வியாழன், 22 செப்டம்பர், 2022

அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 2

 அத்தியாயம் : 2

அறைக்குள் நுழைந்ததும் சோம்பலாக படுக்கையில் சரிந்தாள் லஷ்மீகா. 


மனகுழப்பமா இல்லை அந்த படத்தின் மீதான தாக்கமா எனத் தெரியாது கண்களை மூடியவள், தூங்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணத்துடன் துயில் கொள்ள நினைத்தாள். 


மூடிய கண்களுக்குள் சற்று முன்னர் பார்த்த படத்திலிருந்து, "கடவுளிடம்  என் வேண்டுதல் எல்லாம் நீயே...  உனையன்றி வேற யாரும் வேணாமே!” என்று, கதாநாயகனை நினைத்து கதாநாயகி உருக்கமாக பாடிய பாடல் காட்சிகள் நினைவிற்கு வந்தது. 


உடனே சலிப்புடன் கண்களைத் திறந்தவள், முற்றிலுமாக அந்த படத்திலிருந்து வெளிவர நினைத்து, மறுபக்கம் புரண்டு படுத்தாள். 


தலையணை மீது அழுத்தமாக முகத்தை பதித்து, எதையும்  நினைக்க கூடாது என்று நம்பிக்கையுடன் துயில் கொள்ள முயற்சி செய்தாள். ஆனால், அவளால் முடியவில்லை. 


"எனக்குக் காதல் தேவையில்ல" என்று முதுகுகாட்டி நின்றபடி கூறும் நாயகன்... 


அவனின் முன்னால் சென்று, "இந்த பூமியில நான் வாழ்ற கடைசி நிமிஷம் வரை, எனக்கு உங்களோட காதல் தேவை" என்று நாயகனை பார்வையால் தழுவி கொண்டிருக்கும் நாயகி என்று கண்களுக்குள் படக்காட்சிகள் வந்து பயமுறுத்த, கண்களை கசக்கிவிட்டு, விழிகளை அகல விழித்தாள் லஷ்மீகா.


'ஏன் இந்தப் படம் நம்மளை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது?' என்று மனதிற்குள் எண்ணியவள், விடை தெரியாது யோசித்தவண்ணம் கண்களை மூட பயந்து விட்டத்தை பார்த்தபடி இருந்தாள். 


சில நொடியில் அவளின் அருகில் பொத்தென்று வந்து அமர்ந்தான் பவன். 


"ஹே லூசு ஒழுங்கா படு" என்று அவன் அருகாமையை உணர்ந்து கத்தினாள் லஷ்மீகா. 


"எனக்குக் கொஞ்சம் கூட இடங்கொடுக்காம சென்ட்ர்ல வந்து படுத்திருக்க? நீ லூசா இல்ல, நான் லூசா?" என்று, அவளின் காதருகே கத்தினான் பவன். 


அவனின் கூற்றில் வழக்கமாக தான் படுக்கும் இடத்திற்கு நகர்ந்து படுத்தாள் லஷ்மீகா. 


அவளது அருகில் வந்து தலை வைத்தான் பவன். எவ்வளவு தான் அவளுடன் சண்டையிட்டாலும், அவளின்றி அவனால் இருக்க முடியாது. பெற்றோர்கள் இல்லாமல் கூட இருந்திருந்திடுவான் லஷ்மீகா இல்லாமல் இருக்க மாட்டான். ஏனெனில் சிறு வயதில் இருந்து அவனுடன் அதிகமாக இருப்பது லஷ்மீகா மட்டும் தான்... 


சிறிது நேரத்தில் அவன் உறங்கும் சத்தம் குறட்டையாக காதை எட்டவும், 'மங்கி கூட தூங்கிட்டான்' என்று சலிப்புடன் கண்களை மூடி மூடி திறந்தபடி இருந்தாள். 


வெகு நேரமானது. அவளால் தூங்கவும் முடியவில்லை. அந்த படத்திலிருந்து வெளி வரவும்  முடியவில்லை. ஏதோ சொல்ல முடியாத உணர்வு அவளை ஆட்கொண்டு தூக்கத்தைத் தடை செய்வது போல உணர்ந்தவள், கண்களை மட்டும் இறுக மூடினாள். 

எப்போது வேண்டுமானலும் தூக்கம் வரட்டும் என்று அருகில் கிடந்த தலையணையை எடுத்து  இறுக்கமாக தழுவினாள். அப்படியும் தூக்கம் வரவில்லை. 


சிறிது நேரம் கழித்து பவன் புறம் புரண்டு படுத்தாள். அவனையே  கண் இமைக்காமல் பார்க்க தொடங்கினாள். அவன் செய்யும் சேட்டைகளை எண்ணிப் பார்த்து அவன் புறம் கொஞ்சம் மனதை திருப்பியவள், எப்போது கண் மூடினாள் எனத் தெரியாது, பொழுது விடிந்து விட்டதை அறியாது துயில் கொள்ள ஆரம்பித்தாள். 


ஏனெனில் காலையில் சமையல்  பொறுப்பு லஷ்மீகாவுடையது என்றும், மாலையில் அவளது அன்னை சத்யா பொறுப்பு என்றும் அவர்களுக்குள் சட்டம் வகுக்கப்பட்டிருந்தது. மற்ற வீட்டு வேலைகள் எல்லாம், சரத் மற்றும் பவனுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்தது. 


நேரம் சென்று கொண்டே இருந்தது. மணி ஆறரை கடந்து எழு மணியாகிவிட்டது. இருவரும் துயில் கலைந்து எழவில்லை. 


தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலைக்குச் சென்றிருந்த அவர்களது பெற்றோர்களான சரத் மற்றும் சத்யா, இரவு நேர வேலை முடிந்து தங்களிடமிருந்த சாவியால் வீட்டிற்குள் நுழைந்தார்கள். 


வீடு அமைதியாக இருப்பதையும் மேலும், சமையலறையில் லஷ்மீகாவை தேடி பார்த்து அவளைக் காணாது, இரண்டு பேரும் எங்க இருக்காங்க என்ற எண்ணத்துடன், அவர்களின் படுக்கை அறைக்குள் எட்டிப் பார்த்து, அதிர்ந்துவிட்டாள் சத்யா. 


'என்ன இந்த பிள்ளைங்க இவ்வளவு நேரம் இன்னைக்கு தூங்கிட்டு இருக்காங்க?' என்று மனதிற்குள் எண்ணியபடி, "லஷ்மீ... பவன் எந்திரிங்க டைமாச்சு ஹெட்அஃப்" என்று இருவரின் தோளிலும் மெல்ல தட்டினாள். 


"ஹாங்... வந்துட்டிங்களா மம்மி!!!" என்ற புலம்பலோடு மறுபக்கம் புரண்டு படுத்தாள் லஷ்மீகா. 


பவனோ நல்லபிள்ளை போல... சட்டென்று எழுந்து அன்னையை கட்டிக் கொண்டான். 


அவன் கன்னத்தின் இரு புறங்களிலும் முத்தமிட்டுவிட்டு, சீக்கிரம் பள்ளிக்கு தயாராகும் படி மஞ்சத்தில் இருந்து கீழே இறக்கிவிட்ட சத்யா, லஷ்மீகா எழாமல் இருப்பதை பார்த்துவிட்டு, "சட்டுன்னு எந்திரிடி " என்று கத்தினாள். 


அன்னையின் அதட்டலில் 

தூக்கத்திலிருந்து கஷ்டப்பட்டு கண் விழித்த லஷ்மீகா, "மார்னிங் மம்மி" என்றாள். 


"மார்னிங் இருக்கட்டும். உன் டாடி உன் கிட்ட பேசணும்னு ஹால்ல வெயிட் பண்றாங்க போ..." எனக் கூறிவிட்டு மஞ்சத்தில் தலைசாய்த்தாள் சத்யா. 


'டாடி பேசனுமா? என்ன பேச போறாங்க? ஓ... நேத்து மூவி போனது பத்தி இருக்கும். இந்த மங்கி வேற நேத்து போட்டுக் கொடுத்திருச்சே' என்று மனதிற்குள் எண்ணிய படி நடுகூடத்தை அடைந்தாள். 


பவனும், சரத்தும் எதிர் எதிர் நாற்காலியில் அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தார்கள். 


'நமக்கு முன்னாடி அட்டெண்ட்ஸை போட்டுட்டானா?' என மனதிற்குள் எண்ணியவள், "குட்மார்னிங் டாடி"  எதுவும் நடக்காதது போல இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள் லஷ்மீகா. 


"இது என்ன புது பழக்கம் லஷ்மீ?" என்று, நேற்று கேட்காத கேள்விகளை இன்று கேட்க ஆரம்பித்தார் சரத். 


பதில் கூறாது பவன் புறம் கண்களை திரும்பினாள் லஷ்மீகா. 


அவனோ... வாயை பொற்றி சிரித்தான்.  


'மாட்டிவிட்டுட்டு எப்படி சிரிக்கிறான் சரியான மங்கி' என்று மனதிற்குள் தமயனை வதைத்தாள். 


"நீ இப்படி பண்ணுவன்னு நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கலடா. நீ... உன்னை பவனை வீட்டை நல்லா பார்த்துப்பன்னு தான், நாங்க உனக்கு எல்லா ஃப்ரீடமும்  கொடுத்தோம். உன்னை நம்பி தான், நானும் மம்மியும் தைரியமா எங்க ஜாப்ல இருக்கோம். ஆனா நீ... உனக்கு கொடுத்த ஃப்ரீடத்தை  மிஸ்யுஸ் பண்ண பார்க்கிற?" எனக் கூறியபடி, தன் மூக்கு கண்ணாடியைச் சரி செய்துவிட்டு மகளை கோபமாக முறைத்துப் பார்த்தார். 


அவரின் கோபமான பார்வையில் மனதின் ஓரத்தில் அஞ்சியவள், "ஒன்ஸ் அகெயன் சாரீ டாடி. நான் உங்க கிட்ட பர்மிஷன் வாங்காம போகணும்னு நினைக்கல. உங்களுக்கும், மம்மி ஃபோனுக்கும் கால் பண்ணினேன் கால் ரீச் ஆகல. அதான் போயிட்டு வந்து சொல்லிக்கலாம்னு" பொய் தான் சொல்கிறோம் அதனால் குறைவாக சொல்வோம் என்று பயத்துடன் அத்தோடு பேச்சை நிறுத்தினாள் லஷ்மீகா. 


சரத் அமைதியாக இருந்தார். வீடே மையானகோலம் கொண்டது போல காட்சியளித்தது. லஷ்மீகாவிற்கோ... தந்தை எதுவும் தண்டனை கொடுத்துவிடுவாரோ என்று யோசித்தவண்ணமிருந்தாள். 


அடுத்த நொடி நாற்காலியில் இருந்து எழுந்த சரத், சிநேகிதமாக மகளின் தோளில் கை பதித்து, "இனிமே டாடி கிட்ட சொல்லாம எங்கேயும் போக கூடாது. அப்படி மூவிக்கு போகணும்னா, மார்னிங் டாடி வந்ததும் போவோம்" என்று சிரித்தமுகமாக கூறிவிட்டு அவரது அறைக்குள் மறைந்தார். 


தந்தை இயல்பாக பேசிவிட்டு நகரவும் நிம்மதி அடைந்தவள்,  பெருமூச்சு விட்டு தன்னை சமன் செய்துவிட்டு, மேஜை மீதிருந்த இருந்த தண்ணீர் புட்டியை தமையனை முறைத்துப் பார்த்த படி கையில் எடுத்தாள் லஷ்மீகா. 


"நீ தானடா... என்னை டாடி கிட்ட மாட்டிவிட்டது. இருக்கட்டும் எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்காமலா போயிடும்?" என்று நேரிடையாக பவனைத் திட்டினாள். 


"போ டாங்கி" தமக்கையை  பார்க்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டு கூறினான் பவன்.


"உனக்கு மங்கின்னு நிக் நேம் வச்சதுக்கு பதிலா, சரியான கோள்மூட்டின்னு வச்சிருக்கலாம். ம்ம்ம்..." என்று அவன் முன்பு உதட்டை சுழித்துவிட்டு சமையலறைக்குள் புகுந்தாள். 


அன்று என்ன சமைக்கலாம் என யோசித்தவள், 'ஹாங் பவனுக்கு பாவற்காயே பிடிக்காதுல' என்று பாகற்காயை கையில் எடுத்து அதனை வெறித்தனமாகப் பார்த்தவள், உடனே பாவற்காய் கொழம்பு, பாவற்காயில் முட்டை ஊற்றி பொறியல், மேலும் ஒரு சில காய்கறிகளுடன் பாவற்காயை சேர்த்து கூட்டு செய்துவிட்டு, தானாகவே அமரும் அழுத்தப்பாத்திரத்தில் அரிசியோடு தண்ணீரயும் கலந்து வைத்துவிட்டு, கூடவே அது எவ்வளவு நேரத்தில் சாதமாக மாறித் தானாக அமர வேண்டும் என்று நேரத்தையும் அதற்குக் கொடுத்துவிட்டு, தனது அறைக்குள் நுழைந்தாள். 


அங்கே சத்யா, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். 


அன்னையை தொந்தரவு செய்யாது தன்னுடைய உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவள், தலைநீவல் கொண்டு முடிக்கற்றையை கழுவும் போது, கண்களில் பட்டுவிடுமோ என்று கண்களை இறுக மூடினாள். 


அச்சமயம் நேற்று திரையில் பார்த்த பாடல், மூடியிருந்த கண்களுக்குள் பிரசங்கமானது. 'ஹாங் மறுபடியும் அந்த படம் வந்திருச்சா?' என்று மனதிற்குள் சலித்தபடி குளித்து முடித்து வெளியே வந்தாள். 


அதன் பின்னர் பவன் குளித்து முடித்து, பள்ளிச் சீருடைக்கு மாறினான். 


இருவரும் தங்களை அலங்கரித்துவிட்டு சாப்பிட சென்றார்கள். 


பவனை கேலியாய் பார்த்தபடி, அவனுக்கு தட்டில் சாதத்தை வைத்துவிட்டு பாவற்காயை வைத்து கொடுத்தாள். 


தட்டில் பாவற்காயை கண்டதும், “பாவற்காயை வச்சு என்னைப் பழிவாங்கிட்டில்ல. இரு நானும் உன்னை பழிக்குப் பழி வாங்குறேன்" என்று பல்லை கடித்துக் கொண்டு கூறினான் பவன்.


அவனது கோபமான முகத்தை பார்த்து சத்தமாக சிரித்தபடி தானும் சாப்பிட அமர்ந்தாள் லஷ்மீகா. 


அவளை முறைத்துப் பார்த்தபடி, நாவில் பாவற்காயின் கசப்பு தெரியாமல் இருக்க வேண்டும் என, பட்டுப் பட்டென்று சாதத்தை  முழுங்கினான்.


அவன் கஷ்டப்பட்டு சாப்பிடுவதை பார்த்து வாய்விட்டுச் சிரித்தபடி, சாப்பிட்டு முடித்துவிட்டு, இருவருக்கும் மதியச் சாப்பாடு எடுத்துவைக்க ஆரம்பித்தாள். 


அவனுக்குறிய சாப்பாட்டு பாத்திரத்தை லஷ்மீகா கையில் எடுக்கவும், அவளிடமிருந்து பட்டென்று வாங்கினான் பவன். “நீ எல்லா பாவற்காயையும் எனக்கு எடுத்து வாச்சாலும் வச்சிடுவ. நானே எனக்குச் சாப்பாடு வச்சுக்கிறேன்”  என்று முன்னெச்சரிக்கையாய் கூறினான்.


அதற்கும் சத்தமாக சிரித்தாள் லஷ்மீகா. அவளை வெறுப்பாய் பார்த்தான் பவன். 


இருவரும் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு, நான்கு சக்கர வாகனத்திற்குள் அமர்ந்தனர். 


லஷ்மீகா வாகனத்தை இயக்க ஆரம்பித்தாள். 


பவன், தன்னுடைய தொலைபேசியின் வழியாக வாகனத்தினுள் உள்ள ஊடலை பயன்படுத்தி, சினிமாப் பாடலை ஒலிக்கச் செய்தான். 


முதல் பாடலே, 'ஏன்? இது ஏன்? இது என்னுள்ளே புது மாற்றம்  வந்தது உன்னாலே!' என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. லஷ்மீகாவின் மனம் உடனே அப்பாடலுக்குத் தாவியது. 


பாடலை ஆத்மார்த்தமாக ரசித்த படி வந்தவள், தூரத்தில் போக்குவரத்து சமிக்கைக்காக மற்றவர்கள் காத்திருப்பதை பார்த்துவிட்டு, அவர்களின் பின்னாலே  வாகனத்தை அமர்த்திவிட்டாள். 


அப்போது அங்கு நின்று கொண்டிருந்த, போக்குவரத்துக் காவலரை எதார்த்தமாக அவளது கண்கள் நோக்கின. 


அவரது உடையைக் கண்டதும்,  காவல்துறை மீது மதிப்பும், காவலர் உடை மீது இனம் புரியாத ஒரு  ஈர்ப்பும், தன்னுள் உருவாவதை உணர்ந்தவள், நேற்று பார்த்த படத்தின் தாக்கம் தன்னுள் அதிகமாகிவிட்டது என மனதிற்குள் நினைத்த படி, இதழோரமாய் சிரித்துக் கொண்டாள். 


சில நொடிகளில் தனக்கு முன்னால் உள்ளவர்கள் நகர ஆரம்பிக்கவும், வாகனத்தைக் கிளம்பி முதலில் பவனின் பள்ளிக்கு விரைந்தாள். "டாங்கி, ஈவினிங் பைவ் டென்னுக்கு என்னைக் கூப்பிட வா" எனக் கூறிவிட்டு வாகனத்திலிருந்து இறங்கினான் பவன். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *