வெள்ளி, 11 மார்ச், 2022

ரோஜா ராஜாவைத் தேடி - சிறுகதை

 

ரோஜா ராஜாவைத் தேடி




"உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாமல் இருப்பேனே பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு வருசங்கள் போனால் என்ன
போகாது உன்னோட பாசம்
ஏன் உச்சி முதல் பாதம் வரை என் புருஷன் ஆச்சி
ஊர் தெக்காலத்தான் நிக்கும் அந்த முத்தாலம்மன் சாட்சி..." என்று பாடல் ஒலிக்க... அறையிலிருந்து வேகமாக ஓடி வந்து கைப்போனை பார்த்தாள்.

அவள் ஏதிர்பார்த்து காத்திருந்த விருப்பத்திற்குரிய அழைப்பு வரவில்லையென்றதும், பெண்ணவளுக்கு ஏமாற்றமாக போனது. ஒரு வழியாக தன்னை சமாதானம் செய்து கொண்டு ஒலித்துக் கொண்டிருக்கும் கைப்போனை எடுத்துப் பேசினாள் ரோஜா.

"ஹலோ..." என்க.

"மேடம் கார் வந்திருச்சு." என்று அந்த பக்கமாய் குரல் கேட்டது.

"ஆங்… இதோ வரேன்." என்று, தனது உடமைகளை கையில் எடுத்துக் கொண்டு, சொல்ல தெரியாத வெறுமையுடன் வீட்டு கதவைச் சாத்திவிட்டு காரினுள் அமர்ந்துக் கொண்டாள்.

"மேடம் ஓடிபி..." என ட்ரைவர் கேட்கவும், கையிலிருந்த போனை அவசரமாக ஆண் செய்து, நோட்டிபிகேஷன் மெசேஜில் இருந்த நம்பரை பார்த்து '3245' என்றாள். அதன் பின்னர் அவளது அலுவலகத்தை நோக்கிக் காரானாது விரைந்தது.

அவள் கண்கள் வெளியில் வேடிக்கை பார்த்தாலும், மனமானது வாடி வதங்கிப் போயிருந்தது. ‘நீயில்லாம என்னால தனியா இருக்க முடில டா. எப்போ வருவ? இன்னேரம் என்னருகில் நீ இருந்தா எப்படியிருக்கும்?’ என்று எண்ணியபடி, காரின் சீட்டில் தலை சாய்ந்து கொண்டு, தன்னவன் தன்னுடன் இருந்த தருணத்தை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள் ரோஜா.

"ரோஸ்" என்று கன்னங்களை தட்டவும், ம்ம்...என்ற முனங்கலுடன் மறுபடியும் தூங்க முயல்பவளை...

"ஹே பொண்டாட்டி எழுந்திரி டி!" என்று காதுமடல் அருகே மீசை குறுகுறுக்க கூறினான் ராஜா.

அதில் அவள் எழவில்லை என்று, இரவு உடையில் ஆங்காங்கே தெரிந்தும், தெரியாமலும் காட்சியளிக்கும் அங்கங்களுக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். அவனது லட்சக்கணக்கான முத்த சத்தமே, அவளுக்கான அலாரமாய் மாறி போனது.

"சீ... என்ன காலையிலே போய் என்ன விடுடா!" என்று அவனிடமிருந்து விலகிச் சமையலறைக்கு செல்ல, அங்கு அவளுக்கான காபி தயாராக இருந்தது.

எப்போதும் தனக்கு முன்னே எழுந்து, எக்சர்சைஸ் செய்து விட்டு, காபி கலந்து வச்சிருக்கும் தன்னவனின் அன்பில் எப்போதும் போல மகிழ்ந்தாள் ரோஜா. அவளது பின்னால் பூனை போல் வந்து கட்டிக் கொண்டு, சில்மிஷம் செய்ய ஆரம்பித்தான் ராஜா.

"ம்ம்ம்... ஆபிஸ்க்கு லேட் ஆச்சு..." என்று அவள் அதட்டவும்,

"என்னவோ பிடிக்காதது போலத் தான் நடிக்குற கள்ளி." என்று கழுத்தில் வளைவில் முகம் பதித்தவனின் முடிக்கற்றையை பற்றி, முன்னால் கொண்டு வந்தாள்.

"லேட்டா போனா என்ன மட்டுமில்ல. உன்னையும் தான் உன் ஆபிஸ்ல திட்டுவாங்க." என்று குரல் உயர்த்தினாள்.

"உத்தரவு மகாராணி அடியேன் குளிக்க போகட்டுமா?" என்று அனுமதி கேட்டவனை, இடுப்பில் கை வைத்து முறைத்து பார்க்க, சிரித்த படி, அவளைக் கடந்து சென்றான்.

அவன் விலகிப் போனதும் மனமானது அவன் வேண்டும் தான் என்றது. அவன் கைப்பட்டதும், உருகி கரையும் தன் உடலையும் மனதையும் என்ன செய்ய? என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே, குளிக்க சென்றாள்.

குளித்து முடித்து ஈர தலையுடன் வந்தவளை பூந்துவலை போன்று கட்டிக் கொண்டு, "உனக்கு ரோஜான்னு பெயர் வச்சது சரி தான் டி." என்று வர்ணித்து ஓரிரு முத்தங்கள் பதித்து, அவளுக்கான உடையை அவனே தேர்ந்தெடுத்து கொடுத்தான்.

சேலை உடுத்தி விட்டு, "ஏங்க ஓகே வா..." என்று கேட்டதற்கு அவளை ஆராய்ந்து விட்டு, சேலையின் முனைப்பை சரியாக எடுத்து விட்டான்.

அவன் கரிசனத்தில் ஐஸ்க்ரீமை போல உருகினாள் பெண்ணவள்.   கல்யாணதும் ஆனதிலிருந்து அவர்களுள்  காதல் பெருகியதே தவிர குறையவில்லை.

தனக்கு தேவையானதை எடுத்து வைத்துவிட்டு நிமிர்ந்தவனின் கண்ணீல், அவள் கண்களுக்கு மையிடுவதையும், உதட்டிற்கு சாயம் பூசுவதையும், காதில் தொங்கவிடும் ஜிமிக்கியில் இருந்து, கழுத்தின் மையமாக தூக்கிலிடும் பெண்டன்டையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன், அதற்கு மேல் பொறுமை தாங்காது.  அவள் முன் மண்டியிட்டு, இடுப்பிலிருந்த சேலையை விலக்கி, பூவை போன்று மெல்லியதாக இருக்கும் வயிற்றில் முத்தங்கள் பதித்தான்.

"ப்ராடு உன்னலாம் திருத்தவே முடியாது டா." என்று அவனது மீசை குறுகுறுத்ததை எண்ணி சிணுங்கிக் கொண்டே கூறினாள்.

"எனக்குத் தான் ஏதாவது மறச்சு வச்சிருந்தா பிடிக்காதுன்னு உனக்குத் தெரியுமில்ல. அதுமட்டுமில்ல உதட்டுல முத்தம் கொடுத்தா? லிப் டிஸ்க் போயிடும் டி." என்றான் ராஜா.

அவன் சட்டையைப் பிடித்து, தன்னருகே கொண்டு வந்து, சற்று எம்பி, அவனது கன்னத்தில் கடித்து விட்டு, "எங்க போகல???" என்றாள்.

அவளது செய்கையை ரசித்து விட்டு, அவன் சிரிக்க, அவளும் சிரித்து விட்டாள். "மை ஸ்வீட் பொண்டாட்டி!!!" என்று அவளுக்கு முத்தங்கள் பதித்து விடுவித்தான்.

அதன் பின்னர் இருவரும் உணவு உட்கொள்ள அமர்ந்தனர். ஒருவருக்கொருவர்  உணவு பறி மாறிய படி சாப்பிட்டு முடித்தனர்.

"ரோஸ் உனக்குத் தேவையானதை எடுத்துக்கிட்டியா? எதாவது மறந்துட போற!" என்று அறிவுரை வழங்கினான்.

அவளும் ஒரு தரம் தன் உடமைகளை சரி பார்த்துக் கொண்டாள்.

அதற்குள் அறையில் உள்ள லைட், பேன் சுவிட்ச் மற்றும் கேஸ் இதலாம் அமர்த்தியிருக்கிறதா? என்று பார்த்து விட்டு வந்தான் ராஜா.

அதனை நினைத்துக் கொண்டிருந்தவளை... யாரோ சத்தமாக அழைக்கும் குரல் கேட்டுக் கனவு உலகில் இருந்து மீண்டு வந்தவள் போல நிமிர்ந்து பார்த்தாள்.

"என்ன மேடம் காலையிலே இப்படி தூங்குறீங்க? கீழ இறங்குங்க, எனக்கு வேற சவாரி இருக்கு." என்று ஓட்டுநர் தான் குரல் கொடுத்தான்.

அப்போது தான் கவனித்தாள், தன்னுடைய ஆபிஸ் முன்பு கார் நிற்பதை, "ஓ… சாரி" என்று ஓட்டுநரிடம் மன்னிப்பு கேட்டு, பணத்தை கொடுத்து விட்டு, அலுவலகத்திற்குள் நுழைந்தாள் ரோஜா.

'ச்சே இப்படி ஆச்சே!' என்று மனதிற்குள் புலம்பிய படி நடந்து கொண்டிருந்தவளின் கைபற்றினாள் தீபா. அவளுடன் ஒன்றாக வேலை செய்பவள். "ஹே ரோஜா உன் கால் தான் தரையில் இருக்கு. உன் நினைப்பெல்லாம் வேற எங்கையோ இருக்கு போல?" என்றாள்.

"என்ன டி?..." என்று கண்களை விழித்தாள் ரோஜா.

"உன்னோட சீட் இங்கிருக்கு. நீ  சேகர் சார் சீட்டிற்கு போய் உட்கார போற?" என்று சொன்னதும், தலையில் கை வைத்த படி நகர்ந்தாள்.

"ச்சே! ஏதோ நியாபகத்துல..." என்று முனங்கினாள்.

"மாமா ராத்திரி உன்ன தூங்க விடலையா?"

"ம்க்கும் அவர் வீட்டு இருந்தா தான?" என்று சேரில் அமர்ந்தவளை பார்த்து, சிரித்தாள் தீபா.

"என்ன ஏன் சிரிக்கிற?" என்று உதட்டு சுழித்தாள் ரோஜா.

"அதான் இப்படி இருக்கீயா?" எனக் கேட்டாள்.

"எப்படி?" என்று அவளை ஏறிட்டு பார்த்தாள் ரோஜா.

"ம் இப்படி..." என்று அவளது கைப்பையிலிருந்த கண்ணாடியை எடுத்துக் காண்பித்தாள்.

அதில் தன்னை பார்த்தவள், உண்மையில் அரண்டே போனாள். அவளது விழிகள், கண்கள், கன்னங்கள், இதழ்கள் எல்லாம் பொழிவற்று இருந்தன. மேலும் ஜவுளிகடையில் நிற்கும் துணி பொம்மை போன்று அழகாக சேலை உடுத்துபவள்... ஏனோ தானோ என்று புடவையைச் சுற்றியிருந்தாள். புடவைக்கு ஏற்ற அணிகலன்களை மறந்து, இரவு படுக்கும் போது போட்டியிருந்த கடுக்கன் அளவு இருந்த காதணியுடன் அப்படியே வந்து விட்டாள்.

‘எல்லாம் உன்னால தான் டா!’ என ஆயிரத்தி ஓராவது தடவையாக மனதிற்குள் தன்னவனை திட்டினாள்  ரோஜா. இப்போது மட்டும் அவன் நேரில் இருந்தால், அழகான வரிசை பல் தெரியும் படி இதையெல்லாம் பார்த்துச் சிரிப்பான். என்ன நல்லா மயக்கித் தான் வச்சிருக்கான். பின்ன, அவன் தானே உனக்குப் பார்த்து, பார்த்து எல்லாம் செய்வான் என மனம் வருந்தியது.

"என்ன மேடம், உங்களுக்கு என்னாச்சு. ஏதோ சோகத்துல இருக்குற மாதிரி இருக்கீங்க?" என்று தீபா கேட்க,

"அவன் இருந்தா நான் ஏன் இப்படி இருக்க போறேன். அவன் என் கூட இருந்தா திருவிழா சமயத்துல ஊரே சந்தோஷமா கொண்டாடுவாங்கள அது போலத் தான் நானும் சந்தோஷமா இருப்பேன்." என்று சிரித்தாள்.

ரோஜா சிரிப்பதை ரசித்தவள், "இப்ப உங்க மாமா வீட்டுல இல்லாததுனால மேடம் எப்படியிருக்கீங்க?"

"அது ஏன் கேட்குற? திருவிழா முடிச்ச மறுநாள் வெறிச்சோடி போய் ஆள் இல்லாத இடத்துல ஆங்... அணில் விளையாடிட்டு இருக்கும்ல அது போலத் தான் அவரை பிரிஞ்சு, அவன் நினைவோடு பொழுதை கழிச்சிட்டு இருக்கேன்." என்று வர்ணனையுடன் சொல்லிக்கொண்டிருந்தாள் ரோஜா.

"நீ கவிஞராக வேண்டியவள் தவறி போய் அக்கவுண்டன்ட்டா வேல பாக்கற!" என்று பாராட்டியவளிடம்,

"காதலிச்சாலே கவிஞராகிடலாம்..." என்றாள் ரோஜா.

"உன் மாமா இல்லன்னா அலங்காரம் கூடப் பண்ண தோணலையா?  இல்ல மறந்துட்டியா?" என்று குறைவுபட்டவளிடம்,

"என் ராஜா என் கூட இருந்தா சந்தோஷமா அலங்காரம் பண்ணிக்குவேன். அவன் பார்த்து ரசிக்கனும்ன்னு ஆசை படுவேன். இன்னைக்கு அவனும் இல்ல. அவன் நியாபகத்துல ஆபிஸ்க்கும் வந்துட்டேன். வொர்க் விஷயமா ஊருக்கு போயிருக்கான். வர நாலு நாள் ஆகும்." என்று சோகமாக கூறினாள்.

"ஸோ இந்த ரோஜா அந்த ராஜாவைத் தேடிட்டு இருக்கா!" என்று தீபா சொல்லவும், அவள் முகத்தைப் பார்த்துச் சிறு புன்னகையுடன் தலையாட்டினாள் ரோஜா.

தங்களது கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.


நன்றி

சாய்லஷ்மி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *