பக்கங்கள்

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 3


அத்தியாயம் : 3


கல்லூரியை அடைந்தவள், வாகனத்தை அதன் உரிய இடத்தில் நிறுத்திவிட்டு தோழிகளைத் தேடி, வழக்கமாக தாங்கள் அமரும் இடத்திற்கு விரைந்தாள் லஷ்மீகா. 


அவளைப் பார்த்தும், "ஹாய்டி" என்று உற்சாகமாய் கை அசைத்தாள் ஐஸ்வர்யா. 


"எல்லோருக்கும் ஹாய்!!! எங்க இலியாவை காணோம்? எப்பவும் அவ தானே முதல்ல வருவா? இன்னைக்கு லீவா? உங்க கிட்ட இன்பார்ம் பண்ணாளா?" எனக் கேட்டபடி அமர்ந்தாள் லஷ்மீகா. 


"நான் மார்னிங் அவளோட போனுக்கு ட்ரை பண்ணேன் சுவிட்ச்ஆப்ன்னு வந்தது" என்று தகவலாக தீவிதா கூறவும்,


"நேத்து கார்ல வரும் போது, என்கிட்ட புலம்பிட்டே வந்தா, நான் வீட்ல மாட்டிக்கிடுவேனோன்னு பயமா இருக்குன்னு, ஒருவேளை வீட்ல மாட்டிக்கிட்டாளோ?" என்ற கேள்வியோடு பேச்சை நிறுத்தினாள் தர்ஷா. 


ஐஸ்வர்யாவோ, "அப்படிலாம் இருக்காது. ஒருவேளை அவளுடைய பேரண்ட்ஸ்க்கு நாம மூவிக்கு போனது தெரிஞ்சிருந்தா, இம்மீடியட்டா நம்ம யாருடைய  வீட்டுக்காவது கால் பண்ணிருப்பாங்க. ஏன்னா, அவளுடைய மம்மியும், டாடியும் அவ்வளவு டெரர்" என்று கண்களை விழித்து கூறினாள். 


இவை அனைத்தும் கேட்டுவிட்டு, 'நமக்கு மாதிரி இலியாவுக்கும் நேத்து பார்த்த படம் மனசை பாதிச்சிருச்சா? அதான் இன்னைக்கு காலேஜ்க்கு வரலையா?இலியாவுக்கு சும்மாவே வீக் ஹார்ட்' என்ற யூகத்தின் அடிப்படையில், "ஹே ஐஸ்!!! நேத்து பார்த்த அந்தப் படம் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுதுப்பா. உங்களுக்கெல்லாம் அப்படி இருக்கா?" என்ற கேள்வியோடு தோழிகளின் முகத்தை ஆராய்ந்தாள் லஷ்மீகா. 


"எனக்கு, ஹீரோ ஹீரோயின் சேர்ந்து வாழ்ற மாதிரி ஹேப்பி என்டிங்கா படத்தை முடிச்சிருக்கலாம்னு தோணுச்சு" என்று தோளைக் குலுக்கினாள் தீவிதா. 


"ஆமாடி!!! அதுல கடைசியா ஹீரோயின் உயிர் பொழைக்கிற மாதிரி காட்டிருக்கலாம்" என்று தர்ஷா தன்னுடைய கருத்தைத் தெரிவித்தாள். 


"உண்மையிலே ஹீரோயின் தான் பாவம், தன் காதலனோட சேர்ந்து வாழ முடியாம இறந்து போயிடுறா. அவளுடைய காதல் தான், அந்தப் படத்துல ஹைலைட்!!!" என்றாள் ஐஸ்வர்யா. 


இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த லஷ்மீகாவிற்கு, மேலும் அந்த படத்தின் விமர்சனம் மனதை ஆட்டிப் படைக்க ஆரம்பித்தது. 


"ஹே நேத்து ஒரு கவிதை படிச்சேன். சருகான இலை உரமாகிறது. சறுக்கிய காதல் பாடமாகிறதுன்னு போட்டிருந்தாங்க. அந்த லைன் இந்தப் படத்துக்கு பொருந்தும்னு நினைக்கிறேன்" என தீவிதா கூறவும், 


"அப்ப... ஒரு பொண்ணு போலீஸ் ஜாப்ல இருக்கிற பெர்சனை லவ் பண்ணி, ஹீரோயின் மாதிரி வாழ முடியமா இறந்திருக்கணும். அதை தான் மூவியா எடுத்திருப்பாங்களோ?" என்று, கேள்வியாய் தோழிகளைப் பார்த்தாள் தர்ஷா. 


"ஹே அப்படி இல்லப்பா... போலீஸ் ஜாப்ல இருக்கிறவங்களோட சில பேரோட லைஃப் இப்படி இருக்கும்ங்கிற மாதிரி ஒரு எடுத்துக்காட்டுக்காக  காட்டிருப்பாங்க. அதுல ஹீரோயினை வில்லன் கடத்திட்டு போயிருவான் ஹீரோவால அவளைக் காப்பாத்த முடியாம போயிடும் வில்லன் ஹீரோயினை கொன்னுடுவான். ஆனா... அடுத்த நாளே ஹீரோ தன் கடமையைச் செய்யப் போயிடுவாரு. 


ஸோ, போலீஸ் அண்ட் மில்ட்ரி ஜாப்லாம் ரொம்ப ரெஸ்பெக்டபில் ஜாப்னு இந்தப் படத்து மூலமா மக்கள் புரிஞ்சிக்கணும். அவங்க ஃபேமிலியை இழந்தாலும், நாம ஃபேமிலியோட நிம்மதியா இருக்க அவங்க தான் காரணம் என்ற மெசேஜ் தான் இந்தப் படம்" என்று ஐஸ்வர்யா வளவளத்துக் கொண்டிருக்க... 


"ஹே... ஹே போதும்டி. அந்தப் படத்தை எடுத்த டைரக்டர் கூட இப்படி யோசிச்சிருக்க மாட்டாரு. நீங்க என்னென்னா புது... புது டிசைன்ல யோசிக்கிறிங்க. லீவ் தி டாபிக்" என்று சடைத்தாள் தர்ஷா. 


ஆனால் லஷ்மீகாவால் அந்த படத்திலிருந்தும், படத்தின் நாயகி, தன் காதலனோடு வாழ முடியாமல் இறந்து போனதையும், மேலும் காவல்துறை மீது இனம் புரியாத புதிதாய் ஒரு மதிப்பு வந்ததையும்,  மறக்க முடியவில்லை. ஏதோ ஒன்று அவளை அந்த நினைவுகளுக்குள்ளே பிடித்து வைத்துக் கொண்டது. 


மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டுவிட்டு,  நால்வரும் தங்களது கைபோனை  பார்த்த படி, ஆளுக்கொரு திசையில் அமர்ந்தார்கள்.


அப்போது எதார்த்தமாக கைபோனில் இருந்து  நிமிர்ந்த தர்ஷா... மிதமான ஒப்பனையில், சிரித்த முகமாக தங்களை நோக்கி நடந்து வந்துக் கொண்டிருக்கும் இலியாவை பார்த்துட்டு, "ஹே... அங்க பாருங்கடி இலியாவா இது?" என்று சந்தேகமாய் கேட்டாள்.


தோழிகள் நால்வரும் நிமிர்ந்து பார்த்தனர். 


"ஆமாடி அவளே தான். ஆனா... இன்னைக்குத் தான் பர்ஸ்ட் டைம் குளிச்சிட்டு காலேஜுக்கு வர்றா போல? வரட்டும் என்னென்னு கேட்போம்" என்றாள் சிரித்த படி ஐஸ்வர்யா.


தோழிகளின் அருகில் வந்த இலியா, யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் சன்னமான குரலில், "ஹே தர்ஷா, எனக்...கு எனக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிருக்காங்கடி" என்றாள்.


அதனைக் கேட்டவுடன், "வாவ்.... கங்கிராட்ஸ்!!!" என்று முதல் ஆளாக இலியாவை வாழ்த்தினாள் தர்ஷா.


அதன் பின்னர் ஒவ்வொருவரும்  வாழ்த்து தெரிவிக்கவும், தோழிகளின் வாழ்த்து மழையில் நனைந்துவிட்டாள் இலியா.


அவள் சிரித்த முகமாக இருப்பதை பார்த்துவிட்டு, "அதிசயமா இருக்குல ஐஸ். இலியா... இப்படி சிரிச்ச முகமா இருக்கிறதை பார்க்க?" என்று லஷ்மீகா கூறவும்,


"எஸ்!!! எப்பவும் எண்ணெய் தேய்ச்சு இறுக்கி பிண்ணின ஜடையும், தொளதொளன்னு சுடிதாரும், திருதிருன்னு முழிச்சிட்டு சின்ன குழந்தை மாதிரி பயத்துலையே இருப்பா. இன்னைக்கு அழகா தெரியுறா?" என்றாள் 

ஐஸ்வர்யா.


"அவனும் இன்னைக்கு நீ அழகா இருக்கன்னு சொன்னான்டி" என்று கன்னங்கள் சிவக்கக் கூறினாள்  இலியா.


"அப்ப... இரண்டு பேருக்கும் லவ் ஸ்டார்ட் ஆகிடுச்சா?" என்று ஆச்சரியமாக தீவிதா கேட்கவும், 


அவளை செல்லமாக... பார்வையால் கோபித்துக் கொள்வது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு, "லவ்லாம் இல்லடி. சின்ன வயசில இருந்தே அஜயை எனக்குத் தெரியும். அவன் என் மாமா பையன். ஸோ... அவன் கிட்ட பயமில்லாம ப்ரீயா பேசலாம்" என்று சந்தோஷ பெரு மூச்சு விட்டாள் இலியா.


"மேரேஜ் பிக்ஸ் ஆனதும், இலியா வாய்ஸ் கூட மாறிடுச்சுடி. ஆமா... மேரேஜ் எப்ப?" என லஷ்மீகா  கேட்கவும்,


"எக்ஸாம் முடிஞ்சதும்"


"எக்ஸாம் முடிய இன்னும் சிக்ஸ் மன்த் இருக்கே?" என்று மிரட்சியாக தீவிதா கண்களை விழிக்க,


"அஜய்க்கு அப்ராடுல ஒர்க் பண்ண ஆஃபர் கிடைச்சிருக்கு. அவன் திரும்பி வர எப்படியும் ஒன் இயர் ஆகுமாம். அதான் இன்னைக்கே எனக்கும், அவனுக்கும் மேரேஜ் பண்றதை பத்தி பிக்ஸ் பண்ணிட்டாங்க. நானும் அவன் திரும்பி வருவதுக்குள்ள டிகிரி முடிச்சிருவேன்ல?" எனக் கூறிய படி அமர்ந்தாள் இலியா.


"உன் ஆளோட போட்டோ இருக்கா?" என்று தீவிதா கேட்கவும்,


கைபோனில் இருந்த தன்னுடைய மணவாளன் அஜய்குமாரின் புகைப்படத்தைத் தோழிகளிடம் காண்பித்தாள்.


"உங்க இரண்டு பேருக்கும் ஜோடிப்பொருத்தம் நல்லாயிருக்கு இலியா" என்று மனமார கூறினார்கள்.


"தேங்க்ஸ் டி"


தீவிதாவோ, "ஹே எங்களுக்கு ட்ரீட் வேணும்?" எனக் கேட்டாள்.


மகிழ்ச்சியின் எல்லையில் இருந்த இலியோவோ, "ஓ ஷ்யூர்!!! என்ன ட்ரீட் வேணும்?" எனக் கேட்டாள். 


அவளின் கேள்வியில் ஆச்சரியப்பட்ட ஐஸ்வர்யா, "சினிமாவுக்குப் போலாமா?" என்று அனைவரையும் பார்த்தாள்.


சினிமா என்றதும், உடனே நேத்து பார்த்த படத்தை லஷ்மீகாவிற்கு மூளை நினைவுப்படுத்தவும், 'இன்னொரு படம் பார்த்ததும் போன படத்தின் தாக்கம் நமக்குப் போயிடுமான்னு டெஸ்ட் பண்ணிப் பார்ப்போமா?' என்று மனதிற்குள் எண்ணிவிட்டு, "சினிமாவுக்கு போகலாம். பட்... ஈவினிங்ஷோ வேணா மார்னிங்ஷோ போகலாம். நேத்து மங்கி என்னை வீட்ல மாட்டிவிட்டுட்டான்" என்றாள் சோகமாக...


"ஹாங்... உன் கூடவே வந்து படத்தையும் பார்த்துட்டு உன்னை மாட்டியும் விட்டுட்டானா?" என்று பவனை நினைத்து ஆச்சரியமாக கேட்டான் தர்ஷா. 


"ஆமாடி!!! டாடிக்கு என்னைக்காவது  நாங்க சினிமாவுக்கு போனது தெரிஞ்சு, அவங்களா கேள்வி கேட்கறதுக்குள்ள நம்மளா சொல்லிட்டா கோபப்படமாட்டாங்க. அதான் பவன் முன்கூட்டியே சொல்லி, அவன் தப்பிச்சுக்கிட்டான். ஆனா, டாடி கிட்ட சொல்லிட்டும் போகலாம். பட்... சொல்லிட்டு போனா ஒரு கிக் இருக்காது" என்று தன் அழகிய விழிகளால் கண்சிமிட்டி சிரித்தாள் லஷ்மீகா.


"நாம என்ன தலைவரோட புது படத்துக்கா பர்ஸ்ட்டே, பர்ஸ்ட்ஷோக்கு போனோம். நேத்து பார்த்த படம், நாம சின்னப் பிள்ளையா இருக்கிறப்ப எடுத்த படம். அதை தான் நாம புதுசா பார்க்கிற மாதிரி தியேட்டர்க்குப் போய் பார்த்துருக்கோம். 


பட்... தியேட்டர்ல பார்க்கிற மாதிரி அந்த பீல் டிவியிலையோ, ஃபோன்லையோ பார்க்கிறப்ப வர மாட்டிங்கிது" என்று சினிமா பைத்தியமான ஐஸ்வர்யா உணர்வுப் பூர்வமாகக் கூறினாள்.


"அப்ப... உன்னை மேரேஜ் பண்ணிக்கணும்னா தியேட்டர் வச்சிருக்கணும் போல" என்று எதார்த்தமாக அவளை தர்ஷா கேலி செய்யவும்,


அதற்குச் சிரித்த முகமாக, "எஸ்" என்றாள் ஐஸ்வர்யா.


உடனே தீவிதாவோ, "என்னை மேரேஜ் பண்ணிக்கணும்னா அவன் ஒரு மினி டிபார்ட்மென்ட் ஸ்டோராவது வச்சிருக்கணும்" என்று சொல்லி சிரித்தாள்.


"ஆங்!!! என்னை மேரேஜ் பண்றவன், டெக்ஸ்டைல்ஸ் வச்சிருக்கணும்" என்றாள் தர்ஷா.


இலியாவோ, "எனக்கு, அஜய் என்ன அப்ராடு கூட்டிட்டு போகணும். அது தான் என் ஆசை. அவனும் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னான். ஏன்னா, என் அத்தை என் மம்மியை விட டெரர்" என்று கண்களை விழித்தாள்.


"ஹே லஷ்மீ!!! உனக்கு எப்படிப்பட்ட ஹஸ்பண்ட் வரணும்?" என்று மற்றவர்களின் வாயைப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் கேட்டாள் ஐஸ்வர்யா.


அவளோ... தனது குட்டி முளையை குடைந்து யோசித்துப் பார்த்துவிட்டு, "இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லடி" என்று சன்னமான புன்னகை முகத்துடன் கூறினாள்.


அச்சமயம், கல்லூரியில் மதிய இடைவேளை முடிந்ததற்கான மணியடிக்கவும், அனைவரும் எழுந்து வகுப்பறைக்குள் நுழைந்தார்கள்.


மாலையில் கல்லூரி முடிந்ததும், ஒன்றாகப் பேசியபடி வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த இடத்தை அடைந்தார்கள். 


"இலியா!!! கொஞ்சம் படிப்பிலும் கான்சென்ட்ரேட் பண்ணு என்னடி?" என்று அறிவுரை வழங்கினாள் ஐஸ்வர்யா.


சரி என்பதாய் சிரித்த முகமாக  தலையை ஆட்டினாள் இலியா.


பேச்சின் இடையே எதார்த்தமாக மணியைப் பார்த்த லஷ்மீகா, "ஹே எல்லோருக்கும் பைடி. எனக்கு நேரமாச்சு. பவனை கூப்பிடப் போகணும்" என தோழிகளிடம் கூறிவிட்டு, நான்கு சக்கர வாகனத்தைக் கிளப்பியவள் வேகமாக பள்ளியை அடைந்தாள்.


பள்ளி வளாகத்தில் ஒரு ஓரமாக வாகனத்தை நிறுத்திட்டு, பவனை தேடி அவனது வகுப்பறைக்கு சென்றாள்.


அவனோ, ஒரு கூட்டத்திற்குள் நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.


அவன் பேச்சு சத்தத்தை வைத்து, அவனை கண்டுப்பிடித்தவள் அருகில் சென்று அவனது பெயரை சொல்லி அழைத்தாள். 


"டாங்கி!!! என் ஸ்கூல் பேக்க எடு" என்று அதிகாரமாய் உத்தரவிட்டான் பவன்.


'சரி போனா போகட்டும் சின்னவனாச்சே' என்று மனதிற்குள் எண்ணிவிட்டு, அவனை முறைத்துப் பார்த்தபடி, அவனது பள்ளிபையை தூக்கி தன்னுடைய தோளில் போட்டுக் கொண்டாள் லஷ்மீகா.


"நான் சொன்னேன்ல... என் அக்கா நான் என்ன சொன்னாலும் செய்வா. அவ்வளவு பயம் அவளுக்கு என் மேல?" என்று தன் தோழர்களிடம் பெருமையாய் கூறினான் பவன்.


அதனைக் கேட்ட மறுகணமே, தோளில் மாட்டியிருந்த பையை எடுத்த இடத்திலே வைத்துவிட்டு,  அவன் எடுத்துவிட்டு வரட்டும் எனத் திரும்பி, வாகனத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் லஷ்மீகா.


அவளின் செய்கையில் பவனின் தோழர்கள் அவனை பார்த்துக் கேலியாய்... விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிக்கவும்,


வேகமாக லஷ்மீகாவின் அருகில் ஓடியவன், "நீ என் பேக்கை எடுத்துட்டு வா. நான் முன்னால போறேன்" என்று கத்திவிட்டு வாகனத்தை நோக்கி அவளுக்கு முன்பு ஓடினான் பவன்.


அவனுடைய பள்ளிப் பையை எடுக்காது வாகனத்தை நோக்கி நடந்தாள் லஷ்மீகா.


***




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக