பக்கங்கள்

வியாழன், 29 செப்டம்பர், 2022

அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 4

அத்தியாயம் : 4


தமக்கை தனது பள்ளி பையுடன் வருவாள் என எதிர்ப்பார்த்து வாகனதினுள் அமர்ந்திருந்த பவன், 

லஷ்மீகா வெறுங்கையுடன் வருவதை ஜன்னல் வழியாக பார்த்துவிட்டு அதிர்ந்தான். 


வாகனதினுள் வந்தமர்ந்த லஷ்மீகாவிடம், "என் பேக்கை எடுத்துட்டு வா போ..." என்று அவளை ஓரிரு அடி அடித்தான். 


அவனது கையை பிடித்து தடுத்தவள், "பவன்!!! ஒழுங்கா நீயே போய் உன் ஸ்கூல் பேக்கை எடுத்துட்டு வா. இல்லன்னா, நாளையிலிருந்து நான் உன்னைக் கூப்பிட வரமாட்டேன்" என்று திட்டினாள். 


"போ... நான் போய் எடுக்கமாட்டேன். நீ போய் எடுத்துட்டு வா. என் ப்ரெண்ட்ஸ் முன்னாடி, என்னை நீ இன்சல்ட் பண்ணிட்ட" என்று கத்தினான்.


"நீ தான்டா முதல்ல என்னை இன்சல்ட் பண்ண. சீக்கிரம் போய் பேக்கை எடுத்துட்டு வா... எனக்கு அசைன்மென்ட் நிறைய இருக்கு டா" எனக் கூறிவிட்டு வாகனத்தைக் கிளம்பியவள் அவனை பார்ப்பதை தவிர்த்து கோபமாக முகத்தை வைத்துக் கொண்டாள் லஷ்மீகா.


"போ நான் போக மாட்டேன்" என்று கத்தினான். 


"டாடிக்கு, போன் பண்ணிடுவேன்" என்று சொல்லி பார்த்தாள்.


தமக்கை தந்தையை அழைப்பதற்குள் நாம் அழைத்துவிடுவோம் என்று மனதிற்குள் நினைத்தவன், "நான் பண்றேன்" என்று அவனுக்கென இருந்த கைப்பேசியை வாகனதினுள் இருந்து சட்டென்று தேடி எடுத்து வேக... வேகமாக தந்தைக்கு அழைப்பு விடுத்தான்.


உடனே தன்னுடைய கைபோனிலிருந்து தந்தைக்கு அழைத்தாள் லஷ்மீகா.


இருவரும் தங்களுடைய தந்தையின் கைபோனுக்கு ஒரே நேரத்தில்   அழைத்ததில், சரத்தின் எண்கள் தற்சமயம் தொடர்பு கொள்ள முடியவில்லை எனப் பதில் வந்தது.


மீண்டும் பவன் அழைக்க... லஷ்மீகா அழைக்க... என்று அவர்களுள் சண்டை நடந்து கொண்டிருந்தது. 


அச்சமயம் டெக்... டெக் என்று வாகனத்தின் கண்ணாடிக் கதவை, யாரோ தட்டும் சத்தம் கேட்டு, தன் பக்கமுள்ள கண்ணாடியை இறக்கினான் பவன்.


அவனது தோழர்கள் அவனுடைய பள்ளிபையை கொண்டு வந்திருந்தனர்.


"தேங்க்ஸ்ப்பா பின்னாடி பேக்கை வச்சிருங்க. இவன் இப்படித்தான் வீட்லையும் ரொம்ப சேட்டை பண்ணுவான்" என்று தமையனை திட்டியபடி வாகனத்தின் பின் பக்கக் கதவை அவர்களுக்குத் திறந்து கொடுத்தாள் லஷ்மீகா.


பள்ளிபையை வைத்துவிட்டு, "பை பவன்" எனக் கூறிவிட்டு தோழர்கள் விரையவும், லஷ்மீகா வாகனத்தை இயக்கினாள்.


பவன் முகத்தைத் தூக்கி வைத்த படி இருந்தான். அதனையெல்லாம் கண்டுக்கொள்ளாது வீட்டிற்கு விரைந்தாள்.


வீடு வந்ததும் முதல் ஆளாக தந்தையின் அருகில் சென்று, அழுத படி தமக்கையை பற்றிக் குறை கூற ஆரம்பித்தான் பவன்.


"உங்க இரண்டு பேருக்கும் பஞ்சாயத்து பண்ண என்னால முடியாது. என் பிள்ளைங்கன்னு உங்களை சொல்லிக்க எனக்குக் கேவலமா இருக்கு" என்று திட்ட ஆரம்பித்தார் சரத்.


"ஏன் டா எப்ப பார்த்தாலும் லஷ்மீ  கூட சண்டை போடுற?" என்று சன்னமாக மகனை அதட்டினாள் சத்யா.


உடனே கோபமடைந்த பவன், "ஆமா!!! நீங்க எப்ப பார்த்தாலும் அவளுக்கே சப்போர்ட் பண்ணுவிங்க. உங்களுக்கு அவளை தான பிடிக்கும். என்னலாம் உங்களுக்குப் பிடிக்காதே!" எனக் கூறியவன், பட்டென்று கண்ணீர் வடித்தபடி அறைக்கு ஓடினான் பவன்.


அதனை பெற்றவர்கள் இருவரும் பார்த்துவிட்டு வருத்தமடைந்தவராக, வீட்டிற்குள் நுழைந்த லஷ்மீகாவிடம் கோபம் கொண்டார்கள். 


"ஏன்டி!!! அவன் தான் சின்னப் பையன் நீ விட்டுக் கொடுக்க வேண்டியது தான?" எனக் கேட்டாள்  சத்யா.


"மம்மி.... நீங்க அவன் என்ன பண்ணானு தெரியாம பேசாதிங்க" என்று வாதாட ஆரம்பித்தாள் லஷ்மீகா.


"லஷ்மீ எதிர்த்து பேச கூடாது. மம்மி சொல்றதை கேளு. அவன் கூடச் சரிக்கு சமமா சண்ட போடுறதை நிறுத்து. அவனும் உன் கூடச் சண்ட போடமாட்டான்" என்று அறிவுரை வழங்கினார் சரத்.


பெருமூச்சு விட்டுத் தன்னை சமாதானம் செய்து கொண்டவள், தன் பெற்றோருடன் இந்த சின்ன விஷயத்திற்காக வாதாட முடியாது என எண்ணியவளாக, "ஓகே டாடி" என்றாள்.


"தட்ஸ் குட்!!!" என்றார் சரத்.


தந்தையின் முன்னால் செயற்கையாக புன்னகை சிந்திவிட்டு, அறைக்குள் நுழைந்தவள் கண்களை மூடிப் படுத்திருக்கும் தமையனை கோபமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு குளிக்கச் சென்றாள்.


குளித்துவிட்டு தொலைக்காட்சி முன்பு போய் அமர்ந்தாள் லஷ்மீகா.

இடையே விளம்பரம் வர ஆரம்பிக்கவும், அருகில் இருந்த கைப்போனை எடுத்து, தோழிகள் அனுப்பியிருந்த குறுஞ்செய்திக்கு பதில் அனுப்ப ஆரம்பித்தாள்.


விளம்பரம் முடிந்து, 'ஏன் இது ஏன் இது என்னுள்ளே' எனப் பாடல் ஒலிக்க ஆரம்பிக்கவும், எதிர்பாராமல் அந்த பாடலைக் கேட்ட நொடி சந்தோஷத்துடன் நிமிர்ந்தவள், போனை இருந்த இடத்திலே வைத்துவிட்டு அப்பாடலை மெய் மறந்து கேட்க ஆரம்பித்தாள். 


பாடல் முடியும் வரை தொலைக்காட்சியில் இருந்து கண்களை எடுக்கத் தோன்றாமல் சிலை போலச் சமைந்து விட்டாள்.


அப்பாடல் மூலம் அவளுள் ஏதோ ஓர் சந்தோஷ எண்ணம் துளிர் விட்டு வளர்வதை அவ்வேளையில் நிச்சயமாக மனதிற்குள் உணர்ந்தாள்.


"லஷ்மீ... லஷ்மீ"


அன்னை அழைப்பது கூடத் தெரியாமல், தொலைக் காட்சியிலே அவளது கவனம் இருந்தது.


அதனால் சந்தேகத்துடன் மகளின் அருகில் வந்து அவளது தோளைத் தொட்டு, "லஷ்மீ" என அழைத்துப் பார்த்தாள் சத்யா.


"ம.... மம்மி கூப்பிட்டிங்களா?" ஏதோ தவறு செய்தவள் போலப் பயத்துடன் அன்னையை ஏறிட்டாள் லஷ்மீகா.


"ஆமாடி!!! நான் கூப்பிட்டது உனக்குக் காதுலவிலலையா?” 


பதில் பேசாது முப்பத்திரண்டு பல்லும் தெரியும் படி சிரித்தாள் லஷ்மீகா. 


அவளது புன்னகையை இளக்காரமாய் பார்த்தபடி, “நைட் டிபனுக்கு என்ன பண்ணட்டும்?" என்று சடைத்தபடி கேட்டாள். 


"ஏதாவது பண்ணுங்க மம்மி" எனக் கூறிவிட்டு எழுந்து அறைக்குள் புகுந்தாள் லஷ்மீகா.


பவன் நோட்டுப் புத்தகத்துடன் மஞ்சத்தில் அமர்ந்திருந்தான். 


அவனைக் கண்டு கொள்ளாது மெத்தையில் சரிந்து, அந்தப் பாடலைப் பற்றி நினைத்தாள்.

உடனே கல்லூரியில் அந்த படத்தைப் பற்றி பேசிய உரையாடல் நினைவுக்கு வரவும், கூடவே எப்படிப்பட்டவன் உனக்குக் கணவனாக வரணும் என்று  ஐஸ்வர்யா கேட்டதும் நினைவிற்கு வந்தது.


இதழோரமாய் அதனை நினைத்துச் சிரித்துக் கொண்டவள், 

'எப்படிப்பட்டவன் தனக்கு கணவனாக வரணும்' என தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள். 


உடனே அவளது மணிக்கணக்கில் காக்கிசட்டை அணிந்த ஒருவனின்  பிம்பம் லேசாக பிரசங்கமானது. முகம் மட்டும் சரியாகத் தெரியவில்லை.


ஏனென்றால், "ஹே சாப்பிட வா, மம்மி கூப்பிடுறாங்க" என்று அவளது தோளைத் தட்டி பவன் சொல்லிவிட்டு நகரவும், பட்டென்று கண்களை விழித்து விட்டாள் லஷ்மீகா. கனவும் கலைந்து போய் விட்டது.


கைகளால் முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டவள், கோபத்தை மறந்து தன்னிடம் பேசிவிட்டு செல்லும் தமையனை நினைத்துச் சிரித்த படி எழுந்து சாப்பிட சென்றாள்.


நால்வரும் ஒன்றாக சாப்பிட்டு முடிக்கவும் சரத்தும், சத்யாவும் வேலைக்குக் கிளம்பினார்கள்.


"லஷ்மீ!!! பவன் இரண்டு பேரும் எங்கேயும் போகக் கூடாது ஓகே. நாங்க போனதும் கதவை லாக் பண்ணிடுங்க. மார்னிங் நாங்க வந்து திறந்துக்குவோம். எனி எமர்ஜென்சினாலும் உடனே டாடி, மம்மிக்கு கால் பண்ணுங்க"  வழக்கம் போலக் கூறும் அறிவுரை தான் என்றாலும், தினமும் அதனை ஒரு வேலையாக வைத்திருந்தார் சரத்.


"மாவை தூக்கி ப்ரீட்ஜூல்ல வச்சிடு. மம்மிக்கு ப்ளாஸ்க்குல டீ மட்டும் போட்டு கொடு. போகும் போது எடுத்துக்கறேன்" என்றாள் சத்யா.


இருவரும் வேலைக்குக் கிளம்பும் வரை, கூடவே இருந்து வழக்கம் போல உதவி செய்தவள், அதன் பின்னர் தன்னுடைய கல்லூரிப் பாடங்களை படிக்க அமர்ந்தாள் லஷ்மீகா.


வெகு நேரம் அமர்ந்து லஷ்மீகா பாடங்களை படித்துக் கொண்டிருக்க, எழுதிய பாடப் புத்தகத்தின் மேலே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான் பவன்.


சுமார் பதினொரு மணியளவில் தூக்கம் கண்ணை நெருங்கவும், புத்தகங்களை தனது கல்லூரிப் பைக்குள் எடுத்துத் திணித்தவள், பவனையும் சரியாக படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அவனருகில் சரிந்தாள்.


கண்களை மூடிய சில நொடியிலே அந்த படத்தில் வரும் காட்சிகள் கண் முன்னே வந்து வந்து செல்ல... இன்றும் தூங்குவதற்குச் சிரமப்பட்டாள்.


'ஆ... என்னடா இது நமக்கு வந்த சோதனை? ச்சே... ஏன் டா அந்தப் படத்துக்கு போனோம்னு இருக்கு?' என்று தன்னைத் தானே திட்டிவிட்டு வேறு பக்கம் திரும்பிப் படுத்துப் பார்த்தாள் லஷ்மீகா. 


வெகு நேரம் கழித்து உறக்கத்தை தழுவினாள். 


அடுத்த நாள் இரவு... அவளது கனவில் காக்கிசட்டை உடையணிந்திருந்த ஒருவனின் பின் பக்கம் புலப்பட்டது. அவனது வளத்தியான உயரம், உயரத்திற்கு ஏற்ப உடல் எடை, கை, கால், சிகையலங்காரம் என எல்லாவற்றையும் பார்த்தாள். ஆனால் முகம் மட்டும் அவளால் பார்க்கமுடியவில்லை. பொழுதும் விடிந்து விட்டது. 


கண் விழித்ததும் அந்தக் கனவைப் பற்றி ஆராய்ந்தவள், 'ஒருவேளை அந்த படத்துல வர்ற ஹீரோவா இருக்குமோ? படத்துல உள்ள ஹீரோவிற்கு மேரேஜ் ஆகிடுச்சே. ஸோ அவரை நினைகறது தப்பு. ஆனா... அந்த ஹீரோவாவும் இருக்க சான்ஸ் இல்ல. ஏன்னா நம்மாளு ஹீரோவை விடக் கொஞ்சம் ஹைட்டா இருந்தான்' என்று மனதிற்குள் எண்ணினாள். 


அதற்கு அடுத்தடுத்த நாட்களில்,  'இன்னைக்காவது நம்ம ஹீரோ முகத்தை பார்த்திடனும்' என்ற எண்ணத்துடன் தூக்கத்தை தழுவ ஆரம்பித்தாள். 


ஆனால், அவளால் கனவில் வரும் காக்கிசட்டை அணிந்திருந்த காவலனின் முகத்தை மட்டும் காண முடியவில்லை. எப்படியாவது அவனைப் பார்த்திட வேண்டும் என்று தவிக்க, ஏன் துடிக்க ஆரம்பித்தாள் லஷ்மீகா. 


ஆனால் யாரிடமும் தன் மனதிற்குள் உள்ளத்தை சொல்லவில்லை. சொல்ல பயந்தாள். அவனைப் பார்த்த பின்னர் சொல்லலாம் என நினைத்தாள். ஏனெனில் அவன் எப்படி இருப்பான் எனக் கேட்டால் சொல்ல தெரியவேண்டும் அல்லவா? என நினைத்துவிட்டு, தினமும் அவனை கனவில் தேடி கொண்டிருந்தாள். 


தினமும் தூங்கி எழுந்ததும் காக்கிசட்டை அணிந்திருந்த காவலனை பற்றி தான் எண்ண ஆரம்பித்தாள். அவன் முகத்தை பார்க்க முடியவில்லை என தனக்குள்ளே புலம்பி ஆரம்பித்தாள். 


'நான் கண்டது கனவா? இல்ல... நம்மளோட கற்பனையா?' இல்லையே? ஒரு நாள் அப்படி வந்தா கனவுன்னு சொல்லலாம். ஆனா.. இந்த ஒன் மன்த்தா... அடிக்கடி ஒருத்தன் நம்ம நினைவுக்கு வர்றானே? என்ன அவன் முகம் தான் சரியா தெரியமாட்டிங்கிது' என்ற யோசனையுடனே குளித்து கல்லூரிக்குக் கிளம்பினாள்.


வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, தெரு வளைவில் நின்று கொண்டிருந்த காவலதிகாரியை பார்த்தும், உடனே வாகனத்தை மெல்ல நிறுத்தி, அவரைக் கவனித்தாள் லஷ்மீகா.


'ம்கூம் இ.... இ... இது... அவன் போல இல்ல. அவன் இன்னும் கொஞ்சம் ஹைட்' என்று மனதிற்குள் நினைத்துவிட்டு, வேகமாக வாகனத்தை இயக்க ஆரம்பித்தாள்.


அதனை அப்போது பவன் கவனிக்கவில்லை. பரீட்சைக்காக புத்தகத்தின் மீது தனது முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தான். இல்லையெனில், லஷ்மீகாவின் செய்கையை கவனித்துவிட்டு, அவளை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்திருப்பான்.


***


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக