பக்கங்கள்

வியாழன், 29 செப்டம்பர், 2022

அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 5

 அத்தியாயம் : 5


பவனை பள்ளியில் விட்டுவிட்டு கல்லூரிக்கு விரைந்த லஷ்மீகா, இடையில் காக்கிச்சட்டை அணிந்திருந்த நபர் தென்பட்டால், உடனே வாகனத்தை நிறுத்தி, ஒரு கணம் அவர்களைப் பார்க்கத் தவறவில்லை.


'தன் கண்களுக்குப் புலப்படுபவன் நிஜத்திலும் இருப்பானா?’ என்ற கண்ணோடத்தில் பைத்தியம் போல, செல்லும் இடங்களிலெல்லாம் அவனைத் தேட ஆரம்பித்தாள்.


'அவன் முகம் வேற சரியா தெரியல? காக்கி ட்ரெஸ், ஹெட், பின்பக்க ஹேர்ஸ் டைல், முஸ்டாச், கையில பிளாட்டினம் பிரேஸ்லெட். இதை வச்சுக்கிட்டு இந்த உலகத்துல எப்படி அவனைக் கண்டுபிடிக்க? இந்த அடையாளத்தோட தான், லட்சம் பேர் இந்த நாட்டுல சுத்திட்டு இருப்பாங்க. அவன் நிஜமா... இல்ல நம்ம கற்பனையா? இல்ல வெறும் கனவா?' என்று தனக்குள்ளே திரும்ப... திரும்ப கேட்டு... கேட்டு சலித்துப் போனாள். 


ஆனால் அடுத்த நொடி, 'அவனை எப்படி கண்டு பிடிக்கிறது? அவனை சீக்கிரம் கண்டு பிடிக்கணும். இல்லன்னா நாம நிம்மதியா தூங்க முடியாது' என்று நினைத்தாள். 


'கொஞ்ச நாள் நமக்கு தெரிஞ்ச சிம்டம்ஸை வச்சு, உண்மையிலே அப்படியொரு ஆள் இருக்கானானு தேடிப் பாப்போம். அவன் கிடைச்சாலும் ஓகே. இல்லன்னா ஒரு நல்ல சைக்காட்டிரிஸ்ட்டை நாமளே பார்த்திட வேண்டியது தான்!' என்று முடிவெடுத்தவண்ணம் கல்லூரியை அடைந்தாள்.


ஐஸ்வர்யாவை தவிர மற்ற தோழிகள் வாகனநிறுத்துமிடத்தில் நின்றிருப்பதை கவனிக்காது  வாகனத்தை நிறுத்திட்டு, தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு யோசனையுடன் வகுப்பறையை நடக்க ஆரம்பித்தாள் லஷ்மீகா.


"என்ன லஷ்மீ... ஒரு மாதிரி நடந்து போறா?" என்று தர்ஷா சொல்லவும்,


"என்ன ப்ராப்ளமோ? நாம நிற்கிறது கூடத் தெரியாம போயிட்டு இருக்கா?" என்றாள் யோசனையுடன் இலியா.


"சரி வா... என்னென்னு கேட்டுப் பார்ப்போம். இன்னும் ஐஸை காணோம்?" எனக் கூறிய படி தீவிதா நடக்க ஆரம்பிக்க, லஷ்மீகாவை அழைத்த படி, அவளது பின்னே மூவரும் நடக்கலானார்கள்.


அவர்களின் குரல் கேட்டு பின்னால் திரும்பியவள் சோகமாக, "ஹாய்" என்றாள் லஷ்மீகா.


அருகில் சென்றதும், "ஹாய் இருக்கட்டும். ஏன் உன் ஃபேஸ் டல்லா இருக்கு? அந்த வாண்டு உனக்கு வீட்ல திட்டு வாங்கிக் கொடுத்துட்டானா?" என்று பவனை பற்றிக் கேட்டாள் தீவிதா.


நால்வரும் நடக்க தொடங்கினார்கள். "அப்படிலாம் இல்லடி. அவனுக்கு எக்ஸாம்னு கொஞ்சம் அடக்கி வாசிச்சிட்டு இருக்கான். ஏன்னா... ஸ்டடிஸ்ல ஏதாவது டவுட்னா என் தயவு வேணும்ல. அதான், எக்ஸாம் டைம் மட்டும் சார் என் கூட சண்டை போட மாட்டாங்க" என்றாள் சிரிப்புடன்...


"அப்புறம் என்ன ப்ராப்ளம்?" எனக் கேட்டாள் இலியா. 


"ப்ராப்ளமே நீ தான்டி!!!" என்றாள் லஷ்மீகா.


இலியாவோ, "நானா?" என்று அதிர்ச்சியாகக் கேட்டாள்.


"பிறகென்ன... உன் ஆளுக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை எல்லாம் எனக்கு அனுப்பிருக்க? எப்பா... சாமி அதை படிச்சிட்டு" என்று மீதியை சொல்லாமல் அவளை முறைத்தாள் லஷ்மீகா.


"ஐயையோ! உனக்கு அனுப்பிட்டேனா? ஹே சாரிடி"


"அப்படி என்ன மெசேஜ்டி அனுப்பினா?" என்று இலியாவை சந்தேக கண்களுடன் பார்த்த படி கேட்டாள் தர்ஷா.


உடனே இலியாவோ, லஷ்மீகாவின் கைப்பிடித்து, "ஹே வேணாடி, அதை வெளிய சொல்லாத என் மானமே போகும்" எனக் கெஞ்சினாள்.


அவள் கெஞ்சிக் கொண்டிருப்பதை வைத்து, "இல்ல லஷ்மீ!!! நீ சொல்லியே ஆகணும்" என்று சட்டமாய்க் கூறினாள் தீவிதா.


லஷ்மீகாவோ குறுஞ்செய்தி பற்றி சொல்வோமா? வேண்டாமா? என யோசித்த நிமிடம், அவர்களை நோக்கி வேகமாக ஓடி வந்தாள் ஐஸ்வர்யா.


"ஹலோ டியர்ஸ்... கடைசில எ... எனக்கும் எங்க வீட்ல கால்கட்டு, கை.... கைக்கட்டுன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க. அ.... அப்பப்பா அவங்க கிட்ட ஆர்க்யூ பண்ணிட்டு வர்றதுக்குள்ள கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. நல்லவேளை பெல் அடிக்கிறதுக்குள்ள வந்திட்டேன்" என்று மூச்சு வாங்க கூறினாள்.


"ஹே மாப்பிள்ளை யாருடி?" என்று சந்தோஷமாகக் கேட்டாள் தீவிதா.


"பேரு விக்ரமாம் பிஸ்னஸ்மேன். வீட்டுக்கு ஒரே பையன். எங்க வீட்டிலேயும், அவன் வீட்டிலேயும் என்னை... அவன் தலையில் கட்ட முடிவே பண்ணிட்டாங்க. நான் தான் மேரேஜிற்கு எஸ் சொல்லாம வந்திட்டேன். 


அதுமட்டுமல்ல, என் போன் நம்பரை மம்மி அவன் கிட்ட கொடுத்திட்டாங்களாம். அந்த சாரு, வாட்ஸ்ஆப்பில் எனக்கு மெசேஜ் பண்ணிருக்காராம். ஏதோ என் கிட்ட பேசணுமாம்" என்று ஐஸ்வர்யா சொல்லிக் கொண்டிருக்க,


"பிஸ்னஸ் பண்றான்னா... ஏன் அவனை நீ மேரேஜ் பண்ணிக்ககூடாது? ஆள் பார்க்க எப்படியிருப்பான்?" எனக் கேட்டாள் தர்ஷா.


"போட்டோவுல பார்த்தேன். ஆள் பார்க்க நல்லா தான் இருக்கான். ஆனா... எனக்கு சினி ஃபீல்டுல ஏதாவது ஒரு ஒர்க் பண்றவனா இருக்கணும். இல்லன்னா, அன்னைக்கு சொன்னேன்ல தியேட்டர் வச்சிருக்கணும்னு" என்று ஐஸ்வர்யா சொல்வதைக் கேட்டுட்டு, அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


அவர்களின் பார்வை வேறுபாட்டை பார்த்துவிட்டு, "என்ன யாரும் ஒன்னும் பேச மாட்டேன்ங்கிறிங்க?" என்று யோசனையாகக் கேட்டாள், ஐஸ்வர்யா.


"ஐஸ்!!! கொஞ்சம் கூட உனக்கு ப்யூசர் பத்தின பயமே இல்லடி. அதான் இப்படி பேசிட்டு இருக்க?" என்றாள் தீவிதா.


"என்னடி சொல்ல வர்ற? கொஞ்சம் புரியும் படியா சொல்லு?" என்று சிணுங்கினாள்.


"பிஸ்னஸ் பண்றவன் என்ன சினிமா பார்க்க மாட்டானா? இல்ல, தியேட்டருக்கே போக மாட்டானா? எல்லோருக்குமே சினிமாங்கிறது இப்பலாம் ஒரு பார்ட் ஆப் லைஃப்பா ஆகிடுச்சுடி. கண்டிப்பா அவனுக்கும் எந்த ஹீரோ, ஹீரோயினையாவது பிடிச்சிருக்கும். 


அதனால, நீ அவனை மேரேஜ் பண்ணிக்கிட்டு சந்தோஷமா சினிமா பார்க்கலாம். உன்னோட ஆசைக்கெல்லாம் அவன் நோ சொல்லமாட்டான். பிஸ்னஸ்மேனுக்கு இந்த சொசைட்டியில் தனி மதிப்புண்டு.  யோசிடி" என்று லஷ்மீகா சொல்லவும்,


"அ... அப்படியாடி சொல்ற?"


"எஸ்..."


"அப்ப... உடனே அவனுக்குக் கால் பண்ணி, உனக்கு சினிமா பார்க்க பிடிக்குமான்னு கேட்கட்டா?" என்று பரபரத்தாள் ஐஸ்வர்யா.


உடனே தோழிகள் நால்வரும் ஒன்று போலச் சிரிக்கவும், ஐஸ்வர்யாவும் தன்னை நினைத்துச் சிரித்து கொண்டாள்.


"கேளுடி... ஆனா சினிமா பத்தி மட்டும் கேட்காத. அப்புறம் நீ சினிமா பைத்தியம்னு அவன் கண்டு பிடிச்சிடப் போறான்" என்றாள் இலியா.


உடனே அவளின் புறம் திரும்பி, "நீலாம் இப்போ தெளிவாகிட்ட?" என்று கேலி செய்தாள் ஐஸ்வர்யா.


'ஏன் ஐஸ்... அத்தனை படம் பார்த்தும் இவ்வளவு ஸ்டெடியா இருக்கா? நாம ஒரு படம் பார்த்திட்டு பைத்தியம் போல ஊர் பெயர் தெரியாதவனை, சொல்லப்போனா அப்படி ஒருத்தன் இருக்கானானே தெரியல ஆனா தேடிட்டு இருக்கோம். நம்ம கனவுல வர்றவன பத்தி, ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லுவோமா? ஏதாவது சொல்யூசன்ஸ் கிடைக்குமான்னு பார்போம்' என மனதிற்குள்  யோசித்துக் கொண்டிருந்தாள்.


"யாரு இவளா தெளிவு? நேத்து அஜய்க்கு அனுப்ப வேண்டிய மெசேஜை மாத்தி லஷ்மீக்கு அனுப்பிட்டா. அதைப் படிச்சுட்டு பாவம் புள்ள, இன்னைக்கு பித்துப் பிடிச்சவ மாதிரி காலேஜுக்கு வந்தா?" என்று சொல்லி சிரித்தாள் தீவிதா.


"அப்படி என்ன மெசேஜ்டி?" என்று லஷ்மீகாவிடம் ஐஸ்வர்யா கேட்ட சமயம், இலியா வெட்கத்தில் தலை குனிந்தாள்.


"ஹே அதை விடுடி! உன் விஷயத்துக்கு வா. சீக்கிரம் அந்த பிஸ்னஸ் மேனுக்கு கால் பண்ணு. அவனை வேற எவளாவது கொத்திட்டுப் போயிடப் போறா?  இப்போலாம் எல்லா இடத்திலும் காம்பட்டீஷன் ஜாஸ்தி, நீ வேற மேரேஜிற்கு நோ சொல்லிருக்க." என்று அவசரப்படுத்தினாள் லஷ்மீகா.


தீவிதாவோ, "ஹே வாங்க. நம்ம ப்ளேஸூக்கு போயிட்டு கால் பண்ணலாம். இப்ப பிரின்ஸி வர்ற டைம். ஏன் க்ளாஸ்க்கு போகாம இங்க நிற்கிறாங்கன்னு கேட்டு, கேஸை போட்டிற போகுது" என்றாள். 


அனைவரும் விளையாட்டு மைதானத்தில் இருந்து, வழக்கமாக தாங்கள் அமரும் மரத்தடிக்குச் சென்று அமர்ந்தார்கள்.


தன் கைபோனில் புலனம் பக்கம் சென்று வேகமாக மெசேஜை பார்த்த ஐஸ்வர்யா, "ஹாய்ன்னு மெசேஜ் அனுப்பியிருக்கான்டி" எனப் போனிலிருந்து நிமிர்ந்தாள்.


"சரி... சரி கால் பண்ணு" என்றாள் தர்ஷா.


உடனே அந்த நம்பரைத் தொடர்பு கொண்டாள் ஐஸ்வர்யா. 


எதிர்முனையில் சில நொடியிலே அழைப்பு ஏற்றுக்கப்பட்டது. தோழிகளை பார்த்த படி போனில் ஒலிப்பெருக்கியை தொட்டு அழுத்தியவள், "ஹலோ.... நான் ஐஸ்வர்ய..."


அவள் பேசுவதற்குள்... இடையே குறிக்கிட்டவன் உடனே, "சொல்லுங்க ஐஸ்...வர்யா...!” என்று மறுபக்கம் அவளது பெயரை அழகாக உச்சரித்தான் விக்ரம். 


அவனின் வேகத்தை கண்டு ஐஸ்வர்யா திகைக்க... 


“நான் ஏன் உங்களை ஐஸ்னு கூப்பிடக் கூடாது?" என்று ஒரு கேள்வியை கேட்டான்.


தோழிகளைப் பார்த்த படி, "ஓ.... எஸ்" என்று அனுமதி வழங்கினாள்.


அவனோ யோசனை வந்தவனாக, "ஐஸ்னு... ம்.... உங்களை கூப்பிடுறதுக்குப் பதிலா ஜில்லுனு கூடக் கூப்பிடலாம். ஏ.....ன்னா, உங்களை நினைச்சாலே, இங்க... ஹார்ட்க்குள்ள ஒரு பீல் அது.... அது... எப்படி எப்படின்னு எக்ஸ்ப்ளைன் பண்ண தெரியல. பட் ஆயிரங்கோடி கிடைச்ச பீல் ஆகுது" என்றான்.


அவனின் இனிமையான வார்த்தைகளை கேட்டுவிட்டு, ஐஸ்வர்யாவுக்கு வெட்கம் வந்துவிட, அவளையே பார்த்துக் கொண்டிருந்த தோழிகளில் ஒருத்தியான தீவிதா,  செல்லமாக அவள் கன்னத்தை கிள்ளினாள்.


"ஐஸ்... ஜில்லுனு கூப்பிட வா? அது இன்னும் கொஞ்சம் கிக்கா இருக்கு" எனக் கிரங்கிய குரலில் கூறிவிட்டு, சன்னமாகச் சிரித்தான். 


அவனது சிரிப்பில் தன்னை தொலைத்தவளாக, ஐஸ்வர்யா சந்தோஷத்தில் திளைக்க... அடுத்து அவள் வாய் திறப்பதற்குள், "ஒன் செகண்ட்... ஒரு இம்பார்ட்டெண்ட் கால்" என்று, தனது அலுவலகம் சம்பந்தப்பட்டவைகளை மற்றொரு அலைபேசியின் வழியாக பேச ஆரம்பித்தான்.


இலியாவோ, "எனக்கு ஹிந்தி க்ளாஸ் இருக்கு, நான் கிளம்புறேன்" எனச் சைகையில் கூறியபடி நகர முயன்றாள்.


அவளின் கைப்பிடித்து, "போட்டேன்னா இருடி" என்று அதட்டினாள் தர்ஷா.


"ஹே நெக்ஸ்ட் க்ளாஸ்ல என்னை வெளிய நிறுத்திரு வாங்கடி" என்றாள். 


அனைவரும், அவளை முறைத்துப் பார்த்தார்கள். அதனால் கோபமாக, “இருக்கேன்!” எனக் கூறிவிட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள் இலியா.


"ஹலோ.... ஹலோஓ.... லைன்ல இருக்கிங்களா?" என விக்ரம் குரல் கேட்கவும்,


திருதிருன்னு முழித்தவள், 'என்ன பேசட்டும்?’ என்பது போல, தோழிகளிடம் சைகையில் பதட்டத்துடன் கேட்டாள் ஐஸ்வர்யா.


'நான் உங்களை எப்படி கூப்பிடட்டும்னு கேளு?' என்று கோபத்தை மறந்து, ஐஸ்வர்யாவுக்கு சைகையிலே யோசனை வழங்கினாள் இலியா.


உடனே அவளது கன்னத்தைப் பிடித்து, செல்லம் கொஞ்சிவிட்டு, "நா... நான் உங்களை எப்படி கூப்பிட?" என்று விக்ரமனிடம் கேட்டாள் ஐஸ்வர்யா.


"என்னை நீங்க எப்படிக் கூப்பிட்டாலும் ஓகே தான். விக்ரம், அம்முக்குட்டி, செல்லக்குட்டி, பட்டுக்குட்டி, டார்லிங், பேபி, ஹஸ் இதுல ஏதாவது ஒண்ணு கூப்பிடுங்க. இப்படித்தான சினிமாவுல பசங்கள பொண்ணுங்க கூப்பிடுறாங்க"


சினிமா என்ற வார்த்தையைக் கேட்டதும் சந்தோஷத்துடன், "நீங்க சினிமாலாம் பார்ப்பீங்களா?” என்று பட்டென்று கேட்டாள். 


"ம்ம்ம்... அடிக்கடி தியேட்டருக்குப் போவேன்" 


இந்த பதிலை கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டாள் ஐஸ்வர்யா. "நா.... நானும் சினிமா விரும்பிப் பார்ப்பேன். இன்பேகட் சினி பீல்ட்ல இருக்கிறவங்களை  மேரேஜ் பண்ணனுங்கிறது தான் என்னோட ஆசை. ஆனா..." என்றதோடு அவள் பேச்சை நிறுத்திவிட,


"ஹே என்னோட பிஸ்னஸே டிவி, ரேடியோ, ஆன்லைன் வெப்சைட்டில் ஆக்டர்ஸை வைச்சு அட்வர்டைஸ்மென்ட் பண்றது தான்" என்றான் விக்ரம். 


"வாவ்!!! அப்ப நீங்க ஹீரோ, ஹீரோயின்ஸ் கூடப் பேசியிருக்கிங்களா?" என்று அவள் பேச ஆரம்பிக்கவும், விக்ரம் பதில் சொல்ல...


மற்றவர்களுக்குக் கொஞ்ச நேரத்தில், லேசாக சலிப்பு தட்ட ஆரம்பித்தது. அவள் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தார்கள்.


முடிவில்... "எப்ப மேரேஜ் வச்சுக்கலாம்?" எனக் கேட்டான் விக்ரம்.


"என் ஸ்டடிஸ் முடிய இன்னும் சிக்ஸ் மன்த்ஸ் தானே இருக்கு முடியட்டும்" என்றாள் ஐஸ்வர்யா.


"அப்ப... அதுவரை சம்திங்... சம்திங்" என்றான் விக்ரம்.


அதனைக் கேட்டு வாய்பொத்தி தோழிகள் சிரிக்க, "ஹே... விக்ரம், ச்சு.... நான் காலேஜ்ல இருக்கேன். இங்க.... பக்....கத்துல..." என்று தோழிகளை பார்த்தாள். ஆனால் எதுவும் பேசவில்லை. 


"நானும் உங்க காலேஜ் பக்கத்துல தான் இருக்கேன். இன்னைக்கு இங்க சூட்டிங். ஆனா இன்னும் சூட்டிங் ஸ்டார்ட் பண்ணல. ம்ம்ம்... பை த பை... நான் உன்னைப் பார்க்க வரட்டுமா?" என்று அனுமதி கேட்டான்.


அனைவரும் ஐஸ்வர்யாவை பார்க்க, "அய்யோ... வேணாம் விக்ரம். இப்ப க்ளாஸ் ஆரம்பிக்கப் போகுது. நான்... நான் போனை வச்சிடுறேன், ஈவினிங் கூப்பிடுறேன்"


"ஹே ஒரு நிமிஷம்"


"பை.... பை... டைம் ஆகிடுச்சு" என்று பெய்யான அவசரம் காட்டினாள்.


"ஹே வெயிட்!!! நான் உங்க காலேஜுக்கு வந்துட்டேன். உன் க்ளாஸ் எது?" எனக் கேட்டான் விக்ரம்.


அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.


***



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக