அருவருப்பாய் போய்விட்டது.

தலை குனிந்த படி நடந்துக் கொண்டிருந்தவன் கருப்பாயி நின்று விட, அவனும் நின்றான். அவர்கள், இருவரும் நின்ற இடம் டாஸ்மார்க் கடையின் முன்பு. அங்கே தரையில் ஒருத்தன் உடையின்றி, "குடிக்க காசு கொடு!!!" எனப் பிதற்றி கொண்டிருந்தான்.

அதனைக் கண்ட குமார் வேகமாக, தரையில் கிடந்த பேப்பரை கொண்டு அவனக்கு உடையாகப் போற்றி விட்டான்.

"இந்தாய்யா… நான் ஏன் இந்த வழியே கூட்டிட்டு வந்தேன்னு தெரியுமா? இதுல போலத் தான்யா நீயும் ரோட்டுல சாக்கடையில கக்கூஸ்ல விழுந்து கிடக்க கூடாதுனு தான் கூட்டிட்டு வந்தேன். நீ, இந்த இரண்டு நாள்ல பார்த்ததெல்லாம் உன் புத்திக்கு உரைக்குதா? இன்னும் உரைக்கலன்னா நீயெல்லாம் செத்த பெணத்துக்கு தான்யா சமம்.

நீ திருந்தி... என் கூட வரதா இருந்தா வாயா. இந்த மஞ்சகயிறை என் கழுத்துல கட்டு இல்லன்னா நீ செத்துட்டன்னு நினச்சுக்குறேன்." எனக் கழுத்திலிருந்த மஞ்ச கயிறை கழற்றி, அவன் மூஞ்சில் விட்டெறிந்தாள் கருப்பாயி.

ஒருகணம் அவன் இரண்டு நாளில் தான் பார்த்த சம்பவத்தையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கண் மூடியவன் மறுகணமே கண் திறந்து, "ம்மா... ம்மா... என மன்னிச்சிடு மா... என்னை மன்னிச்சிடும்மா... நான் எப்போதோ மனசளவுள செத்துட்டேன் ம்மா. இனி, எனக்கு உயிர் தரது உன் கையில தான் இருக்கு. போதையில எதுவும் தப்பா தெரில!!!" என்று அவளின் காலில் விழுந்து கதறி அழுதான் குமார்.

அந்த நிமிடம், அங்கன் வாடி டீச்சர் பாரதிம்மா கருப்பாயின் நினைவிற்கு வந்தாள்.

‘டீச்சரம்மா நீங்க சொன்ன படி, செய்ததால எனக்கு, ஒரு விடிவு காலம் பொறக்கும்ன்னு நினைக்கிறேன்.’ என்று மனதிற்குள் நினைத்துவிட்டு,  "எந்திங்க மது மறுவாழ்வு மையத்துல ஒரு வாரம் இருந்துட்டு வாங்க. எல்லாம் சரியாகிடும்." எனத் தன்மையாகக் கருப்பாயி, எடுத்துரைக்கவும் கண்ணீரை துடைத்துக் கொண்டான் குமார்.

"குடியால... நிறைய குடும்பம் வேதனை படுறாங்கைய்யா. புருசனை இழந்து  பொம்பளைங்க, அப்பனை இழந்து தவிக்கும் குழந்தைங்க, மகனை இழந்து தவிக்கும் பெத்தவனு குடிக்க வயசு வித்தியாசமில்லாம குடிக்குறவக பண்ணுற தப்பால பாதிப்பு எல்லோருக்கும் தான்யா. அதுபோல நம்ம குடும்பமும் ஆகிடாமய்யா. நான்... உன்னை நம்புறேன். நீ நிச்சயம் திருந்திடுவ வாயா..." எனக் குமாரை அழைத்துச் சென்றாள் கருப்பாயி.

ஹாய் ப்ரெண்ட்ஸ்!!!
உங்க வீட்ல குடிக்க ஆரம்பிக்கிறவங்க, இல்ல இப்ப தான் கொஞ்சநாளா குடிக்கிறாங்க அவங்க கிட்டலாம் இது பத்தி சொல்லுங்க. இதில் இருப்பது நிஜம். எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தவங்க எலி கடிச்சு ட்ரீட்மெண்ட்டுக்காக GH போயிருக்காங்க. அவங்க இருந்த வார்ட்க்கு பக்கத்துல மதுமறுவாழ்வு மைய வார்ட் இருந்ததாம். குடியால உடம்பு கெட்டு மீள முடியாமல் உடல் வேதனையை தாங்க முடியாமல் இருக்கிறவங்களாம் அங்க இருந்தாங்களாம். அதை பார்த்துட்டு ரொம்ப வேதனையா இருந்ததாம். அவங்க சொன்னதை அப்படியே தான் எழுதியிருக்கிறேன். அரை நாள் அவங்க இருந்ததுக்கே கஷ்டமாயிருந்ததாம். அதானல சும்மா ஜாலிக்காக குடிக்கிறவங்கள, இல்ல விடமுடியாம தவிக்கிறவங்கள இங்க அழைச்சிட்டு போனா. அவங்களுக்கே அந்த குடிபழக்கம் வெறுத்திடும்.

நன்றி
சாய்லஷ்மி.
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *